↧
Article 4
↧
வெ ல் லி ங் ட ன்

@
இரண்டு
@
ஹெத்தே மனையின் பரம்பரைப் பூசாரி மாதாகவுடர் சொல்லத் தொடங்கினார் ''இது நம்ம கதெ. நம்ம வம்சம் வளர்ந்த கதெ. தெய்வம் நம்ம ஜனங்களெக் காப்பாத்துன கதெ''
@
மைசூரு ராஜ்ஜியம் தலைமலையில் படகஹள்ளியில் அவர்கள் ஏழு பேர் இருந்தார்கள். அந்தக் காலத்தில் மைசூரு ராஜ்ஜியத்தை எருமை நாடு என்று அழைத்து வந்தார்கள். ஏழு பேருக்கும் ஒரே பெயர்தான் இருந்தது. ஹெத்தப்பா. ஏழு ஹெத்தப்பரும் ஒரே தாயின் கர்ப்ப இருட்டில் குடியிருந்து பூமியின் வெளிச்சத்துக்கு வந்தவர்கள்.கர்ப்பவாசனை அவர்களை ஒன்றாகவே வசிக்க வைத்தது. ஏழு பேரும் தாயின் ஒரே முலைச்சுரப்பில் பசியாறி வளர்ந்தார்கள்.
அவர்களின் உதடுபடாத இன்னொரு முலையைப் பருக தாய்க்கு ஒரு பெண்மாது பிறந்தாள். அவளுக்கு ஏலிங்கி என்று சந்தோஷப் பெயர் விளங்கியது. அவள் மீதும் அதே கர்ப்ப வாசனை வீசியதனால் மாளாத பாசம் வைத்திருந்தார்கள். ஏழு சகோதரர்களுக்கும் கலியாணமாகியிருந்தது. ஆறாவது சகோதரனை மட்டும் காலம் வஞ்சனை செய்திருந்தது. அவனுடைய மனைவி இறந்து போயிருந்தாள்.
ஏழு சகோதரர்களும் ஆறு மனைவிமார்களும் கிருபையுள்ளவர்களாக இருந்தார்கள். வனங்களை செம்மைப் படுத்தி வருடம் முழுவதற்கும் தின்பதற்கான ஆகார வகைகளுக்காக தானியங்களை விதைத்தார்கள். வித்துக்களுடன் அவர்களுடைய வியர்வையும் மண்ணில் விழுந்திருந்தது. அது மண்ணை இளகச் செய்தது.அதனால் பயிர்கள் செழித்து வளர்ந்தன. அவர்களுடைய வாத்சல்யத்தை பார்த்துப் பூரித்து மரங்களும் செடிகளும் காய்களாகவும் கனிகளாகவும் அன்பைக் கொடுத்தன. ஏழு பேரும் ஆறு மனைவியரும் பாடுபட்டு விளைத்த தானியத்தை அளப்பதற்கு பொதுவான ராசிக் கூடையைத்தான் வைத்திருந்தார்கள்.
ஏழு பேர் பிரசாதம் உண்ணுவதற்கும் ஒரே ஒரு சத்து வட்டிலைத்தான் வைத்திருந்தார்கள்.
ஏழு பேரின் சகோதரியை தெய்வம் தன்னுடைய மிக அதிகமான சந்தோஷ முகூர்த்தத்தில் ஜனிக்கச் செய்திருந்தது. அவளுடைய தேகத்தில் பச்சிலைத்தளிர்களின் மிருது இருந்தது. மண்ணிலிருந்து பெருகிய ஊற்றின் முதல் தேக்கத்தில் சிலுசிலுக்கும் ஜலத்தில் பௌர்ணமி ராத்திரியில் பிரதிபலிக்கும் சந்திர பிம்பம்போல அவளுடைய முகம் இருந்தது. அவளுடைய கூந்தல் மழைக்கால மேகம்போல கருமையாகவும் அடர்த்தியாகவும் இருந்தது. அவளுடைய நிழலும் பிரகாசம் கொண்டதாக இருந்தது. வம்சத்திலேயே அதிரூப சுந்தரி அவள்தானென்று எல்லாரும் சம்மதித்திருந்தார்கள். அதனாலேயே ஏழு சகோதரர்களும் அவளைப் பிரியத்துடன் பாதுகாத்து வளர்த்தார்கள். மையெழுதும் கோல் தவறுதலாகப் பட்டு அவளுடைய கண்கள் கலங்கினால் கூட ஏழு சகோதர்களும் தின்னாமலும் குடிக்காமலும் அவளைச் சுற்றி நின்று பதறுவார்கள். அந்த மாதியான சந்தர்ப்பங்களிலெல்லாம் சகோதரிக்கு வேடிக்கையாகச் சிரிக்கத் தோன்றும்.அண்ணன்மார்களின் பாசம்தான் அதற்குக் காரணமென்று அறிந்து வைத்திருந்தாள். அதனால் சிரித்ததில்லை. சிரிப்பும் மனுஷரை சங்கடப்படுத்த ஏதுவானது என்றும் அவள் அறிந்து வைத்திருந்தாள்.
ஒரு அந்திப் பொழுதில் துர் நிமித்தம் சம்பவிக்கும் வரையிலும் அவர்களுடைய எல்லா நாட்களும் சுப தினங்களாகவே போய்க்கொண்டிருந்தன. ஏழு பேரின் சகோதரி நியமம்போல அன்றைக்கு மாலை பசுக்களைக் கறக்கப் போகாமலிருந்திருந்தால் அந்த சுப தினங்கள் இருள் மூடாமல் இருந்திருக்கும்.அப்படி இருந்தால் அதன் பெயர் ஜீவிதமா? துயரங்களோ கஷ்டங்களோ இல்லாமற் போனால் ஜீவிதத்தை நடத்தி வைப்பது தெய்வம் என்றாகாதே?
தொழுவத்தில் கட்டிப் போட்டிருந்த பசுக்கள் அவள் முற்றத்திலிறங்கியதும் கத்தத் தொடங்கின. மடியின் கனம் அந்தக் கத்தலில் புரிந்தது. கன்றுகளும் பால்குடித் தவிப்பில் 'ம்மா ' என்று கத்தின. சகோதரி ஆதுரமான குரலில் 'பர்த்தினு பர்த்தினு' என்று சொல்லிகொண்டே தொழுவத்தை நெருங்கினாள். முதல் முளையில் கட்டியிருந்த பசு உடம்பை வளைத்து அவளைப் பார்த்தது. வாலை ஒருமுறை சுழற்றி வீசி தலையைக் குலுக்கி தயாராக இருப்பதைத் தெரிவித்தது. சகோதரி மண்கலத்தை இடுப்பில் இடுக்கியபடி மூக்கு விடைக்கத் துள்ளிக்கொண்டிருந்த கன்றுக்குட்டியை அவிழ்த்து விட்டாள்.அது 'ம்மா 'என்று தாவி தாய்ப்பசுவிடம் ஓடியது. அகிட்டில் முட்டி இழுத்து பால் குடிக்கத் தொடங்கியது. கன்று தாயின் மடிக்காம்புகளை உறிஞ்சுவதை கனிவுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் சகோதரி. வயிறு நிரம்பியதும் உடம்பைச் சிலிர்த்துக்கொண்டு நின்றது. சகோதரி குத்தவைத்து உட்கார்ந்து பால்கறக்க ஆயத்தமானாள். அந்த நேரம் பார்த்துக் கன்று முதுகை நெளித்து ஓடத் தொடங்கியது. பால் கறக்க உட்கார்ந்த சகோதரி கலத்தைக் கீழே வைத்துவிட்டு கன்றைப் பிடித்துக் கட்டக் கயிற்றைத் தேடி எழுந்தாள். அதன் கழுத்தில் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டிருப்பது ஞாபகம் வந்தது. கயிற்றை அவிழ்த்தெடுக்க மரத்தடியை நோக்கிப் போவதற்குள் கன்று கைக்கெட்டாத தூரத்தில் நின்று துள்ளிகொண்டிருந்தது. ''ஆட்டா மாடுதியா காரு ?'' என்று செல்லமாகக் கேட்டுக்கொண்டு கூந்தலை உலுக்கினாள். மழைமேகம்போல கருநிறமும் சுருட்டை இல்லாத நீளமும் பளபளப்புமாக இருந்த அவளுடைய
கூந்தல் காற்றில் பறந்தது. மயிரிழைகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து புரிகளாயின. புரிகள் ஒன்று சேர்ந்து கயிறாயின. அந்தக் கூந்தல் கயிறு கறுப்பு மின்னல்போல அந்தரத்தில் ஊர்ந்துபோய் கன்றின் கழுத்தில் சுற்றிக்கொண்டது. கன்று துள்ளலடங்கி நின்றது. சகோதரி தலையை அசைத்து கயிறை இழுத்தாள். அதில் இழுபட்டு கன்று அவளருகில் வந்தது. '' ஓடுதியா '' என்று கேட்டுக்கொண்டு அதன் கழுத்தை வருடிக் கொடுத்தாள்.மனைக்குள்ளிருந்து வாசலுக்கு வந்த மூத்த ஹெத்தப்பா இந்தக் காட்சியைப் பார்த்து அதிசயப்பட்டு நின்றார். ''அண்ணா, அந்தப் பசுவைக் கறந்து விடு. நான் இதைக் கட்டி ப்போடட்டும்'' என்றாள்
சகோதரி. சகோதரர் கலத்தை எடுத்து பசுவின் காலடியில் குந்தினார். சொற்ப நிமிஷங்களுக்கு முன்பு பார்த்த காட்சி அவரை வாயடைக்கப் பன்ணியிருந்தது.அதிசயமான அந்தக் காட்சி என்னவோ அபாயத்தையும் கொண்டுவரப் போகிறது என்று அவருக்குப் பட்டது.அவருடைய ஊகம் பொய்யானதல்ல.
இந்த அதிசய சம்பவத்தை தூரத்திலிருந்து இன்னொரு பிறவியும் பார்த்துக் கொண்டிருந்தது.
மாறுவேடத்தில் வனத்துக்குள்ளே குதியையில் சவாரி செய்துகொண்டிருந்த துருக்க ராஜாவின் கண்ணில் காட்சி விழுந்தது. அவர் வாயை பிளந்து இந்த அதிசயத்தைப் பார்த்தார். அவர் பார்க்கிறபோது கருங்கூந்தல் காற்றில் நெளிந்து கன்றின் கழுத்தில் விழுந்து கட்டிக் கொண்டிருந்தது. அந்தக் கூந்தல் புறப்பட்ட சிரசு மட்டுமே அவருடைய பார்வைக்குத் தெரிந்தது. திரும்பி நிற்கிற அந்த சிரசுக்குரியவள் எப்படி இருப்பாள் என்று யோசனை செய்தார். மழைத்தாரைபோல சுருளே இல்லாத கூந்தலின் உடைமைக்காரி ரூபவதியாகத்தான் இருக்கவேண்டுமென்று அவர் மனம் சொன்னது. அவளானால் தான் நிற்கும் திசைப் பக்கம் திரும்பாமலிருக்கிறாளே என்று உள்ளுக்குள் சிணுங்கிக்கொண்டிருந்தார். அவருடைய உதடுகள் 'ஸ்த்ரீயே , முகங்காட்டு' என்று பிரார்த்தனைபோல முணுமுணுத்துக் கொண்டிருந்தன. விநாடிகள் விரயமாகிக் கொண்டிருந்தன. அவள் திரும்பவில்லை. முதுகைக் காட்டியபடியே
கன்றுக்குட்டியை இழுத்துப் போவதையும் அதை மரத்தில் கட்டுவதையும் தவிப்புடன் பார்த்தார். அவருடைய தத்தளிப்பு அதிகமாகிக் கொண்டே வந்தபோது அவருடைய வலது பாதம் ஆத்திரத்துடன் குதிரையின் விலாவில் மோதியது. குதிரை உடல் சிலிர்த்து முன்னங்கால்களைத் தூக்கி 'பிஹிஹீ..ஹீ' என்று கனைத்ததும் அவள் திரும்பியதும் ஒரே விநாடியில் சம்பவித்தன. துருக்க ராஜாவின் கண்கள் தெறித்து விழுந்து விடுவதுபோல அகன்றன. அவரால் நம்பமுடியவில்லை. கானகக் கிராமத்துக்குள்ளே இப்படி ஒரு சவுந்தரியவதியா என்று திகைத்தார். அவளுடைய தேகத்திலிருந்து வீசிய ஜோதி அவருடைய
விழிகளை இருட்டாக்கியது. 'இறைவனே, இது என்ன அற்புதம். யாரும் காணாமல் பூத்திருக்கும் காட்டு ரோஜாவுக்குத் துல்லியமானதாக இருக்கிறதே இவள்
அழகு ' என்று பரிதவித்தார். அவருடைய நாடிகளில் ரத்தம் வேட்கையுடன் ஓடியது. மோக ஜுரம்கொண்டு தேகம் நடுங்கியது.
குதிரையை முடுக்கி அவள் இருக்கும் முற்றத்தில் போய் நிறுத்தினார். ஏழு பேரின் சகோதரி அன்னிய புருஷனைப் பார்த்து வெலவெலப்புடன் ''அண்ணா''என்று உரக்கக் கத்தினாள். பசுவைக் கறந்து கொண்டிருந்த மூத்தவர் திரும்பிப் பார்த்ததும் பயந்தார். பால் கலத்தை தரையில் வைத்து விட்டு உடம்பை வளைத்து முன்னால் வந்தார். துருக்கராஜா தங்கள் மனையின் முன்னால் நிற்பது ஏனென்று கலங்கிக் கொண்டிருந்தார். ''தாயி, நீனு ஒளகே ஹோகு '' என்று சகோதரியிடம் சொன்னார். அவள் ஒரு நொடி நின்று மலங்க விழித்தாள். குதிரை மேல் உட்கார்ந்திருக்கும் புருஷனைப் பார்த்தாள். அந்த உடையலங்காரமும்
தோரணையும் அவளுக்குச் சிரிப்பூட்டின. சிரிப்பை அடக்கிக்கொண்டு வீட்டுக்குள்ளே போகலானாள். அவளுடைய தேகம் ஒசிந்து நகருவதைப் பார்த்தும் துருக்க ராஜாவின் மனதுக்குள் அக்கினி மூண்டது. மூத்தவரைப் பார்த்து துருக்க பாஷையில் '' இது யார்? நீங்கள் யார்?'' என்று கேட்டார்.
அவர் பேசிய பாஷையின் அர்த்தம் புரியாமல் பயத்துடன் '' என்ன ஹெசரு ஹெத்தப்பா'' என்றார். துருக்கராஜாவுக்கும் மூத்தவர் சொன்னது புரியவில்லை.மறுபடியும் துருக்க பாஷையில் என்னமோ கேட்டார். அதற்குள் வீட்டுக்குள்ளே போன சகோதரி சொன்னதைக் கேட்டு மற்ற சகோதரர்களும் அங்கே வந்தார்கள். நடப்பது என்னவென்று விளங்காமல் அவர்களும் நின்று விழித்தார்கள். ராஜாவுக்கு இவர்களிடம் என்ன சொல்லிப் புரியவைப்பது என்ற தர்மசங்கடம் வந்தது.சகோதரர்களுக்கும் ராஜா சொல்வது என்னவென்று புரியாமல் தடுமாற்றமாக இருந்தது. அதே சமயம் ராஜாவின் அங்க ரட்சகன் இன்னொரு குதிரையில்
அங்கே வந்து சேர்ந்தான்.ராஜா அவனிடம் அவர்கள் பாஷையில் உத்தரவிட்டார். அவன் வாய்பொத்திக் கேட்டிருந்து விட்டு சகோதரர்களைப் பார்த்து ''இதி நிம்ம ஹட்டியா?'' என்றான்.சகோதரர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களுடைய பாஷையை பிறத்தியான் ஒருவன் பேசுவதைக் கேட்க சந்தோஷமாகவும் இருந்தது. மூத்தவர் ''ஹா, இது நம்ம ஹட்டி'' என்று பதில் சொன்னார். ''ஈ ஹெண்ணு எவரு?'' என்று கேட்டான். '' நம்ம தங்கெ'' என்றார் .
அங்கரட்சகன் மறுபடியும் வாயைப் பொத்திக்கொண்டு ராஜாவிடம் பேசினான். ராஜா உத்தரவுபோடும் தோரணையில் அவனிடம் சில விநாடிகள் பேசினார்.''ஹாங் ஹுசூர் ,ஹாங் ஹுசூர் '' என்று மட்டுமே அவன் சொல்லிக் கொண்டிருந்தான். கடைசியில் சகோதரர்கள் பக்கமாகத் திரும்பினான். அவன் சொன்னதைக் கேட்டதும் அவர்கள் நடுநடுங்கிப் போனார்கள். ஏழு பேரின் கண்களிலிருந்தும் நீர் வழிந்தது.ஏழுபேரும் ஒரே சமயத்தில் மண்டியிட்டு உட்கார்ந்து மன்றாடினார்கள். அவர்கள் கெஞ்சுவதைப் பொருட்படுத்தாமல் துருக்கராஜா அங்கரட்சகனிடம் முத்தாய்ப்பாக எதையோ சொல்லிவிட்டு குதிரையின்
விலாவில் உதைத்தார். ஹூங்காரம் எழுப்பிக்கொண்டு குதிரை வேகமாகப் பாய்ந்தது. அது கிளறி விட்ட புழுதிப்படலம் அந்திச் சூரியனின் கதிர்கள் பட்டு தரையில் மேகமாகப் புரண்டது. மரக்கிளைகளிலிருந்து சில கரியன் சிட்டாக்களும் காக்கைகளும் படபடத்துப் பறந்தன. அந்த சத்தத்தில் வெருண்ட பசுக்கள் கனைத்துக் கத்தின. குதிரை மேல் உட்கார்ந்த படியே '' சொன்னதை மறக்க வேண்டாம். மறந்தால் உயிர் பிழைக்க மாட்டீர்கள்'' என்று எச்சரிக்கை செய்தான். அவனுடைய குதிரையும் புழுதி மேகத்தை உண்டு பண்ணிக்கொண்டு ஓடியது.
துருக்க ராஜாவுக்கு ஏழுபேரின் சகோதரியைக் கண்டதும் இஷ்டமாகி விட்டது. அவளை விவாகம் செய்துகொள்ள விரும்புகிறார். அதுவும் உடனடியாகச் செய்து கொள்ள விரும்புகிறார். அதனால் நாளை பொழுது விடிந்ததும் சகோதரியை ஸ்நானம் செய்வித்து அலங்காரம் பண்ணி தயாராக வைக்கவேண்டும். ராஜாவின் சிப்பாய்கள் வந்து அவளை அரண்மனைக்கு அழைத்துச் செல்வார்கள். ராஜா அவளை ரோஜாப் பூவைப் போலப் பார்த்துக் கொள்ளுவார். தவிரவும் இவ்வளவு சுந்தராங்கியான பெண் ராஜாவைத் தவிர வேறு யாருக்குச் சொந்தமாக முடியும்? இது ராஜாவின் உத்தரவு. அதில் பிசகினால் உங்கள் வம்சமே
இல்லாமல் போய்விடும்.ஜாக்கிரதை.
இதுதான் அங்கரட்சகன் மூலமாகத் துருக்க ராஜா அவர்களிடம் தெரிவித்தது. கலக்கமடைந்த ஏழு சகோதரர்களும் ஆறு மனைவியரும் கூடியிருந்துஆலோசனை செய்தார்கள். ராஜாவின் இச்சை அநியாயமானதாக இருக்கிறதே?என்ன செய்வது? இந்த இக்கட்டிலிருந்து எப்படித் தப்புவது? என்று யோசித்தார்கள். லிங்கத்தை ஆராதனை செய்யும் நாம் எப்படி துருக்க ராஜாவுக்கு நமது பெண்ணைக் கொடுப்பது? அது தெய்வ நிந்தனையாகுமே? என்று புலம்பினார்கள்.
தின்னாமலும் குடிக்காமலும் இப்படி உட்கார்ந்து யோசிப்பதில் பிரயோஜமில்லை என்றார் மூத்தவர். ராஜாவின் தண்டனையிலிருந்து தப்ப ஒரே ஒரு மார்க்கம்தான் அவர்கள் முன்னால் இருந்தது.குலத்துக்கு அழிவு வராத படிக் காப்பாற்ற வேண்டுமென்றால் இதைத் தவிர வேறு உபாயம் அவர்களுக்குப் புலப்படவில்லை.முடிவாக அன்றைக்கு ராத்திரியே நடு இருளில் புறப்பட்டு சோலைக்குள் புகுந்து ராஜாவின் கன்ணுக்கோ சேனையின் கண்ணுக்கோ எட்டாத தூரம் போய் விட வேண்டும் என்று தீர்மானித்தார்கள். ஒரே கர்ப்பத்தின் கவிச்சையைப் பங்குபோட்டுக்கொண்டவர்கள் என்பதனால் அவர்களுக்கு மத்தியில் வேறே யோசனை இருக்கவில்லை.
வழக்கமாக நெருப்பு அணைந்து குளிரத் தொடங்குகிற அகாலத்தில் அவர்கள் வீட்டு அடுப்பு எரியத் தொடங்கியது. பெண்கள் மூன்று வேளைக்கு உண்பதற்கான கட்டுச் சாதத்தை சமைத்தார்கள். வன சஞ்சாரத்தில் அது தீர்ந்துபோனால் காய்கனிகளைத் தின்று ஜீவிக்கலாம் என்று மூத்தவர் சொன்னதை எல்லாரும் ஒத்துக்கொண்டார்கள்.அன்றைய இரவு நடு ஜாமத்திலேயே வீட்டை விட்டுப் புறப்பட்டார்கள். புறப்படுகையில் குல தெய்வமான லிங்கத்தையும் ராசிக் கூடையையும் விசேஷ நாளில் பிரசாதம் உன்ணும் சத்து வட்டிலையும் மறக்காமல் எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் வீட்டை விட்டிறங்கும்போது தொழுவத்தில் கட்டியிருந்த பசுக்களும் எருமைகளும் தீனமாகக் கதறின. அவற்றின் கன்றுகள் காதுகளை அசைக்க மறந்து ஏக்கத்துடன் பார்த்தன. சகோதரி ஓடிப்போய் அவை ஒவ்வொன்றின் கழுத்தையும் வருடிக் கொடுத்து விட்டு வந்தாள். அவளுடைய காலடிச் சத்தம் கேட்டு மரக் கூடுகளில் நித்திரை செய்து கொண்டிருந்த பட்சிகள் வெருண்டு விழித்து கீச்சிட்டன. அந்த வாசலில் தேங்கி நின்ற துக்கத்தைப் பார்க்கச் சகிக்காமல் நிலா மேகங்களுக்குப் பின்னால்
விலகியது.
அந்த துக்கத்தைத் தாள முடியாமலும் யாராவது அறிந்து விடுவார்கள் என்ற காப்ராவாலும் அவர்கள் காட்டு வழியில் ஒருவர் பின் ஒருவராக சத்தமின்றி நடந்தார்கள். சோலைகளுக்குள்ளாகவும் வனங்களைத் தாண்டியும் சுமார் நூறு மைல் நடந்த பிறகு எல்லாரும் களைப்படைந்து விட்டார்கள். செடிகளின் மறைவில் இளைப்பாற உட்கார்ந்தார்கள். கண்ணுக்கெட்டாத தூரம் வந்து விட்டோம் என்ற நம்பிக்கை வந்திருந்தது. ஒருவரோடு ஒருவர் முகம் பார்த்துப் பேச ஆரம்பித்தார்கள். அப்போதுதான் கவனப்பிசகாகச் செய்திருந்த புத்திகெட்ட காரியம் அவர்களுடைய ஞாபகத்துக்கு வந்தது. புறப்படுகிற அவசரத்தில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த பெண் குழந்தையை விட்டுவிட்டு வந்திருந்தது உறைத்தது. குழந்தையின் தாய் அலற அவளுடன் சேர்ந்து பெண்கள் எல்லாரும் துக்கித்து அழுது புலம்பினார்கள்.
ஆண்கள் கலந்து யோசித்தார்கள். திரும்பப்போய் எடுத்துவரப் பார்த்தாலும் விடியற்காலை ஆகிவிடும். யாராவது கண்டுவிட்டால் அதுவும் ஆபத்து.வேறு வழியில்லை. நாமெல்லாருமே இன்றைக்கோ நாளைக்கோ காட்டுக்குள் விழுந்து மடியப் போகிறோம். அந்தச் சிறுபெண்ணாவது பிழைக்கட்டும். பொழுது விடிந்தால் எப்படியும் வீடு காலியாக இருப்பதை யாராவது பார்ப்பார்கள்.பக்கத்தில் வந்து பார்த்து குழந்தையை எடுப்பார்கள். கொண்டுபோய்
வளர்ப்பார்கள். இனி அந்தப் பெண் மாதை மறந்து விடுவோம் என்று தேற்றிக்கொண்டார்கள். மறந்து விடுவோம் என்று தீர்மானித்ததுபோலவே வேறு ஒரு முடிவையும் செய்தார்கள். இனி வம்சத்தில் பிறக்கிற எந்தக் குழந்தையையும் தொட்டிலில் கிடத்துவதில்லை என்பது அந்த முடிவு.
அப்படியாக அவர்கள் மூன்று இரவும் மூன்று பகலும் நடந்து வெகுதூரம் வந்திருந்தார்கள்.
இதற்கிடையில் துருக்க ராஜா தான் இச்சைப்பட்ட பெண்ணை அழைத்து வரும்படி சிப்பாய்களையும் பிரதானிகளையும் அனுப்பி வைத்தார். அவர்கள் ஹள்ளியில் வந்து பார்க்கும்போது வீடுகள் மூடிக்கிடந்தன. பாழ் வீடாகக் கிடக்கிறது என்று அவர்கள் வந்து சொன்ன சேதி ராஜாவை ஆத்திரமடையச் செய்தது.'அவர்கள் எங்கே இருந்தாலும் தேடிப்பிடித்து என் முன்னால் கொண்டுவரவேண்டும்' என்று கட்டளையிட்டார். சிப்பாய்கள் நாலாப் பக்கமும் அவர்களைத் தேடி அலைந்தார்கள். மலைப் பிரதேசத்தின் வடக்கே மோயார் ஆற்றின் அக்கரையில் அவர்கள் இளைப்பாறிக் கொண்டிருப்பது சிப்பாய்களின் கண்களில் பட்டது. கண்டுபிடித்து விட்டோம் என்ற ஆனந்தத்துடன் அதி வேகமாக ஆற்றை நெருங்கி வந்தார்கள். இக்கரையிலிருந்தவர்களும் காடு அசாதாரணமாக அசைவதைப் பார்த்து சிப்பாய்களின் நடமாட்டத்தைக் கண்டுகொண்டார்கள். 'மோசம் போனோமே' என்று திகிலடைந்தார்கள். என்ன செய்வது என்று ஏங்கினார்கள். ஏழு சகோதரர்களில் மூத்தவர் தோளின் மேல் வைத்திருந்த லிங்கத்தை நினைத்து உருகினார். 'எங்களுக்கு ஆபத்து வந்துவிட்டது. எங்களைக் காப்பது உமது கடமை. இந்த அத்துவானக் காட்டில் எங்களுக்கு உம்மையன்றி வேறு திக்கில்லை' என்று ஒரே மனதுடன் வேண்டினார். சகோதரர்களும் அவர்களது மனைவியரும் சகோதரியும் பீதியுடன் பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள்.
சிப்பாய்கள் ஆற்றங்கரையில் நின்று கும்மாளமாக சத்தம்போட்டுக்கொண்டு நீரில் கால்வைத்தார்கள். கரையைத் தாண்டி ஆற்றுக்குள் கால்வாசி தூரம் வந்திருப்பார்கள். அந்த விநாடியில் ஆறு சீற்றம் கொண்டு பொங்கியது. முழங்காலளவு தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் வெள்ளம் பிரவாகமெடுத்துப் பாய்ந்தது. இக்கரையிலிருக்கிறவர்களுக்கு ஜலத்தைத் தவிர அந்தப் பக்கம் இருக்கிற எதுவும் தெரியவில்லை. யானைகள் ஒன்றுக்குப் பின்னால் ஒன்று நகர்வதுபோல தண்ணீர் உயரமாக ஓடிக்கொண்டிருந்தது. கங்கா தேவி ஆவேசத்துடன் தலைவிரி கோலமாக ஓடுவதை அவர்கள் பார்த்தார்கள். எல்லாரும் கல்லும் புல்லும் இறைந்து கிடந்த அந்த மண்ணிலேயே தெண்டனிட்டு கண்களில் நீர் வழிய தெய்வத்தைக் கும்பிட்டார்கள். அகதிகளான அவர்களை துரத்தி வந்த சிப்பாய்களில் அநேகம் பேரை வாரி எடுத்துக்கொண்டு போயிருந்தன கங்கா தேவியின் நீர்க்கரங்கள். மிஞ்சின ஒன்றிரண்டு சிப்பாய்கள் விசித்திர சம்பவத்தை துருக்க ராஜாவிடம் அறிக்கை செய்ய அச்சத்துடன் ஓடினார்கள்.
காடுகளிலும் மலைகளிலும் நாள்கணக்கில் அலைந்து திரிந்து காரை மரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்கும் வனத்தை அடைந்தார்கள். சுமந்து வந்த சாமான்களை இறக்கி வைத்து காரை மரங்களின் நிழலில் இளைப்பாறினார்கள். அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்துக்கு நேர்முகமாக மலைத் தொடர்கள் நிமிர்ந்து நின்றிருந்தன. பூமிக்கு வேலிபோட்டது போல இருந்தன மலைகள். அதற்கு அப்பால் எதுவும் இருக்காது என்று சொல்லும்படியாக உயர்ந்து நின்றிருந்தன. தொடரின் ஒரு மலையைவிட இன்னொரு மலை உயரம். அடுத்தது அதைவிட உயரம். அடுத்தது இன்னும் உயரம்.அதற்கடுத்தது இன்னும் இன்னும் உயரம் என்று நீண்டிருந்த மலைகளின் மீது மேகங்கள் உரசிக் கலந்து போவதை அவர்கள் பார்த்தார்கள். மலையில் சரிவிலும் உச்சியிலும் மரங்களும் செடிகளும் தழைத்திருந்தன. வெயில் காங்கையால் அந்த மலைகள் நீல நிறமாகத் தோன்றின.சகோதரர்களில் மூத்தவர் சொன்னார் '' அதோ தெரிகிற நீலமலையில் ஏறி அந்த வனத்தில் ஜீவித்துவருவோம்''. எல்லாரும் ஒத்துக்கொண்டு மலையேறினார்கள்.
அவர்கள் வந்து சேர்ந்த இடம் மேட்டுசமவெளியாக இருந்தது. மலைகளுக்கு நடுவில் தானியமடிக்கும் களம்போல இருந்த அந்த இடத்தில் வசிக்கத்
தீர்மானித்தார்கள். அந்த இடத்துக்குப் பேட்டிலாடாஎன்று பெயரும் வைத்தார்கள்.
சில காலம் அங்கே வசித்ததில் அவர்களுடைய பயம் விலகியிருந்தது. இனி ராஜாவைப் பற்றிய பயம் இல்லை. அதனால் விவசாயம் செய்தும் மாடுகளையும் எருமைகளையும் வளர்த்தியும் ஜீவிக்கலாம் என்ற நம்பிக்கை வந்திருந்தது. தனித்தனியாக ஹட்டிகள் கட்டி வாழலாம் என்று ஆசைப்பட்டார்கள். அப்படியான ஒரு நாள் வனத்தில் அகஸ்மாத்தாக ஒரு கலைமான் அவர்கள் கண்ணுக்குப் புலப்பட்டது. ஏழு சகோதரர்களில் ஐந்து பேர் அந்த மானைப்
பிடித்துக் கொள்வோம் என்று அதன் பின்னால் ஓடினார்கள்.இளையவர்களில் ஒருவன் மூத்தவர் கூடவே நின்றான். இருட்டுக்குள் வெளிச்சம் துளைத்துப் போகிற வேகத்தில் காட்டுக்குள்ளே மான் ஓடியது. அதைத் துரத்திக்கொண்டு ஓடிய ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் அதைப் பிடிக்க முடியாமல் களைத்துப் போய் நின்றார்கள். ஒவ்வொருவரும் வனத்தில் அவரவர் நின்ற இடங்களில் மயங்கி விழுந்து அப்படியே உறங்கிப் போனார்கள். மறுநாள் விழித்துப் பார்க்கையில்தான் ஒவ்வொருவருக்கும் சகோதரர்களைப் பிரிந்து தனியாகிப் போனது தெரியவந்தது. வனங்களில் தட்டுத் தடுமாறி தனித்தனியாக பேட்டிலாடாவுக்கு வந்து
சேர்ந்தார்கள். நான்கு பேரால் மட்டுந்தான் அப்படித் திரும்ப முடிந்தது. இரண்டு மூன்று நாட்களாகியும் ஒருவன் வரவேயில்லை. ஆறு பேரும் துக்கத்துடன் அவன் காணாமற் போனதை ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.
ஒண்டியாக வனாந்தரத்தில் மானைத் துரத்திப் போனவர்கள் கலைத்து விழுந்தது தெய்வச் செயல் என்றார் மூத்தவர். அவர்கள் விழுந்த இடங்களை கடவுள் காண்பித்த இடமென்று பாவிக்க வேண்டுமென்றும் அந்த இடங்களிலேயே போய் அவர்கள் பிழைக்கலாமென்றும் சொன்னார். அவருடைய அனுமதி பெற்று ஒவ்வொருவனும் அந்தந்த இடங்களில் வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.முதலில் குடிசைகள் போட்டார்கள். பூமியில் பாடுபட்டதன் பலன் விளைந்து மனைகள் எழும்பின.ஹட்டிகள் உண்டாயின. ஹட்டிகள் பெருகி ஊர்களாயின. ஊர்கள் சேர்ந்து சீமைகளாயின. தோடநாடு சீமே.பொறங்காடு சீமே. மேக்குநாடு சீமே. குந்தே சீமே. மலைகளின் சரிவுகளிலும் மேட்டுச்சமவெளிகளிலும் ஆறுகளோடும் பள்ளத்தாக்குகளிலும் ஜனங்கள் பரவினார்கள்.அப்படியாக வம்சம் பல்கிப் பெருகியது.
↧
↧
சுஜாதா விருது - கவிதைக்கு
↧
வாசிப்பு
@
காத்திருக்க வேறிடமின்றி
நூலகத்தை நீங்கள் தேர்ந்தது
இயல்பானது -
காலத்தைக் கடந்து
வெளியை மீறி
மொழியைத் துறந்து கேட்கும்
குரலுக்காகவோ
அல்லது
காகிதமணத்தின் போதைக்காகவோ
அல்லது
அலுத்துச் சுழலும் மின்விசிறியின்
சங்கீத மீட்டலுக்காகவோ
அல்லது
நூலகத்தில் கவிந்திருக்கும்
நிர்ப்பந்த அமைதிக்காகவோ
நீங்கள் நூலகத்தைத் தேர்ந்திருக்கலாம்.
காலியிருக்கைகள் பல கிடக்க
முந்திய விநாடியில்
ஆளெழுந்துபோன
நாற்காலையைத் தேர்ந்ததும்
இயல்பானது -
காற்றோட்டமான இடமென்பதாலோ
அல்லது
முன்னவர் மிச்சமாக்கிய
மனிதச் சூட்டை உணர்வதற்காகவோ
அல்லது
பின்னல் அவிழ்ந்த ஆசனத்தை
யோசனையுடன் முடைவதற்காகவோ
அல்லது
கற்பனைக்கு உகந்த தோற்றத்தில் உட்கார்ந்து
மனதுக்குள் ரசிப்பதற்காகவோ
நீங்கள் நாற்காலியைத் தேர்ந்திருக்கலாம்.
நூலகத்தில் நீங்கள் அமர்ந்திருக்கும் மேஜைமேல்
முன்பு இருந்தவர்
பாதி வாசித்துக் குப்புறக் கிடத்திய
புத்தகத்தை எடுத்ததும்
அவர் விட்டுப்போன பக்கத்தில்
வாசிப்பைத் தொடங்கியதும்
இயல்பானது.
எனது சந்தேகம்
அவர் எங்கே நிறுத்தினார் என்பதை
நீங்கள் அறிவீர்களா?
இரண்டு பக்கங்களில்
இரண்டு பக்கங்களிலுமுள்ள பத்திகளில்
இரண்டு பக்கப் பத்திகளின் வாக்கியங்களில்
எங்கே அவரது நிறுத்தம்?
அங்கிருந்து நீங்கள் தொடங்குவீர்களா?
அல்லது
நீங்களும் மேஜைமேல்
குப்புறக்கிடத்திப் போனால்
அடுத்தவர் எங்கிருந்து தொடங்குவார்?
ஒரு புத்தகம்
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு புத்தகமாவது
எவ்வளவு இயல்பானது.
@
12:22 PM 5/25/2006
↧
Article 0
ஏப்ரல் 28 - சர்வதேச தவளைகள் பாதுகாப்பு நாள்
தவளை மொழி
@
எனது புறநகர்க் குடியிருப்பு
வயல்களின் சமாதி என்று
நினைவுபடுத்தியவை தவளைகளே
மழைவாசனை
எப்படியோ தெரிந்து விடுகிறது தவளைகளுக்கு
முதல்துளி விழுந்ததும்
எங்கிருந்தோ வந்து விடுகின்றன
யாரும் அவற்றிடம் கேள்வி கேட்பதில்லை
எனினும்
ஓயாமல் பதில் சொல்லிக் கொண்டேயிருக்கின்றன
க்ராக்... க்ராக்...க்ராக்...க்ராக்
சாஸ்திரக் குரலில் சுலோகம் சொல்லி
மழையிரவுகளைத்
தள்ளி நகர்த்துபவை
தவளைகள் மட்டுமே
மழை மறைந்த பொழுதுகளில்
கட்டிடங்களில் ஆழ இருளில் மூச்சுத் திணறும்
விதைகளுக்காக
சுற்றுச்சூழல் பாதுகாப்பாளனின் பதற்றத்துடன் வாதடுகின்றன
மண்ணை விரும்பும் ஈரஜீவிகள்
தவளைகள் தவிர வேறில்லை
எப்போதும் தவளைகள்
பாடம் எனக்கு
முன்பு
ஆய்வுக்கூட மேஜையில்
மல்லாந்து மயங்கிய ஒரு தவளை
கற்றுக் கொடுத்தது
உயிரின் விஞ்ஞானத்தை
மரணத்தின் அமைதியை
இப்போது
வாசற்படி தாண்டிவந்த ஒரு தவளை
கற்றுக் கொடுக்கிறது -
பிழைப்பின் சூத்திரத்தை
'' நாங்கள்
நீர்ல் எதார்த்தவாதிகள்
நிலத்தில் சந்தர்ப்பவாதிகள்''
(1997)
↧
↧
Article 10
↧
ஆப்பிள் தருணங்கள்
(இத்தாலிய நடிகை மோனிகா பெலூசிக்கு)
"Of all the girls who asked me to remember them,
the only one I remembered is the one who did not ask."
ஆப்பிள் ஒரு சொல்
எச்சரிக்கையை மீறி ஏவாள் கடித்த ஆப்பிளின்
இரண்டாவது கடி என்னுடையது
அன்று 'விடுதலை' என்ற வார்த்தை உருவானது
ஆப்பிள் ஒரு பொருள்
நாணில் பொருந்தி விறைத்திருந்த
அம்பின் இலக்கான ஆப்பிள்
நம்பிக்கையுடன் கொந்தளித்த
என் தலைமீதுதான் இருந்தது
அப்போது துணிவச்சம் என்ற பொருள் திரண்டது
ஆப்பிள் ஒரு தாவரம்
தனக்குள் உறங்கும் விதைகளில்
ஒரு தோட்டத்தைக் கனவு காணும் தருணத்தில்
காற்றின் குறும்புக் கைகளால் உலுக்கப்பட்டு
என் மடியில்தான் வீழ்ந்தது
அதிலிருந்து ஞானம் துளிர்த்துக் கிளைத்தது.
ஆப்பிள் ஒரு பொய்
நோயாளிக்குச் சிகிச்சையளிக்க வரும்
மருத்துவரின் கைப்பையில் வதங்கிக் கிடந்தது
அங்கிருந்தே சரீரம் தன்னை ஆராய்ந்தது
ஆப்பிள் ஓர் உண்மை
பூமியின் முதல் பழமே
பூமியைப்போலிருப்பதை நானே கண்டடைந்தேன்
அந்தக் கணம் முதல்தான் உலகம் சுழலத் தொடங்கியது
மலினா ஸ்கார்தியா
நீதிமன்ற பெஞ்சில் அமரும்போது
நிர்வாணப் பழம்
மெல்ல மெல்ல மிதந்து இறங்குவதையும் பார்த்தேன்
அந்த நொடியில் புரிந்தது
ஆப்பிள் ஒரு பெண்.
இத்தாலிய இயக்குநர் கியூசெப்பே டோர்னடோரேயின் ' மலீனா' படத்தில் இடம் பெறும் உரையாடல். மலீனாவாகநடித்திருப்பவர் நடிகை மோனிகா பெலூசி.
↧
நல்வரவு, மார்க்கேஸ்
அனைவருக்கும் வணக்கம். இந்த அரங்கில் இருக்கும் கூட்டத்தை தமிழ் வாசகர்களின் பிரதிநிதிகளாக எடுத்துக் கொண்டே பேசவிரும்புகிறேன்.முதலில் இரண்டு விஷயங்களுக்காக மன்னிப்புத் தெரிவித்து விட்டுப் பேச்சைத் தொடரலாம் என்று நினைக்கிறேன்.
காப்ரியேல் கார்சியா மார்க்கேசின் நாவல் 'தனிமையின் நூறு ஆண்டுகள்' நாவலின் தமிழாக்கம் ஏப்ரல் மாதம் இறுதியில் வெளியாகும் என்று காலச் சுவடு பதிப்பகம் அறிவித்திருந்தது. கிட்டத்தட்ட முந்நூறுக்கும் மேற்பட்ட வாசகர்கள் முன்பதிவு செய்திருந்தார்கள். ஆனால் கொஞ்சம் தாமதமாக ஜூன் இறுதியில் இன்றுதான் வெளியிடப்படுகிறது. தவிர்க்க முடியாத காரணங்கள் நூலைத் தயாரித்து முடிப்பதில் தாமதத்தை ஏற்படுத்தின. அதில் முக்கியமான காரணம் நான். மொழிபெயர்ப்பை முடிக்கக் கொடுக்கப்பட்ட அவகாசத்தை விட மிக மிக அதிகமாகவே எடுத்துக் கொண்டேன். அதுவே தொடர்ச்சியாகக் கால தாமதத்தை ஏற்படுத்தியது. அதற்காக எல்லா வாசகர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருகிறேன்.
ஒரு மொழிபெயர்ப்பு நாவலுக்காக இத்தனை வாசகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இந்த வாசக வரவேற்பு இந்த நாவலுக்கு ஆரம்பத்திலிருந்தே கிடைத்து வந்திருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு புத்தகம் வெளியாக இருந்தது. அது குளிர்காலம். இருந்தும் மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் நடுங்க வைக்கிற குளிரில் புத்தகக் கடை முன்னால் நீண்ட வரிசையில் நின்றிருந்தார்கள். கடைக்கு வந்த சில மணிநேரங்களில் புத்தகம் விற்றுத்தீர்ந்தது. வரிசையிலிருந்த பலரும் புத்தகம் கிடைக்காத ஏமாற்றத்துடன் திரும்பிப் போனர்கள். அந்தப் புத்தகம் ஒரு நாவல். சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய ‘கிறிஸ்துமஸ் கரோல்’.
இருபதாம் நூற்றாண்டிலும் அதே போல ஒரு புத்தகத்துக்காக மக்கள் காத்து நின்றார்கள் என்பது காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் ‘ஒன் ஹன்ட்ரட் இயர்ஸ் ஆஃப் சாலிட்டியூடு’க்காகத்தான். டிக்கன்சின் நாவலை வாங்க லண்டன்வாசிகள் மட்டுமே காத்திருந்தார்கள். மார்க்கேஸின் நாவலுக்காக ஸ்பானிய மொழி பேசுகிற எல்லா நகரங்களிலும் வாசகர்கள் காத்திருந்தார்கள் என்பது மட்டுமே வித்தியாசம்.
1967இல் வெளிவந்த நாவல் மூல மொழியான ஸ்பானிஷில் மூன்று கோடிப் பிரதிகள் விற்பனை ஆனது. இன்றுவரையும் அதிகம் விற்பனை யாகும் நாவல்களின் பட்டியலிலும் இருந்து கொண்டே இருக்கிறது. 1970ஆங்கில மொழி பெயர்ப்பு வெளிவந்தது. 1982இல் இலக்கியத்துக்கான நோபெல் பரிசு மார்க்கேஸுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டது. இன்றைய கணக்குப் படி இந்த நாவல் 37 மொழிகளில் வெளிவந்திருக்கிறது. தமிழ் 38ஆவது மொழி. நாவல் அதிகாரபூர்வமாக மொழியாக்கம் பெற்றிருக்கும் மூன்றாவது மொழி. மலையாளம், இந்தி இப்போது தமிழ். பதிப்புரிமை பெறாமல் பல மொழிகளில் பெயர்க்கப் பட்டிருப்பதன் கணக்குத் தெரியவில்லை. எனவே தமிழிலும் இந்த நாவல் வாசகர்களின் எதிர்பார்ப்பைப் பெற்றிருக்கிறது என்பது ஆச்சரியமாகவும் அதே சமயம் இயல்பானதாகவும் தோன்றுகிறது. இந்த எதிர்பார்ப்பை நான் கவனத்தில் கொள்ளவில்லை என்பதும் தாமதத்துக்குக் காரணம் என்று இப்போது தோன்றுகிறது. அதற்காகவும் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இனி நான் பேசப் போவதில் கொஞ்சம் சுய தம்பட்டம் ஒலிக்கலாம். அதற்காக முன்கூட்டியே உங்களிடம் மன்ன்னிப்புக் கோருகிறேன்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் நண்பர்காலச்சுவடுகண்ணன் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலின் மொழிபெயர்ப்பு உரிமையை வாங்கியிருந்தார். மொழிபெயர்ப்பதற்குப் பொருத்தமான நபரைத் தேடிக் கொண்டுமிருந்தார். அந்தச் சமயத்தில் பெரியவர் ஞாலன் சுப்ரமணியன் எனக்கு அறிமுகமானர். அந்த அறிமுகமே சுவாரசியமானது. பாப்லோ நெரூதாவின் கவிதைகளை மொழிபெயர்த்து ஒரு தொகுப்பை வெளியிட்டிருந்தேன். உயிர்மை வெளியீடு. புத்தகம் வெளியாகி சில மாதங்கள் கழிந்த பிறகு ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. பேசியவர் ஞாலன் சுப்ரமணியன்.கவிதை மொழி பெயர்ப்பு சிறப்பானதாக இருக்கிறது என்று பாராட்டினார். நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்றார். நான் இருப்பது திருவனந்தபுரத்தில். அவர் சென்னையில். எனவே சென்னை வரும்போது சந்திக்கலாம் என்று தெரிவித்தேன். இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து ஒரு மாலை நேரம் மீண்டும் தொலைபேசியில் அழைத்தார். பார்க்க வேண்டும்என்று சொன்னார்.
‘’நான் சென்னையில் இல்லையே சார் எப்படிப் பார்க்க?’’என்று மரமண்டைத்தனமாகப் பதிலையும் சொன்னேன்.
‘’இல்ல தோழர் நான் இங்கே திருவனந்தபுரத்துலதான், ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல ஒரு லாட்ஜுல இருக்கேன். எங்கே வந்தா உங்களைப் பார்க்கலாம்’’என்று கேட்டார்.
’’இல்லை நானே வருகிறேன்’’என்று அவர் குறிப்பிட்ட லாட்ஜுக்குப் போனேன்.
‘’திருவனந்தபுரத்தில் ஏதாவது வேலையா வந்தீங்களா சார்?’’என்று கேட்டேன்.
‘’உங்களைப் பார்க்கிறது மட்டும்தான் ஒரே வேலை. அதுக்காகத்தான் வந்தேன்’’என்றார்.
அவருக்கு ஒரு எழுபது எண்பது வயதாவது இருக்கும். ஆனால் என்னை விட உற்சாகவானாகவும் பரபரப்பானவராகவும் இருந்தார். யாரோ ஒருவன் அவனுடைய தனிப்பட்ட ஆர்வத்தின் பேரில் செய்த மொழிபெயர்ப்பை வாசித்து விட்டு அவனைப் பார்க்கக் கைக்காசை செலவு செய்து ஆயிரம் கிலோமீட்டர் தாண்டிவந்திருக்கிறாரே, கிறுக்கு முற்றிய கிழவராக இருப்பார் என்றுதான் முதலில் பட்டது. அவரைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டபோது அது கிறுக்கல்ல; பேரார்வம் என்பது புரிந்தது. அவர் தோழர் ஜீவாவால் இடது சாரி இயக்கத்துக்குள் அழைத்து வரப்பட்டவர். முதலில் ரஷ்யாவிலும் பின்னர் லத்தீன் அமெரிக்க நாடுகள் ஏதோ ஒன்றிலும் இருந்தவர். ஸ்பானிய மொழியில் எழுதவும் வாசிக்கவும் தெரிந்தவர். அந்த மொழியின் நவீன இலக்கியங்களுடன் ஓரளவு அறிமுகம் உள்ளவர். எல்லாவற்றுக்கும் மேலாகச் சென்னையில் பாப்லோ நெரூதாவின் பெயரால் ஸ்பானிய மொழி கற்பிக்கும் பள்ளி ஒன்றையும் நடத்திக் கொண்டிருப்பவர். இந்தப் பின்னணியில் தான் மார்க்கேஸின் நாவலை அவரால் மொழிபெயர்க்க முடியும் என்று நினைத்தேன். அவரை நண்பர் கண்ணனுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.
நாவல் மொழிபெயர்ப்புத் தொடங்கியது. நாவலின் முதல் அத்தியாயம் காலச் சுவடு இதழிலும் வெளியானது. சரியாக ஆறு அத்தியாயங்கள் மொழியாக்கம் செய்யப்பட்ட பின்பு அதை வாசித்துப் பார்க்கும் பணி எனக்குத் தரப்பட்டது. அதை செம்மைப்படுத்தி வெளியிட முடிவு செய்தோம். ஆனால் ஏதோ காரணங்களால் ஞாலன் சுப்ரமணியத்தால் ஆறு அத்தியாயங்களைத் தாண்ட முடியவில்லை. அதற்குள் காலக்கெடு நெருங்கிக் கொண்டிருந்தது. எனவே மாற்று ஏற்பாடாகப் புதிய மொழிபெயர்ப்பாளரைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வெவ்வேறு ஆட்களை அணுகினோம். தில்லியில் வாழும் ஸ்பானிய மொழி தெரிந்த தமிழ்ப் பெண் ஒருவரை அணுகிப் பார்த்தோம். அவருக்கு நவீனத் தமிழ் இலக்கியத்துடன் எந்தப் பரிச்சயமும் இல்லை. நவீன தமிழ் இலக்கியத் திலும் லத்தீன் அமெரிக்க இலக்கியத்திலும் பரிச்சயமுள்ள ஒருவரும் வாய்ப்பை ஏற்றுக் கொள்ளத் தயங்கினார். இதையெல்லாம் காதலிக்கு மாப்பிள்ளை பார்க்கிற மனநிலையில்தான் செய்து கொண்டிருந்தேன். அதைத் தெரிந்து கொண்டோ அல்லது தெரியாமலோ நண்பர் கண்ணன் பெருந்தன்மையாக “நீங்களே பண்ணிடுங்க” என்றார். அந்த வார்த்தை காதில் விழுந்த விநாடி நான் அடைந்த சிலிர்ப்பை விளக்கிச் சொல்வது கடினம். முப்பது வருடங்களாகச், சரியாகச் சொன்னால் 1982ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கண்ணன் சொல்லும்வரை மனதுக்குள் இருந்த கனவு அது.
வாசிப்பு தீவிரமாக மாறிய காலகட்டத்தில் தமிழில் கவனமாக வாசித்ததைப் போலவே ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் வாசித்துக் கொண்டிருந்தேன். அந்த நாட்களில் எனக்கு அறிமுகமான பெயர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ். மலையாளத்தில் சிறந்த நாவல்களில் ஒன்றான ஓ.வி. விஜயனின் ‘கசாக்கின்டெ இதிகாசம்’ லத்தீன் அமெரிக்க நாவலான ‘One Hundred Years of Solitude’இன் சாயலில் எழுதப்பட்டது என்ற புரளி இலக்கிய வட்டங்களில் நிலவியது. அது அன்றைய இலக்கிய வாதிகள் நடுவே விவாதமாக இருந்தது. அதில் மார்க்கேஸ் நாவலின் பகுதிகள் மேற்கோள் காட்டப்பட்டிருந்தன. மாஜிக்கல் ரியலிசம் என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டிருந்தது. இவை எல்லாம் உருவாக்கிய வாசகக் குறுகுறுப்பு நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேட வைத்தது. அன்று - 70களின் இறுதியில் அல்லது 80களின் ஆரம்பத்தில் ஆங்கிலப் புத்தகங்கள் கிடைப்பது அரிது. அதுவும் இதுபோன்ற நவீன நூல்கள் எங்கள் ஊரான கோயம்புத்தூரில் உடனடியாகக் கிடைப்பது சிரமம். அன்றைக்கு எனக்குத் தெரிந்த ஒரே பதிப்பாளரான க்ரியா ராமகிருஷ்ணன் மூலம் அந்தப் புத்தகத்தின் பெங்குவின் பதிப்பு கிடைத்தது. தன்னுடைய நண்பரான பத்மநாப ஐயர் லண்டலிருந்து வாங்கி அனுப்பியதாகக் கொடுத்தார். அது ஒரு டிசம்பர் மாதக் கடைசி நாட்கள் என்பதும் சென்னைப் புத்தகக் கண்காட்சி முடிவடைய இருந்த நேரம் என்பதும் ஞாபகமிருக்கிறது. ஊருக்குப் போய் வாசிக்க ஆரம்பித்தேன். முதல் நாலு பக்கங்களைப் படித்துப் புரிந்துகொள்ளவே நாற்பது முறை அகராதியைப் புரட்ட வேண்டியிருந்தது. அது ஒரு தொல்லை. ஆனால் கதையின் சுவாரசியம் அதைப் பொறுத்துக்கொள்ளச் செய்தது. இருந்த போதும் மூன்று அத்தியாயங்களுக்கு மேல் - அதுவே அறுபது பக்கங்களுக்கு மேல் வரும் - வாசிப்பைத் தொடர முடியவில்லை. அந்த ஆண்டு அக்டோபரில் மார்க்கேஸுக்கு நோபெல் இலக்கியப் பரிசு அளிக்கப்பட்டது. நோபெல் பரிசுகளின் வரலாற்றில் மிக அதிகம் இலக்கியப் பரபரப்பை ஏற்படுத்திய விருதுகளில் அதுவும் ஒன்று. 82க்கும் 84க்கும் இடையே கிட்டத்தட்ட மார்க்கேஸின் அதுவரையிலான படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் எல்லாம் பிக்கடோர் பதிப்புகளாகக் கிடைக்க ஆரம்பித்திருந்தன. நானும் அறுபத்தியோராவது பக்கத்திலிருந்து மீண்டும் தொடங்கி ‘‘One Hundred Years of Solitude’ஐ வாசித்து முடித்தே விட்டேன். கிறிஸ்டோபர் கொலம்பஸுக்குப் பிறகு மனிதர்கள் நிரம்பிய புதிய உலகத்தைக் கண்டு பிடித்த அடுத்த ஆள் நான் தான் என்று கொஞ்சம் பெருமிதமாக உணர்ந்தேன். உண்மையில் நாவலின் பல பகுதிகள் அப்போது புரியவில்லை.
கடந்த முப்பதுக்கும் மேற்பட்ட வருடங்களில் பகுதிகளாகவும் முழுமையாக வும் நான்கைந்து முறையாவது இந்த நாவலை வாசித்திருப்பேன். அப்போதும் முழுமையாகப் புரிந்ததில்லை. உண்மையாகச் சொல்வதென்றால் வரிக்குவரி நாவலைப் புரிந்துகொண்டது அதை மொழிபெயர்க்கத் தொடங்கியபோதுதான். இது இரண்டுச் செய்திகளை எனக்கு உணர்த்தியது. ஒரு படைப்பை நெருக்க மாகப் புரிந்துகொள்வதற்குச் சிறந்தவழி அதை மொழிபெயர்ப்பதுதான் என்பதை அனுபவமாகத் தெரிந்துக்கொண்டேன். இன்னொன்று வெறும் வாசகனாக ஒரு படைப்பை அணுகுகிறபோது கிடைக்கும் சலுகை. ஒரு வாசகன் பல பக்கங்களைப் புரட்டி வாசித்தும் ஒரு நாவலைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் மொழிபெயர்ப்பாளனால், ஒரு வரியை ஒரு வார்த்தையைக் கூட விட்டுவிட முடியாது என்ற கட்டுப்பாட்டை அனுபவத்தில் உணர்ந்தேன்.
மார்க்கேஸின் ஆங்கில மொழிபெயர்ப்பாளரான கிரகோரி ரபாஸா, தன்னுடைய நினைவுக் குறிப்புகளில் - 'If This Be Treason: Translation and Its Dyscontents' என்ற குறிப்புகளில் சொல்லியிருப்பது நினைவுக்கு வருகிறது ‘ஒரு மொழி பெயர்ப்பாளனும் எழுத்தாளன்தான். அவன் முன்னால் கதைக்கான களன், பாத்திரங்கள், சம்பவம் எல்லாம் அப்படியப்படியே இருக்கின்றன. அவன் செய்ய வேண்டியது அடக்க ஒடுக்கமாக உட்கார்ந்து அதை எழுதி முடிப்பதுதான்.’ இந்த மொழிபெயர்ப்பை அப்படித்தான் செய்திருப்பதாக நம்புகிறேன்.
நாவலைப் புரியாமல் வாசித்த காலத்திலேயே ஒரு சாகசத்தையும் செய்திருக்கிறேன். மார்க்கேஸுக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது. அதையொட்டி கோவை வானொலிநிலையத்தின் இலக்கிய நிகழ்ச்சியொன்றில்
'தனிமையின் நூறு ஆண்டுகள்' நாவலைப் பற்றி ஓர் உரை கூட நிகழ்த்தினேன். சென்னை வானொலி நிலைய இயக்குநராக இருந்துமிக அண்மையில் பணி ஓய்வு பெற்ற நண்பர் ஜே. கமலநாதன் தான் அந்தச் சாகசத்துக்குத் தூண்டுதலாக இருந்தார். எண்பதுகளிலும் தொண்ணூறு களிலும் எழுத, வாசிக்க வந்த எல்லாரிடமும் மார்க்கேஸ் எழுத்துகள் மீதான பிரியமும் பாதிப்பும் இருந்தன என்று சொல்ல முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ்ப் புனைகதையை ஒவ்வொரு பிறமொழி எழுத்தாளர்கள் பாதித்திருக்கிறார்கள். புதுமைப்பித்தன் காலம் முதல் இன்றுவரை இந்தப் பாதிப்பின் சாயல்களைப் பார்க்கலாம். மாப்பசான், ஓஹென்றி, ஆன்டன் செகாவ், டால்ஸ்டாய், ஜேம்ஸ் ஜாய்ஸ், காஃப்கா என்று பலர். இந்த வரிசையில் பரவலாக வாசிக்கப்பட்ட, விவாதிக்கப்பட்ட, மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்தான் என்று தோன்றுகிறது. மார்க்கேஸின் சாயலையொட்டி அவர் முன்வைத்த ‘மாந்திரீக எதார்த்தவாதம்’ என்ற போக்கையொட்டித் தமிழில் நிறையவே எழுதப்பட்டிருக்கின்றன. தமிழவனின் ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ முதல் பா. வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’ வரையிலான நாவல்கள், ஜெயமோகனின் ‘டார்த்தீனியம்’ என்ற குறுநாவல், தமிழ்ச்செல்வனின் ‘வாளின் தனிமை’, விமலாதித்த மாமல்லனின் ‘சிறுமி கொண்டுவந்த மலர்’ ‘உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தை’ முதல் கோணங்கி எழுதிவரும் கதைகள், நாவல்கள் வரை - இவை உடனடி உதாரணங்கள்- மார்க்கேஸின் பாதிப்பு அல்லது மாஜிக்கல் ரியலிசத்தின் பாதிப்பு தென்படுகின்றன. இதன் பொருள் இவர்கள் எல்லாம் இடதுகையில் மார்க்கேஸின் புத்தகத்தைப் பிடித்துக் கொண்டு வலது கையால் தங்களது கதைகளை எழுதினார்கள் என்பது அல்ல. ஒட்டுமொத்தமாக உலக இலக்கியத்தைப் பாதித்த ஒரு போக்கின் விளைவை - அதிர்வை - வாசிப்பின் மூலமோ வாசித்தவர்கள் சொல்லக் கேட்டதன் மூலமோ பிரதிபலித்திருக்கிறார்கள் என்பதுதான். கொஞ்சம் விரிவாக யோசித்தால் மார்க்கேஸின் பாதிப்பு இல்லாமலிருந்தால் சல்மான் ரஷ்டியின் ‘Midnight’s Children’, அருந்ததி ராயின் ‘‘God of small things’ போன்ற நாவல்களின் கதையாடலும் வடிவமும் வேறாக அமைந்திருக்கும் என்பது என் யூகம்.
‘மாஜிக்கல் ரியலிசம்’ என்பது மார்க்கேஸின் கண்டுபிடிப்பல்ல. லத்தீன் அமெரிக்கப் புனைகதையில் அவருக்கு முன்பே கையாளப்பட்டுவந்த போக்கு. அதைத் தனது அனுபவங்களால் மார்க்கேஸ் செழுமைப் படுத்தினார். அவரே ஒரு பேட்டியில் சொன்னார். “என்னுடைய எழுத்தில் மாந்திரீக எதார்த்தம் என்று ஒன்றைப் பற்றிச் சொல்கிறார்கள். அப்படி ஒன்றை நான் உணர்ந்ததே இல்லை. கரீபியப் பகுதியில் வாழ்க்கையில் தட்டுப்படும் அன்றாட எதார்த்தங்கள் வெளியில் இருப்பவர்களுக்கு மாயத்தன்மை கொண்டதாகத் தெரிகிறது.” மற்றவர்களின் மாய எழுத்தில் வாசகனை வசீகரிக்கும் மாயத் தன்மைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டபோது மார்க்கேஸ் தனது எழுத்துகளில் அந்த மாயத்தன்மையின் அடிப்படையான எதார்த்தத்தை மறைக்காமல் இருந்தார். இந்த நாவலின் ஒரு பாத்திரமான அழகி ரெமேதியோஸ் ஒரு பிற்பகல் நேரம் காயப்போட்டிருக்கும் படுக்கை விரிப்புகளுடன் அந்தரத்தில் எழும்பி உயிரோடும் உடலோடும் நேரடியாக சொர்க்கத்துக்குப் போகிறாள். அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் இன்னொரு பாத்திரமான பெர்னாண்டா கடவுளிடம் பிரார்த்திக்கிறாள். ‘விலை உயர்ந்த அந்த விரிப்புகளைத் திரும்பக் கொடுக்க வேண்டும்’ என்றுதான். இந்தத் தெளிவுநிலை - lucidityதான் மார்க்கேஸை முக்கியமானவராக்கியது. தமிழில் எழுதப்பட்ட மாஜிக் ரியலிச எழுத்துகளில் பெரும்பான்மை யானவற்றில் புரிந்துக்கொள்ளப்படாமல் விடப்பட்ட அம்சம் இதுதான்.
இந்த மாயக்கூறுதான் மேற்கத்திய வாசகர்களையும் நம்மைப் போன்ற கீழைத்தேய வாசகர்களையும் கவர்ந்தது. மார்க்கேஸை அபிமான எழுத்தாளர் ஆக்கியது. மேற்கத்திய வாசகர்களுக்கு புதிய கதையைச் சொன்னதால். கிழக்கத்திய வாசகர்களுக்கு அவர்களது வாழ்க்கையில் பார்க்கும் காட்சி களைப் புனைவில் வெளிப்படுத்திய நெருக்கத்தினால். நாவலிலிருந்து ஒரு காட்சியை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். மகோந்தா நகரத்தை உருவாக்கிய ஹோஸே அர்க்காதியோ புயேந்தியா, தனது ஆராய்ச்சிகளால் பைத்தியம் முற்றி வீட்டு முற்றத்தில் மரத்தடியில் கட்டப்பட்டுக் கிடக்கிறார். இந்த உலக நினைவே இல்லாத அவர் இருந்த இடத்திலேயே கழித்த மலத்தை மனைவி உர்சுலா மண்ணைப்போட்டு மூடி மண்வெட்டியால் அள்ளி வீசுகிறாள். இப்படியான காட்சியை நாம் வியந்து பாராட்டும் எந்த மேற்கத்திய நாவலிலும் பார்ப்பது அரிது. ஆனால் ஓர் இந்திய நாவலில் - அல்லது தமிழ்நாவலில் - இதை மிக எதார்த் தமானதாக அடையாளம் கண்டு கொள்ளமுடியும். மேற்கத்திய Sophisticationக்குப் பதிலாக இயல்பான வெகுளித்தனம் மிளிர்வதுதான் மார்க்கேஸ் நமக்கு நெருக்கமானவராகத் தெரியக் காரணம். அண்மைக் காலத்தில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட எழுத்துகளும் அவருடையதாக இருக்கக் காரணமும் இந்த நெருக்கம்தான். இத்தனை இணக்கமான ஓர் எழுத்து தமிழுக்கு அதிகாரபூர்வமாக இப்போது தான் வாய்த்திருக்கிறது என்பது விந்தையாகவே தோன்றுகிறது.
இந்த மொழிபெயர்ப்பு தொடர்பாக சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
எந்த மொழிபெயர்ப்பும் முழுமையானதல்ல; நூறு விழுக்காடு பொருத்த மானதும் அல்ல. இதை அண்மையில் அனுபவபூர்வமாக உணர்ந்தேன். மலையாளக் கவிஞரான வினயசந்திரனின் மறைவையொட்டி நான் ஒரு அஞ்சலிக் குறிப்பை - மாத்ருபூமி வாரஇதழில் எழுதியிருந்தேன், மலையாளத்தில். திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் செயலாளரான தோழர் வானமாமலை அதைத் தமிழாக்கம் செய்து சங்கத்தின் இதழான ‘கேரளத் தமிழில்’ வெளியிட்டிருந்தார். அதே கட்டுரையை நானும் தமிழில் எழுதி காலச்சுவடு இதழிலும் வெளியிட்டேன். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்த போது வியப்பாக இருந்தது. இரண்டும் வெவ்வேறு தமிழ் வடிவங்களிலி ருந்தன. இரண்டிலும் குறிப்பிடப்படும் சம்பவங்களும் பெயர்களும் உரையாடல் களும் எல்லாமும் ஒன்றாகவே இருந்தபோதும் வேறுவேறாகவே தென்பட்டன. அது ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்தியது. மொழிபெயர்ப்பில் மூலத்தைச் சார்ந்து வலுவான நம்பகத் தன்மையை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படை உண்மையை உணரவைத்தது. ‘தனிமையின் நூறு ஆண்டு’களில் நான் பின்பற்றி யிருக்கும் முதலாவது விதி இந்த நம்பகத் தன்மையை உருவாக்கியது தான். அதை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளை மார்க்கேஸே அவரது இதர படைப்புகள் மூலம் வழங்கினார். இந்த நாவலுடன் தொடர்பு டையவையாகவே, இந்த நாவலுக்கு முன்னும் பின்னுமாக எழுதிய கதைகளில் அதைச் செய்திருந்தார். ‘தனிமையின் நூறு ஆண்டுகளில்’ வரும் கர்னல் அவுரேலியானோ புயேந்தியா ‘கர்னலுக்கு யாரும் கடிதம் எழுதுவ தில்லை, குறுநாவலில் வருகிறார். ரியோஹாச்சா என்ற இடத்திலிருந்து வாடிகனுக்குப் போப் ஆண்டவரைப் பார்க்கச் செல்லும் பயணம்’ விநோத புனிதயாத்திரிகர்கள் தொகுப்பின் சிறுகதை ஒன்றில் இடம் பெறுகிறது. இந்த அம்சங்கள் மொழிபெயர்ப்பில் நம்பகத்தன்மையை உருவாக்க உதவின.
ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் ஒவ்வொரு நடையைக் கோருகின்றன. மூலத்துக்கு வரிவரியாக ஒத்துப்போகும் நடை, ஆசிரியனுக்கு விசுவசமாக இருக்கும் நடை, என்று. இந்த நாவல் வலியுறுத்தியது கதையாடலை மட்டும் முன்னிருந்தும் நடையை அல்ல; அதற்குள் இருக்கும் துணைப் பிரதிகளையும் மேªலுழுவதற்கு உதவும் நடையை. எனவே வரிக்கு வரியாள மொழிபெயர்ப்பு நடையோ கதையாடலே முன் நகர்த்தும் நடையோ இதில் பயன்படுத்த வில்லை. கருத்தையும், உணர்வுகளையும் முதன்மைப்படுத்தும் நடையையே பயன்படுத்த நேர்ந்தது. மார்க்கேஸை மார்க்கேஸாக அடையாளப்படுத்தும் நடையை.
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸே மூன்று தனித்தனி நடைகளில் இந்த நாவலை எழுதியிருக்கிறார். ஒன்று ‘டான்குவிக்ஸோட்’ எழுதிய செர்வான்டிஸின் செவ்வியல் நடை. ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலைப் பற்றிச் சொல்லப்பட்ட மிக உயர்வான மதிப்புரை பாப்லோ நெரூதா – ’செர்வான்டிஸூக்குப் பிறகு ஸ்பானிய மொழி தன் ஆற்றலை வெளிப்படுத்தியிருப்பது இந்த நாவலில்தான்’ - சொன்னதுதான். பைபிளின் சாயலுள்ள நடை, இரண்டாவது. நாவலில் இடம் பெறும் சமகாலத் தன்மையுள்ள நிகழ்வுகளில் பத்திரிகையாளனின் துல்லியமான நடை. இந்த மூன்றையும் தான் பிறந்து வளர்ந்த கொலம்பியக் கிராமமான அரக்காடாக்கா வட்டார வழக்குடன் இணைந்த தனது உணர்வுகளுடன் கலந்து உருவாக்கிய நடையில்தான் மார்க்கேஸ் எழுதியிருக்கிறார். ஓர் உதாரணத்தைச் சொல்லலாம். அமரந்தா உர்சுலா என்ற பாத்திரம் பிரஸ்ஸெல்லில் படிப்பு முடித்து கணவன் காஸ்ட்டனுடன் மகோந்தா திரும்புகிறாள். அவர் கொண்டுவந்திருக்கும் பொருட்களில் ஒன்றின் பெயர் Velocipede.வேறு எதுவும் இல்லை. சைக்கிள்தான். அரக்காடாகா வழக்குச் சொல் அது.
நாவலை நீங்களே வாசிக்கவிருப்பதால் அதன் கதைப் போக்கைப் பற்றியோ அதிலுள்ள வரலாற்றுப் பின்னணி இலக்கிய மேன்மைகள் பற்றியோ பேசத் தேவையில்லை என்று நினைக்கிறேன். ‘கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலக மொழிகளில் எழுதப்பட்டவற்றில் மிகச் சிறந்த நாவல்’ என்று சல்மான் ரஷ்டி குறிப்பிட்டிருப்பது பொருத்தமான மதிப்பீடுதான்.
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸை விடவும் அவரது சமகாலத்தவரான ஜார்ஜ் லூயி போர்ஹேயின் எழுத்துகள் அறிவார்ந்த தர்க்கங்கள் நிரம்பியவை. மார்க்கேஸின் நாவல்களை விட கார்லோஸ் புயெந்திஸின் படைப்புகள் இன்னும் வசீகரமானவை. மார்க்கேஸின் கதையாடலை விட மரியா வர்கஸ் யோஸாவின் கதையாடலில் அரசியல் உள்ளோட்டங்கள் அதிகம். இவை அனைத்தையும் கடந்து எல்லா மொழிகளிலும் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் அந்தந்த மொழியின் எழுத்தாளராக சொந்தம் கொண்டாடப் படுவதன் காரணம்: அவர் எழுத்து இவை எல்லாவற்றையும் விட மானிடத் தன்மை மிகுந்தது more humanஎன்பதுதான். மனிதச் சிக்கல்களை கலையின் வெகுளித்தனத்துடன் சொன்ன நாவல் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ என்பதுதான் மார்க்கேஸை நிகரற்ற நிலைக்கு உயர்த்தியிருக்கிறது.
மொழிபெயர்ப்புகளைப் பற்றி பீட்டர் ஹெச் ஸ்டோனுடன் நடத்திய நேர்காணலில் மார்க்கேஸ் இப்படிக் குறிப்பிடுகிறார். “நான் எனக்கு விருப்பமான புத்தகங்களை அந்நிய மொழியில் வாசிக்க விரும்பவில்லை. காரணம், நான் மிக நெருக்கமாக உணர்வது ஸ்பானிய மொழியில்தான்.” காப்ரியேல் கார்சியா மார்க்கேஸை ஒரு தமிழ்வாசகன் தனக்கு நெருக்கமாக உணர்ந்துகொள்ள இந்த மொழிபெயர்ப்பு துணை செய்யுமானால் முப்பது ஆண்டுகள் கனவுகண்ட இலக்கியக் காதல் பலித்துவிட்டதாகக் கருதுவேன். உங்கள் அனைவருக்கும் நன்றி.
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலின் தமிழாக்கத்தின் வெளியீட்டு விழா சென்னையில் ‘டிஸ்கவரி புக்பேலசில்’ கடந்த ஜூன் 30 அன்று மாலை நடைபெற்றது. நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை இது. புகைப்படத்தில் நூலை வெளியிட்ட ஃப்ரண்ட்லைன் இதழின் ஆசிரியர் விஜயசங்கர், பெற்றுக் கொண்ட ஜி.குப்புசாமி ஆகியோருடன் நானும்.
↧
தினகரன் ரீடிங் ரூமி’ல் மார்க்கேஸ்
↧
↧
தன் நெஞ்சு அறிவது
அலுவல் நிமித்தமாக விசாகபட்டினத்தில் தொடர்ந்து நான்கு நாட்கள் தங்க நேர்ந்தது. சென்னையிலிருந்து அனுப்பிய சரக்கை அந்த ஊர் விநியோகஸ்தர் எடுக்காமல் விட்டிருந்தார். வங்கி மூலம் அனுப்பப்பட்ட சரக்கு. அதை எடுப்பதற்கான கெடு முடிந்து விட்டதால் நிறுவனத்தின் பிரதிநிதியாகப்போக வேண்டிருந்தது.வங்கியிலிருந்து தஸ்தாவேஜுகளை வாங்கித் தந்தால் சரக்கை எடுப்பதாக விநியோகஸ்தர் சொல்லியிருந்தார். வங்கியிலிருந்து அவற்றைத் திரும்பப் பெற்றுக் கையில் வைத்துக் கொண்டிருந்தபோது விநியோகஸ்தர் கையை மலர்த்தினார். நிதிநெருக்கடி. திடீரென்று வந்து சொன்னால் ஆயிரக்கணக்கான ரூபாயைப் புரட்ட முடியுமா என்று எதிர்க் கேள்வி கேட்டார். நிறுவனமோ அந்த பில்லைக் கிளியர் செய்யாமல் சென்னைக்குத் திரும்பாதே என்று கறாராகச் சொல்லியிருந்தது.
கையைப் பிசைந்துவிழிப்பதைப் பார்த்த விநியோகஸ்தர் பரிதாபப்பட்டு மாற்றுத் திட்டத்தைச் சொன்னார். 'இரண்டு நாட்களுக்குள் பணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். அதுவரைக்கும் இங்கேயே இருங்கள். இன்றைக்குப் புதன். சனிக் கிழமை வங்கி மூடுவதற்குள் பில்லைக் கிளியர் பண்ணி விடுகிறேன். காசைக் கையோடு வாங்கிக் கொண்டு இரவு ரயிலேறி விடலாம்'. வேறு வழியில்லை. ஒப்புக்கொண்டேன். மத்தியானம்வரை அந்த அலுவலகத்தில் பராக்குப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். உணவு இடை வேளையின்போது விநியோகஸ்தரே பணியாளர் ஒருவரை அழைத்து எனக்குத் தங்குமிடத்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். கடற்கரைச் சாலையில் ஷிப்யார்டுக்குப் பக்கத்தில் இடுங்கிய ஒரு தெருவில் நெரிசலான ஒரு சந்தில் மிகச் சுமாரான ஒரு லாட்ஜுக்கு , பெயர் - சர்தாம் லாட்ஜ் - அழைத்துப் போனார் பணியாளர் .
வைசாக மன்னன் காலத்தில் சத்திரமாக இருந்திருக்கும் என்று நினைக்க வைத்த புராதனக் கட்டடம். இரண்டு தளம்.விசாலமான அறைகள் பிளைவுட் தடுப்புகளால் பிரித்து அமைக்கப்பட்டிருந்த எட்டுக்கு எட்டு அளவு அறைகள். துருப்பிடித்த கட்டில். அழுக்கு மெத்தை. அலுமினியத் தண்ணீர்க் குவளை. அந்த விடுதியில் நவீனமாகத் தென்பட்ட ஒரே சாதனம் வரவேற்பறையில் வைத்திருந்த சாலிடேர் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி மட்டுமே. இந்த ஆதிவாசிக் குகையில் தங்குவதை விட ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் ஒண்டுவது சௌகரியமானது என்று பட்டது. ஆனால் நாலு நாட்கள் பிளாட்பாரத்தில் குடியிருக்க முடியாது. இதை விடக் கொஞ்சம் வசதியான விடுதி கிடைக்குமா என்று உடன் வந்தவரிடம் அரைகுறைத் தெலுங்கில் விசாரித்தேன்.
'' ஏண்ட்டி சார், இதி ஒத்தா? சாலா மஞ்சி லாட்ஜ் சார். அரவாடு அன்னி இங்கடெனெ ஒஸ்தாரு சார். மதராஸ் மீல்ஸ் தொரக்கிந்தி சார்'' என்று விடுதி மகாத்மியம் சொன்னார்.
கேட்டுக் கொண்டிருந்த வரவேற்பாளர் '' சாரு தமிழா? நம்பாளுங்கல்லாம் இங்கதான் வருவாங்க சார். வளக்கமா ரூம் கெடக்காது. ஒங்க லக்கு இன்னிக் குன்னு ரூம் காலியா இருக்கு. உள்ளயே ரெஸ்டாரெண்டே இருக்கு. நம்ப ஊர் சாப்பாடு. இங்க வர அல்லா கம்பெனி ரெப்செண்டீவும் நம்ம கஸ்டமர் தான். நம்ம லாட்ஜ்தான் சார் சீப் அண்ட் பெஸ்ட்'' என்று நீளமாகப் பேசினார்.
கையிருப்புக் குறைவு. கம்பெனி அளக்கிற தினப்படியில் பெரிய இடங்களில் தங்குவது முடியாத காரியம். விநியோகஸ்தர் சனிக்கிழமை ரொக்கமாகவே கொடுப்பார் என்ற நம்பிக்கையில் செலவு செய்யலாம். ஆனால் ஊர் திரும்பி அதைச் சரிக்கட்டுவது மேலும் சிரமம். நிதிநிலைமையை மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்தேன். இதே லாட்ஜில் தங்கினால் சென்னை திரும்பி ஒரு வாரம்வரைக்கும் தட்டுப்பாடில்லாமல் செலவு செய்யத் தேவையான பணம் மிஞ்சும். சரி சொல்லி விடலாம் என்ற எண்ணம் ஓடியது. கூடவே வரவேற்பாளரின் வார்த்தைகளும் ஓடின. அவர் தலைக்கு மேலாகச் சுவரில் பதித்திருந்த சாவிப் பலகையைப் பார்த்தேன்.பதினாறு அறைகள். விசிட்டிங் கார்டு செருகிவைக்கும் சின்னச் சட்டங்களில் இரண்டைத் தவிரப் பெரும் பான்மை யும் காலியாக இருந்தன.ஆட்களே வராத விடுதியா, இல்லை விவகாரமான தங்குமிடமா என்று குழம்பினேன். யோசித்துக் கொண்டே இருந்தால் முடிவே இருக்காது என்று தோன்றிய அடுத்த நொடி ''ஃப்ர்ஸ்ட் ஃப்ளோர்ல ரூமிருக்கா?'' என்று கேட்டேன். வரவேற்பாளர் எழுந்து பலகையிலிருந்து 108ஆம் எண் சாவியை எடுத்தார்.'' லக்கி நம்பர் சார், நைன். கார்னர் ரூம், வா சார்'' என்று கௌண்டரை விட்டு வெளியே வந்து எனது லக்கேஜை எடுத்துக் கொண்டு படியேறினார். விநியோகஸ்தரின் ஆள் கடமை முடிந்த திருப்தியில் ''ஒஸ்தானு சார்'' என்று படியிறங்கினார்.
இந்தப் பாடாவதி அறையில் நான்கு நாட்களை எப்படிக் கழிப்பது என்று யோசித்தேன். முடிக்க வேண்டிய வேலை எதுவும் இல்லை. விநியோகஸ் தரை சரக்கு எடுக்கச் செய்வது மட்டுமே எனக்கிருக்கும் பொறுப்பு .அதைச் சனிக்கிழமை செய்து தருவதாக உறுதி கொடுத்திருக்கிறாரே, சனிக் கிழமை வேலையைச் சனிக்கிழமை பார்த்துக் கொள்ளலாம்.அதுவரை? சுற்றுலாப் பயணியாக ஊரைச் சுற்றலாம். வரவேற்பாளரிடம் விசாரித்தேன். வழிகாட்டி யின் தேர்ச்சியுடன் ஊரை வர்ணித்தார். பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றிச் சொன்னார். அதற்கிடையில் தன்னுடைய சுயசரிதையையும் கலந்து விட்டார்.
பெயர் ரமேஷ். இல்லை ரமேஸ். ஊர் பொன்னேரி. வேலை தேடி விசாகப் பட்டினம் கப்பல் தளத்துக்கு வந்தவர் அங்கும் இங்கும் அல்லாடி சர்தாம் லாட்ஜில் ரூம் பாயாக வேலை பார்த்துப் பத்து வருடங்களில் மானேஜர் ஆகி விட்டார். நன்றாக நடந்த லாட்ஜ்தானாம். உரிமையாளர்களுக் கிடையிலான சொத்துத் தகராறில் இந்த நிலைமைக்கு வந்து விட்டிருக்கிறது.''கேஸ் நடக்குது சார். நம்ம ஓனர் கெலிச்சிடுவாரு'' என்று நம்பிக்கையுடன் சொன்னார். அவரே போய் சலவை விரிப்பை எடுத்து வந்தார். '' ஒரு பாய் இருக்கான் சார். அவுனுக்கா தோணினா வருவான். மத்தபடி மேனேஜ் மெண்ட், ரூம் சர்வீஸ் அல்லாம் நாம்பதான். ரெஸ்டாரெண்ட் இருக்கு. ஒரு வேலூர்க்காரரு லீசுக்கு எடுத்து நடத்திகினுருக்காரு. இன்னா ஓணுமோ நம்ப கைல சொல்லு சார். பண்றேன். இன்னா ஓணும்னாலும் சொல்லு'' என்று கடைசி வாக்கியத் துக்கு அழுத்தம் கொடுத்தார். '' சரி'' என்று முனகினேன். அது அவருக்கு உற்சாகக் குறைவைக் கொடுத்திருக்க வேண்டும். ''சர்தான் சார், நீ ரெஸ்ட் எடு'' என்று நகர்ந்தார்.
வெள்ளாவி வாடை மாறாத படுக்கை விரிப்பில் சரிந்தது நினைவிருந்தது. எழுந்து பார்த்தபோது எட்டு மணி இரவின் இருள் கவிந்திருந்தது. கடற் காற்றின் கவிச்சை வாடையும் இரும்பு உருகும் வாசனையும் கலந்த காற்று அறைக்குள் சுழன்றது. மத்தியானத்திலிருந்து தூங்கி விட்ட குற்ற உணர்ச்சியுடன் எழுந்தேன். அதை ஈடு கட்டுவதுபோலப் பரபரப்பாகத் தயாராகி அறையை விட்டு வெளியேறினேன். வரவேற்பறையில் '' இன்னா சார் நல்லா ரெஸ்ட் எடுத்தியா?'' என்று ரமேஸ் கேட்டபோது ஏனோ வெட்கமாக இருந்தது. அங்கேயே உட்கார்ந்து அன்றைய ஆங்கில நாளிதழில் திரைப்படக் கொட்டகைகளைத் தேடினேன். காப்பி வரவழைத்துக் குடித்தேன். உண்மையிலேயே பேஷான காப்பி. சித்ராலயா தியேட்டர்.படம் ’தோஃபா’. இந்தி. ஜிதேந்திரா,ஸ்ரீதேவி,ஜெயப்ரதா என்று கண்ணில் விவரங்கள் தட்டுப் பட்டன. ரமேசிடம் கேட்டேன்.
'' சித்ராலயாவா சார், அது இங்கேர்ந்து இன்னா ஒரு ஒண்ணரைக் கிலோ மீட்டர் இருக்கும்.ஜகதம்பா ஜங்சன்னு கேளு. ரிக்சால பத்து ரூவா''
அப்போதுதான் லாட்ஜ் வாசலில் வந்து நின்ற ரிக்ஷாவை விட்டு இறங்கிய பெண்ணைப் பார்த்தேன்.பழக்கப்பட்டஇடத்தில் புழங்கும் சுவாதீனத்துடன் உள்ளே வந்துகொண்டிருந்தாள். நானிருந்ததற்கு அடுத்த நாற்காலியில் உட்கார்ந்தா ள். நான் சட்டென்று எழுந்தேன். ''பரவாலேது, மீரு கூச்சோண்டி'' என்று சிரித்து விட்டு ரமேசிடம் திரும்பினாள். அவரிடம் தெலுங்கில் கேட்டது தோரயாமாக விளங்கியது. 'இன்று வேலை ஏதாவது இருக்கிறதா? நான் இருக்கவா,வேறு இடத்துக்குப் போகவா?'. அவளுக்குப் பதில் சொல்வதற்குப் பதிலாக என்னிடம் சொன்னார்.'' சார், அதா நிக்குற ரிக்சால ஓணும்னா போயிரு சார். நம்பாளுதான்''. சற்றுத் தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது. வந்து சேர்ந்திருப்பது ஏடாகூடமான இடம்தான் என்பது தெளிவாகத் தெரிந்தது. அறையைக் காட்டியபோது 'இன்னா ஓணும்னாலும் சொல்லு சார்' என்று ரமேஸ் வலியுறுத்திச் சொன்னதன் அர்த்தம் புரிவதுபோல இருந்தது. மாட்டிக் கொண்டேன் என்ற நினைப்பில் வயிறு கனத்தது. முகம் வியர்த்தது. மொழி புரியாத இடத்தில் அசந்தர்ப்ப மான வேளையில் இன்னொரு தங்கு மிடத்தைத் தேட முடியாது என்ற உண்மை கால்களை நடுங்க வைத்தது. விநியோகஸ்தரைத் தொடர்பு கொள்வதும் காலையில்தான் சாத்தியம். உள்ளுக்குள் உதறிக் கொண்டி ருந்தது. அப்போதைக்கு அந்த இடத்தை விட்டுப் போய் விட வேண்டும். நிதானமாக யோசிக்க வேண்டும். எழுந்தேன். அறைச் சாவியை ரமேசிடம் கொடுக்காமல்பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டேன். பதற்றத்தைக் காட்டிக் கொள்ளாமல் '' சினிமா முடிஞ்சு வரும்போது கதவு தெறந்திருக்குமில்ல?''என்று அவரிடம் கேட்டேன். '' பதினோரு மணிவரிக்கும் தெறந்துதான் இருக்கும் சார். அதுக்கப்புறம் தோ அந்த சைடு டோர் தெறந்து வரலாம்''. வெளியே நகரும் முன்பு அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தேன். எங்கேயோ பார்த்தது போன்ற முகம். மாநிறம். திருத்தமாக வாரிய தலை. சூடிய மல்லிகைச் சரத்தின் ஒரு இணுக்கு மட்டும் இடது முன் தோளில் விழுந்திருந்தது. பார்வையில் அப்பாவித்தனமும் தந்திரமும் கலந்திருப்பது போல இருந்தது. ஒருவேளை என் யூகம்தான் தவறோ? இந்தப் பெண் நான் கற்பனை செய்கிற காரணத்துக்காக அல்லாமல் வேறு காரியத்துக்காக வந்தவளாக இருக்கலாமோ?
வாசலைத் தாண்டும்போது '' அரவாடா. அன்னா?'' என்று அந்தப் பெண் ரமேசிடம் கேட்பது தெரிந்தது. ரிக்ஷாவைக் கண்டுகொள்ளாமல் நடந்தேன். மெயின் ரோட்டை அடைந்து வழி விசாரித்தேன். காட்டப்பட்ட திசையில் வேகமாக நடந்தேன். பாதி தூரம் போன பின்பு என்னை முந்திக் கொண்டு ரிக்ஷா போனது. என்னைத் தாண்டி சில அடிகள் போனதும் அதன் பின் பக்கச் சதுரத் திரை உயர்ந்தது. ரிக்ஷாவில் உட்கார்ந்திருந்த அந்தப் பெண் எட்டிப் பார்த்தாள்.
'' ஒஸ்தாரா மீரு?'' என்று கேட்டாள். ஒரு நொடி தடுமாறிய பின்பு '' லேது ரா லேது'' என்றேன். திரை மூடியது. ரிக்ஷா வெகுதூரம் நகர்ந்ததும்தான் மூச்சு சீரானது. நடையை மெதுவாக்கினேன். காரணமில்லாமல் எதற்காகப் பயப்பட வேண்டும்? நாமாக விரும்பாவிட்டால் எது நம்மை என்ன செய்ய முடியும்? அப்படியே விரும்பினாலும் தப்பில்லை. இந்த வயசுக்குச் சபலப்படாவிட்டால் எப்படி? எதுவானாலும் வருகிறபோது பார்த்துக் கொள்ளலாம். கேள்விகளும் பதில்களுமாக யோசித்துக் கொண்டே போனதில் தன்னிச்சையாகவே ஜன சந்தடியான சந்திப்புக்கு வந்திருந்தேன். மறுபடியும் விசாரித்து சித்ராலயா வைக் கண்டு பிடித்தேன். அருகிலிருந்த ஓட்டலில் முழுச் சாப்பாட்டையும் கண்ணீர் உகுத்துக் கொண்டே சாப்பிட்டேன்.
படம் தொடங்கிய ஐந்து நிமிடத்தில் அதன் முழுக் கதையும் புரிந்து விட்டது. தமிழ்க் 'கல்யாண பரி'சின் இந்தி வடிவம். ஜெமினி கணேசனுக்குப் பதில் ஜிதேந்திரா. சரோஜாதேவிக்கு ஸ்ரீதேவி. விஜய குமாரிக்கு ஜெயப்ரதா. 'தோஃபா' என்றால் 'பரிசு' .ஆனால் அது கல்யாணப் பரிசாக இருக்கும் என்று யூகிக்காமல் விட்டுவிட்டேன். ஜெயப்ரதா வந்த முதல் காட்சியில் பொறிதட்டியது. லாட்ஜில் நான் பார்த்த பெண் அந்தச் சாயலில்தான் இருந்தாள். ஜெயப்ரதாவின் கண்ணாடிப் பிம்பம்போல. ஜெயப்ரதாவுக்கு இடது நாசிக்குக் கீழே மேலுதட்டில் மச்சம். லாட்ஜில் பார்த்தவளுக்கு வலது நாசிக்குக் கீழே. தொழிலுக்காக செயற்கையாக வைத்த மைப் புள்ளியாகவும் இருக்கலாம். படத்தை விட, சொந்தக் கற்பனை சுவாரசியமாக இருந்தது. சினிமாக்களில் விலை மகளிர் பாத்திரங்களில் வரும் பெண்களில் சிலர் நளினமானவர்களாகக் காட்டப்படுவதைப் பார்க்கும்போது பொய்யென்று தோன்றும். நடைமுறை யில் பாலியல் தொழில் செய்யும் பெண்கள் அப்படி இருக்க மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். அதைப் பொய்யாக்கியவள் அந்தப் பெண்.
விநியோகஸ்தரைப் பார்த்து நினைவூட்டுவதைத் தவிர மறுநாள் முக்கியமான வேலை இல்லை. அதை முடித்து விட்டு ரமேஸ் பரிந்துரைத்த மூன்று கொண்டாக்களைப் பார்க்கப் போனேன். மும்மதக் குன்றுகள். வெங்கடேஸ்வர கொண்டா. கன்னி மேரி தேவாலயம் இருக்கும் ராஸ் கொண்டா, பாபா இஷாக்கின் தர்கா இருக்கும் தர்கா கொண்டா. மூன்றிலும் மாலைவரை சுற்றித் திரிந்ததில் நாள் போயிற்று. திரும்பி வரும்போது மெயின் ரோடு பஸ் ஸ்டாப்பில் அந்தப் பெண் நிற்பதைப் பார்த்தேன். பிற பெண் முகங்களில் அநேகமும் வாடிப் போயிருக்க அவள் முகம்மட்டும் பளிச்சென்று தெரிந்தது. பஸ் ஸ்டாப்ப்பில் அவளைக் கடந்து வந்த போது பழக்கப் பட்டவளாகச் சிரித்தாள். அவளுக்கு நேர் முன்னால் நின்ற நொடியில் ''ஒஸ்தாரா மீரு?'' என்றாள். திரும்பிப் பார்க்காமல் வேகவேகமாக நடந்து லாட்ஜை அடைந்தேன்.
ரமேசின் தலைப்பக்கத் சாவிப் பலகையில் இன்னும் இரண்டு பெயர்ச் சீட்டுகள் இருந்தன. சாவியை வாங்கிக் கொண்டு அறைக்குப் போய் குளித்து உடைமாற்றிக் கீழே வந்தேன். தெலுங்கு தொலைக்காட்சியில் வயலும் வாழ்வும் நிகழ்ச்சியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ரமேஸ். என்னைப் பார்த்ததும் தொலைக்காட்சியை ஆஃப் பண்ணினார்.'' இன்னாவ்து ஓணுமா சார்?'' என்று கேட்டார். ஒரே நாளில் நீண்ட காலம் தோழமையாக இருந்த உணர்வைத் தரும் தோற்றமும் பாந்தமும் ரமேசிடமிருந்தது. சுவாரசியமான பேச்சாளி. நீண்ட நேரம் பேசியதில் கிடைத்த சகஜ உணர்வில் அந்தப் பெண்¨ ணப் பற்றி விசாரித்தேன். ரமேஸ் நமட்டு சிரிப்புச் சிரித்தார். ''இன்னா சார், ஒம் மூஞ்சியப் பாத்தா அதுக்கெல்லாம் வலியுற ஆளாத் தெர்லேன்னு அதுங்கையில் காலேலதான் சொல்லிகினுருந்தேன். இப்டி கவுத்திட்டியே. ஆங்... அல்லா ருக்கும்தான் இது இருக்கே. அதென்ன ஊறுகா போட்றதுக்கா'' என்றார்.
பேச்சு அபாய கட்டத்தில் இருப்பதை உணர்ந்தேன். இல்லை. அந்த மாதிரி எண்ணமெதுவும் இல்லை. சும்மா தெரிந்து கொள்ளும் குறுகுறுப்புத்தான். சாமி, நீயாவது ஏதாவது சிக்கலில் மாட்டி வைத்து விடாதே என்று ரமேசிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டேன். ''இதிலென்னா சார் இருக்கு. ஓணும்னா அதுங்கையில சொல்லப் போறேன். அதுக்கும் புடிச்சிருந் தா சரிங்கப்போவுது. ஆனா அது மத்த தொழில் பண்றதுங்க மாறியெல்லாம் இல்ல சார். பக்கா டீசெண்ட்டு. நம்ம லாட்ஜு தான் அதோட எடம். ஆனா இதுவரிக்கும் ஒரு கரைச்சல் குடுத்ததில்ல. வர்றப்பல்லாம் மாமூல் வெட்றதுனால போலீசு வந்து பாத்துட்டுப் போய்டும். அதுக்கா புடிச்சிதின்னா சரி. இல்லன்னா லச்ச ரூவா குடுத்தாலும் ஒத்துக்காது.ஒங்க கம்பெனீலேர்ந்து உனக்கு மிந்தி ஒரு பாய் வருவாரே சார். நல்ல பேரு சார்....'' நான் என்னுடைய பரிசுத்தத்தை நிரூபிப்ப தற்காக அவர் பெயரைச் சொன்னேன். ''ஆமா சார், அதான். அவரு என்கையில சொல்லிப் பாத்தாரு. அது வேணாம் ரமேசுன்னிடுச்சு'' என்று என் கண்களை வேவு பார்த்துக் கொண்டே சொன்னார். நான் தலை குனிந்தேன். அவமானமாக இருந்தது. ஒரு மூன்றாந்தர விடுதித் தரகர் மனதைத் துருவிப் பார்க்கிற அளவுக்குக் குன்றிப் போனதைப் பற்றிய அருவருப்பு வாய்க்குள் ஊறியது. அங்கிருந்து தப்புவதற்காக வெளியே போக நகர்ந்தபோது ''தோ சார், நம்பாளு'' என்று முகவாய்க் கட்டையை உயர்த்தி வாசலைக் காட்டினார் ரமேஸ். அந்தப் பெண்வந்து கொண்டிருந்தாள்.
உன்னைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம் என்று தெலுங்கில் சொன்னார் ரமேஸ். அவள் ''அவுனா சார்?'' என்று என்னைப் பார்த்துச் சிரித்தாள். என் முகம் இறுகியது. எதுவும் சொல்லாமல் வெளியேறினேன். நீண்ட தூரம் நடந்து கடற்கரைக்குப் போய்ச் சேர்ந்தேன். கடலின் மீது விழுந்து கொண்டிருந்த கப்பல்களின் வெளிச்சம் செய்யும் ஜால வித்தையில் மனதும் பிரகாசமானது. ஈரக் காற்றில் முகத்தின் இறுக்கம் தளர்ந்தது. கடற்கரையில் கூட்டம் கலைய ஆரம்பித்தபோது நானும் எழுந்தேன். வழியில் இரவுணவை முடித்துத் திரும்பி வந்தபோதும் லாட்ஜ் வரவேற்பறையில் அந்தப் பெண் இருந்தாள். கௌண்டருக்குப் பின்னால் மானேஜர் இருக்கை காலியாக இருந்தது. தொலைக்காட்சிப் பெட்டிக்குள் கிருஷ்ணாவும் விஜயநிர்மலாவும் இனிமையான பாட்டுக்கு குரங்குத் தனமாகக் குதித்துக் கொண்டிருந்தார் கள். என்னைப் பார்த்ததும் புன்னகையுடன் '' போஜனமாயிந்தா சார்?'' என்று விசாரித்தாள். சின்னதாக எழுந்த எரிச்சலை மறைத்துக் கொண்டு தலையாட்டினேன். '' மதராஸா சார்?'' என்றாள். அதற்கும் தலையாட்டினேன். ரமேசிடம் விசாரித்தீர் களாமே வரவா? என்று தெலுங்கில் கேட்டது புரிந்தும் புரியாத பாவனையில் அ¨றைக்கு விரைந்து கதவை அடைத்துக் கொண்டேன். தூக்கம் வரவில்லையென்றாலும் விளக்கை அணைத்துப் படுத்துக் கொண்டேன். வெகு தொலைவில் கடல் விடுகிற ஓயாத பெருமூச்சின் ஓசை கேட்டுக் கொண்டிருந்தது.
கதவு தடதடக்கிற ஓசை கேட்டு திடுக்கிட்டு விழித்தேன். '' லோப்பிலோ எவரு? தலுப்பு தெறவுண்டி'' என்ற முரட்டுக் குரலுக்குப் பணிந்து விளக்கைப் போட்டுக் கதவைத் திறந்தேன். இரண்டு போலீஸ்காரர்கள். யார்? எங்கிருந்து எதற்காக வந்திருக்கிறேன்? என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்து ஆராய்ந்தார்கள். விசிட்டிங்க் கார்டைஎடுத்து நீட்டி விவரங்களைச் சொன்னேன். உள்ளூர் விநியோகஸ்தர் செல்வாக்குள்ள அரசியல் பிரமுகரும் கூட என்பதால்மேற்கொண்டு பேசாமல் வெளியேறினார்கள். மறுபடியும் விளக்கை அணைத்து விட்டுப் படுத்த போது இதயம் தாறுமாறாக இடித்துக் கொள்வதைக் கேட்க முடிந்தது. வெளியில் காலடி ஓசைகள் தேய்வது கேட்டது. சற்றுக் கழித்து ரமேசின் குரல் கேட்டது. கொஞ்சம் விட்டு அறைக் கதவு மறுபடியும் தட்டப்பட்டது. ''சார்... சார்'' என்ற ரமேசின் குரல். விளக்கைப் போட்டுக் கதவைத் திறந்தேன். ரமேஸ்தான் நின்றிருந்தார். ''சார், ஒரு ஒதவி பண்ணு சார். ஒரு முந்நூறு ருவா குடு சார். இன்னி கலெக்ஷனெ ஓனர் வாங்கினு பூட்டாரு. கல்லாலே துட்டு இல்ல. காலிலே திருப்பிக் குடுத்துட்றேன் சார். அர்ஜண்ட் சார்'' என்றார்.
மண்ணாந்தை மாதிரி விழித்தேன். அறைக்கு வாடகையை விநியோகஸ்தர் தருவதாக ஒப்புக் கொண்டதனால்தான் தங்கவே முடிவு செய்திருந்தேன். கையிலிருக்கிற காசை இவரிடம் கொடுத்து விட்டு எப்படித் திரும்ப வாங்குவது?அரைகுறைப் பழக்கமுள்ள ஆளுக்கு நான் எதற்காக ஒத்தாசை செய்ய வேண்டும்? அட்வான்சில் சரிக்கட்டலாம் என்று வைத்தாலும் இவர் கேட்கும் தொகை நாலு நாள் வாடகையை விட அதிகம். என்னுடைய அரை மாதச் சம்பளம். நம்பு சார், காலேல கரெக்டா குடுத்துர்றேன்'' என்ற ரமேசின் விடாப்பிடியான வேண்டுகோளுக்கு ஏன் பணிந்தேன் என்பது இன்றும் விளங்கவில்லை.
காசை வாங்கிக் கொண்டு படியிறங்கினார் ரமேஸ். தூக்கம் கலைந்த எரிச்சலில் மாடி வராந்தாவில் நின்று ஆரவாரமில்லாத தெருவைப் பார்த்தேன். லாட்ஜ் முனைச் சந்தில் இரண்டு போலீஸ்காரர்களும் அந்தப் பெண்ணும் கொஞ்சம் தள்ளி ரமேசும் நிற்பது தெரிந்தது. மிகவும் சுபாவமான குரலில் அந்தப் பெண் போலீசிடம் பேசிக் கொண்டே கையை நீட்டி எதையோ கொடுப்பதும் தெரிந்தது. என் பணம். பெட்டியைத் தூக்கிக் கொண்டு கம்பெனி கம்பெனியாக அலைந்து வியர்வை சிந்துவதற்குக் கிடைக்கும் என் ஊதியம் நிகழாத குற்றத்துக்கான நியாயமற்ற அபராதமாகக் கை மாறுவதை வயிற்றெரிச்சலுடன் பார்த்தேன்.
மறுநாள் எங்கும் போவதற்கான உற்சாகமில்லாமல் அறையில் தங்கவும் பிடிக்காமல் விநியோகஸ்தரின் அலுவலகத்தில் போய் பகல் முழுவதும் உட்கார்ந்து கொண்டேன். மாலையில் திரும்பி வந்தபோதும் ரமேசின் இருக்கை காலியாகவே இருந்தது. அறைக்குப் போய் கைகால் கழுவித் திரும்பி வந்து முந்தின நாள் போன வழியிலேயே நடந்து கடலைப் பார்த்து நேரம் கடத்தினேன். திரும்ப வந்தபோது ரமேஸ் இருந்தார். '' வா, சார், இன்னிக்கு ஓனரோட கேஸ் சார். அதான் வந்துகினும் போய்க்கினு மாருந்தேன்'' என்றார். நீ என்னவோ செய்து தொலை என்று மனதுக்குள் திட்டிவிட்டு '' என் பணம் ரமேஸ்?'' என்று இழுத்தேன். ''இப்ப கையில இல்ல சார், நாளக்கிக் குடுத்துட்றேன். நீ நாளக்கித்தான காலிபண்ற'' என்றார். திக்கென்றது. என் காசு போனதுதான் என்று தெரிந்து விட்டது. ''இல்ல ரமேஸ், காலேல சீக்கிரம் காலி பண்ணிருவேன். மத்தியானம் வண்டி. எனக்கு என் காசு இப்போ வேணும்?'' என்றேன். ''காலேலதான சார். நீ எந்திரிக்க றதுக்குள்ள கைல குடுத்துர்றேன்.பேஜாராவாம இரு சார்'' என்று சாவதான மாகச் சொன்னார். எனக்குப் பதற்றம் அதிகமா னது. '' அய்ய, இன்னார் சார் ஒன்னிய மாரி கம்பெனி ஆளுக்கு இதெல்லாம் இன்னா துட்டு சார்? அதுக்கோசரம் ஒன் துட்ட தராமேர்ந்துரமாட்டேன். நீ தில்லா இரு சார்'' என்று என்னை விரட்டினார். மாடி வராந்தாவிலேயே நொந்து கொண்டு உலாவினேன். சாலை பரபரப்பாக இயங்குவதையும் அடங்குவதையும் வேடிக்கை பார்த்தேன். வயிறு நிறைய ஏமாற்றம் இருந்ததால் சாப்பிடவும் போகவில்லை. பின்னிரவில் படுக்கையில் விழுந்து சீக்கிரம் எழுந்தேன். தயாராகி லக்கேஜைச் சுமந்து கொண்டு வரவேற்பறைக்கு வந்தேன். விநியோகஸ்தரின் அலுவலகம் ஒன்பது மணிக்குத்த ¡ன் திறக்கும். இப்போது மணி ஏழு. பரவாயில்லை. இங்கே இல்லாமல் வேறு எங்காவது போயிருக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். ரமேஸ் இருந்தார். லெட்ஜரில் கையெழுத்துப் போடச் சொன்னபோது காசைத் திருப்பிக் கொ டுத்து விடுவார் என்று தோன்றியது.'' சார், வைசாக் ஏஜென்சீலதான் இருப்பே, துட்டு வந்ததும் கொணாந்து குட்துட்றேன்''என்று இடியைப் போட்டார். கெஞ்சிப் பார்த்தேன். மரியாதைக் குறைவாகவும் திட்டிப் பார்த்தேன். எதுவும் அவரிடம் பலிக்கவில்லை. ''சார், ஒன்னிய ஏமாத்தணும்னு இல்ல. தோ, பாரு கல்லால அம்பதும் பத்து அறுவது ரூவாதான் இருக்கு. கொஞ்சம் பொறு சார். நாந்தான் கொணாந்து குடுக்குறேங்கறனே. இல்ல ஒனக்கு நம்பிக்கயில் லேன்னா டிரெயினுக்குப் போறதுக்கு மிந்தி வந்து வாங்கினு போ'' அவருடைய குளிர் பதில் என்னை அவமானப்படுத்தியது. விநியோ கஸ்தர் அலுவலகத்தில் சொல்லி மிரட்டி வாங்கி விடலாம் என்று திட்ட மிட்டு வேகமாக வெளியேறினேன்.
அங்கங்கே அலைந்து திரிந்து விட்டு சரியாக ஒன்பது மணிக்கு விநியோகஸ் தரின் அலுவலகத்தை அடைந்தென். என்னை சர்தாம் லாட்ஜுக்கு அழைத்துப் போன படுபாவிப் பணியாளரை அழைத்து விவரம் சொன்னேன். அதெல்லாம் வாங்கிடலாம் சார். நம்முடைய பழக்கதி லிருக்கிற லாட்ஜ்தான். ஏமாற்ற மாட்டார்கள். அந்த ஓனரும் நமது முதலாளியும் நண்பர்கள். அதனால் உங்கள் பணம் எங்கேயும் போகாது, நான் உத்தரவாதம் என்றார். கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஆனால் அவநமபிக்கையாகவும் இருந்தது. எவ்வள்வு ஏமாளியாக இருக்கிறேன் என்ற சுய பரிதாபத்தை விட அது அப்பட்டமாகத் தெரிந்து விட்ட அவமானம் பிடுங்கித் தின்றது. சரி, இவர்கள் பில்லை இன்று அடைக் கிறார்கள். அதில் வரும் பணத்தில் உடனடிச் செலவைப் பார்த்துக் கொள்ளலாம். அந்த முந்நூறு ரூபாயைப் பற்றிக் கவலைப் படாமலிருப்போம் என்று அமைதியானேன். வங்கியில் போய் காசைக் கொண்டு வந்து கொடுத்தார் விநியோகஸ்தர். அவரது ஆட்களுடன் பார்சல் அலுவலகம் போய் சரக்கை எடுத்துக் கொடுத்தேன். மணி பதினொன்று ஆகியிருந்தது. திரும்ப வைசாக் ஏஜென்சிக்கு வந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது பணியாளர் வந்து வெளியே வரச்சொன்னார். வந்தேன். ஏஜென்சி அலுவலகத்துக்கு நாலு கடைகள் தள்ளி அந்தப் பெண் நின்றிருந்தாள். பணியாளருடன் நடந்து அவளை நெருங்கும்போது உள்ளங்கை வியப்பதையும் கால்கள் தள்ளாடியதையும் ரத்தம் கொந்தளிப்பதையும் உணர முடிந்தது. யாராவது பார்த்து விடப் போகிறார்கள் என்ற தயக்கத்துடன் அவள் அருகில் போய் நின்றோம். களைத்த புன்னகையுடன் ’’சாரு’’என்றவள் கையிலிருந்த நோட்டுகளைப் பணியாளரிடம் கொடுத்தாள். அவர் வாங்கி என்னிடம் கொடுத்த நோட்டுகளைப் பிச்சைக்கார வேகத்துடன் எண்ணிப் பார்த்தேன். ஆறு ஐம்பது ரூபாய் நோட்டுகள். கணக்குச் சரி. பணியாளரிடம் அவள் சொன்னது எதுவும் என் காதில் விழவில்லை. நிம்மதியில் காது அடைத்தி ருந்தது. ''ஒஸ்தானு சார்'' என்று படியிறங்கிப் போனள். திரும்ப அலுவலகம் வந்தமர்ந்தேன். கொஞ்ச நேரம் போனது. ஒலித்த தொலைபேசியை எடுத்துப் பேசிய ஏஜென்சி மானேஜர் '' தோ இஸ்தானு'' என்று பதில் சொல்லி விட்டு என்னைப் பார்த்து ''சார் மீக்கு போன்'' என்று நீட்டினார். '' மெட்ராசிலிருந்தா?'' என்று வாங்கினேன். ''லேது சார் லோக்கல் கால்''
விசாகப்பட்டினத்தில் என்னைத் தொலைபேசியில் அழைக்கக் கூடியவர்கள் யாருமில்லை. காதருகே ரிசீவரைக் கொண்டு சென்றேன். ''சார், நான் ரமேஸ் பேசறேன்'' என்றது மறுமுனை.
@
’அந்திமழை’ மாத இதழின் ‘மனக் கணக்கு’ பத்திக் கட்டுரையாக வெளியானது. ஓவியம் - பி ஆர் ராஜன்.
↧
அப்பாவின் வாசனை
அப்பா காலமானபோது எனக்கு வயது நாற்பத்து மூன்று. அவருக்கு அறுபத்து ஐந்து தாண்டியிருக்கலாம்.உறுதியாகச் சொல்வதற்கில்லை. ஒன்றிண்டு வயது குறைவாகவும் இருக்கலாம். அப்பாவின் வயதை நிர்ணயிக்க உதவும் ஆதாரம் எதுமில்லை. அவருக்கு ஜாதகம் எழுதப்பட்டிருக்கவில்லை. அலுவலகப் பதிவேட்டில் கொடுத்திருந்த வயதும் சரியானதல்ல. வேலைக்குச் சேர்ந்த போது தோற்றம் சின்னப் பையனுடையதாக இருந்ததால் வயதைக் கூட்டிச் சொன்னார்களாம். அதனால் நிர்ணயிக்கப் பட்டதற்கு ஓரிரு வருடங்கள் முன்பே பணிலிருந்து ஓய்வு பெற வேண்டியிருக்குமே என்ற ஆதங்கம் வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்தே அப்பாவுக்கு இருந்திருக்கிறது.
அப்பாவின் ஆயுளில் நாற்பத்து மூன்று வருடங்கள் எங்கள் இருவருக்கும் பொது. அப்படியும் சொல்ல முடியாது. பிறந்த ஓராண்டுக்குள் அப்பாவின் சகோதரியால் எடுத்துச் செல்லப்பட்டு எட்டு வயதுவரை அவர்கள் பராமரிப்பில் வளர்ந்தேன்.அந்த எட்டு வருடங்களைக் கழித்தால் அப்பாவுக்கும் எனக்கும் இருந்த அணுக்கத்தின் வயது முப்பத்தைந்து மட்டுமே.
இந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் ஐந்து அல்லது ஆறு முறை, இல்லை யில்லை சரியாக ஆறு தடவைகள் அவரைத் தொட்டிருக்கிறேன். தற்செயலாகப் பட்டுக்கொண்டதோ அவர் சுய நினைவுடன் இல்லாதபோது ஸ்பரிசிக்க நேர்ந்ததோ அடிக்க வந்தபோது தடுத்துக் கொண்டதோ மனம் ஒப்பித் தொட்டது ஆகாதே. 'சின்னக் குழந்தையாக இருந்தபோது கூட அவர் என்னைத் தொட்டது இல்லையா?' என்று அம்மாவிடம் ஒருமுறை கேட்டிருக்கிறேன். 'இல்லை, அவருக்குச் சின்னக் குழந்தையை எப்படித் தூக்குவது என்று தெரியாது' என்றாள் அம்மா. என்னுடைய பத்தொன்பதாவது வயதில் ஒரு புத்தாண்டு நள்ளிரவில் எனக்குத் தம்பி பிறந்தான். அம்மாவுக்குத் துணையாக மருத்துவமனைக்கு வந்திருந்த ராஜம்மாவின் கையிலிருந்து அழுக்குப் பஞ்சில் செய்த பூப்போலிருந்த குட்டி ஜீவனை நூறு பிரசவங்கள் பார்த்த தாதியின் லாகவத்துடன் கைகளில் வாங்கினேன். எட்ட நின்றிருந்த அப்பா கிணற்றுக்குள் பார்ப்பதுபோல அதை எட்டிப் பார்த்தார். அமுதக் கலசத்தை அலுங்காமல் கையில் வைத்திருக்கும் கர்வத்துடன் அப்பாவின் முகத்தையும் பார்த்தேன். என்னைத் தீண்ட மறந்ததைச் சுட்டிக் காட்டும் இனிய பழிவாங்கல் அந்தப் பார்வை.
முதல்முறையாக அப்பாவைத் தொட்டது எந்த வயதில் என்பது ஞாபக மில்லை. ஆனால் அந்த நாளின் காட்சியும்வாசனையும் இன்றும் நினைவில் இருக்கின்றன.
அன்றைக்கு அத்தை வீட்டிலிருந்து வந்திருக்கிறேன். அப்பா வருவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். வாசலில்சைக்கிளுக்கு ஸ்டாண்ட் போடும் ஓசை கேட்டதும் ஓடிப் போய்ப் படியேறி வரும் அப்பாவைக் கட்டிக் கொள்கிறேன்.அவர் உதறிப் போட்ட செருப்புகளில் கால்களை நுழைந்துக் கொள்கிறேன். டயர் அடிப்பாகமுள்ள காலணிகளை இழுத்துக்கொண்டு நடந்து என் முகத்தை அவருடைய வயிற்றில் பதித்துக் கொள்கிறேன். இரண்டு கைகளாலும் அவருடைய இடுப்பை வளைத்துக் கட்டிக் கொள்கிறேன். அப்பா அரை டிரவுசர்போட்டிருக்கிறார். அப்போதெல்லாம்ஒயர்மென்னின் சீருடை காக்கிச் சட்டை; காக்கி அரை டிரவுசர். பின் இடுப்புப் பக்கத்தில் பெல்ட்டில் சொருகி யிருக்கிற கட்டிங் ப்ளையர் கையில் நெருடுகிறது. அதன் வெளியே துருத்தி யிருக்கும் பிடியை ஒருமுறை அழுத்துகிறேன்.டிரவுசருக்குள் மறைந்திருக்கும் இன்னொரு பிடி அப்பாவின் உடம்பை அழுத்தியிருக்க வேண்டும். அவர் அதை உருவிஎடுத்து வலது கையில் பிடித்துக் கொள்கிறார். இடது கையால் அவருடைய இடுப்பில் கோர்த்திருக்கும் என் கைகைகளைப் பிரித்து என்னைத் திருப்பி நிறுத்துகிறார். நான் அவர் கையை விடாமலிருந்தேனா அல்லது அவர் என் வலது கையைப் பிடித்திருந்தாரா? தெரியவில்லை. தூக்கிய கையுடன் கால்களை அகட்டி வைத்துப் பெரிய செருப்புகளை இழுத்தபடி 'தத்தக்கா புத்தக்கா' என்று நடந்து வீட்டுக்குள் நுழைகிறேன்.
அந்த முதல் நெருக்கத்தில் அப்பாவிடமிருந்து வெவ்வேறு வாசனைகள் வீசியதை முகர்ந்தேன். சற்று முன்புதான் சலூனுக்குப்போய்ச்சவரம் செய்திருப்பார்போல. அவர்மேல் படிக்காரமும் மரிக் கொழுந்தும் கலந்த மணம் தங்கியிருந்தது. வியர்வையின் இளநீர் வாடையும் காக்கி உடைகளின் துவர்ப்பான கஞ்சி வாடையும் இருந்தன.கட்டிங் ப்ளையரைவைத்திருந்ததால் இரும்பின் நெடி இருந்தது. எல்லாவற்றையும் மிஞ்சி சிகரெட் வாசனையும் இருந்தது. அந்த வாசனைக் கூட்டணி எனக்குப் பிடித்திருந்தது. அப்பாவையும் பிடித்திருந்தது. எல்லா அப்பாக்களும் இது போன்ற கலவைவாசனையுடன் தான் இருப்பார்கள் என்பது பிள்ளைப்பருவ ஞானமாக இருந்தது. அப்பாவுக்குச் சுயமாகச் சவரம் செய்து கொள்ளத் தெரியாது என்பது அந்த ஞானத்தில் வாய்த்த இன்னொரு தகவல். அப்பாவுடனிருந்த நாட்களில் ஒருநாள்கூட அவராக முகம் மழித்துக் கொள்வதைப் பார்த்ததில்லை. நான் வயதுக்கு வந்த பிறகுதான் ஷேவிங் செட் உருப்படிகள் வீட்டுக்கு வந்தன. ஒருமுறையாவது அப்பாவுக்கு முகம் மழித்து விடவேண்டும் என்பது கனவாக இருந்தது. அவர் முகத்திலிருந்து யூடிகொலேனோ டெட்டாலோ வாசனையடிப்பதாகப் பல நாட்கள் கற்பனை செய்திருக்கிறேன்.
இனி அத்தை வீட்டிலிருப்பதில்லை என்ற முடிவுடன் பிறந்த வீட்டுக்கே வந்தபோது அப்பா நெருக்கமாக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி அமையவில்லை. அப்பாவின் உலகத்துக்கு வெளியில்தான் எனக்கு இடமிருந்தது. அந்த உலகத்தின் வாசலில் எப்போதாவது எட்டிப் பார்க்கும் போது ''என்னடா, என்ன வேணும்?'' என்று கேட்பதைத் தவிர அவருக்கு என்னுடன் பேச எதுவும் இல்லாமலிருந்தது. எனக்குப் பின்னால் பிறந்த உடன்பிறப்புகள் உல்லாசமாகநடமாடிய அந்த உலகம் எனக்கு மட்டும் அடைக்கப்பட்டதாக இருந்தது. அதற்குள் நுழைய எனக்குக் கடைசிவரைஅனுமதி கிடைக்கவே இல்லை.
சம்பள நாளில் அப்பாவின் வாசனை வேறாக இருக்கும். அந்த மணமுள்ள அப்பாவுக்காகக் காத்திருப்பது ஆனந்தமாக இருக்கும். வரும்போதே நகரத்தின் பிரசித்தி பெற்ற அசைவ உணவகத்திலிருந்து பிரியாணிப் பொட்டலங்களைவாங்கி வருவார். சைக்கிளின் ஹாண்டில்பாரில் மாட்டியிருக்கும் பையை எடுத்துக் கொண்டு உள்ளே வந்ததும் வீடேமசாலா வாசனையை முகர்ந்து விடைத்துக் கொள்ளும். ஒவ்வொரு பொட்டலமாக எடுத்துப் பிரித்து பரப்பி வைப்பார்.எல்லாரும் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்குவோம். அப்பா தன் பங்கு பிரியாணியிலிருந்து இறைச்சித் துண்டுகளைத் தேடி எடுத்து தங்கைக்கு ஊட்டுவார். அவள் அதை மென்று விழுங்கும்வரை அவருடைய கை அவள்முகத்துக்கு அருகிலேயே இருக்கும். அப்பாவுக்கு நீளமான விரல்கள். அதில் ஆள் காட்டி விரல் நகம் மட்டும் பறவையின் அலகுபோலக் கூர்ந்து நீண்டிருக்கும். வேலை செய்யும்போது ஏற்பட்ட சின்ன விபத்தில் அடிபட்டு அந்த விரல் பறவையாகிருந்தது. கை நீண்டிருக்கும்போது குஞ்சுக்கு உணவூட்டும் பறவையின் தலைபோல இருக்கும். நானும் வாயைப்பிளந்து கொண்டிருப்பேன். அடுத்த ஊட்டல் எனக்குத்தான் என்று நாக்கில் எச்சில் சுரந்து கொண்டிருக்கும். ஆனால்ஒருபோதும் பறவைத்தலை என்னை நோக்கித் திரும்பியதில்லை. எச்சிலை விழிங்கிக் கொண்டு தின்று தீர்ப்பேன்.
ஒருமுறை பிரியாணி தினத்தில் தங்கையை நோக்கி நீண்ட அப்பாவின் கையை வலிந்து என் பக்கமாகத் திருப்பிஇறைச்சித் துண்டைக் கவ்விக் கொண்டேன். அந்தத் துண்டுக்கு என்னுடைய இலையில் இருந்த 'சீஞ்சிக் காயை' விட அலாதியான ருசியும் மணமும் இருந்தது. அப்பா அதிர்ந்துபோய் முறைத்துப் பார்த்தார். கையை உதறினார். 'ஏன்நீயாக எடுத்துச் சாப்பிட மாட்டியா?'' என்று கேட்டார். அதுதான் இரண்டாம் முறையாக அவரைத் தொட்ட ஞாபகம்.
ஒன்றிரண்டு சம்பள நாள்களுக்குப் பிறகு அசைவ உணவைச் சாப்பிட மாட்டேன் என்று விரதமிருக்கத்தொடங்கினேன். தொடர்ந்து சில வருடங்கள் சாக பட்சணியாகவே இருந்தேன். அப்பாவின் வாசனையே இல்லாம லிருந்தேன். அதுபோன்ற ஏதோ ஒரு தருணத்தில்தான் அப்பாவிடமிருந்து விலகத் தொடங்கினேன். அவர் இருக்குமிடத்தில் நான் இல்லாமலிருக்கும் படிப் பார்த்துக் கொண்டேன். அவர் முன்னறையில் இருந்தால் நான் புழக்கடையில். அவர் வீட்டிலிருந்தால்நான் வெளியில்.
1970ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முப்பதாம் தேதிக்குப் பிறகு அப்பாவின் வாசனை மாறத் தொடங்கியது. தமிழ் நாட்டில் மது விலக்கு நீக்கப்பட்டது அன்றிலிருந்துதான்.
ஆரம்பத்தில் ஆறு மாதத்துக்கு ஒரு தடவையோ வருடத்துக்கு ஒரு தடவையோ அப்பாவிடமிருந்து நொதித்த பழங்களின் வாடை வீசத் தொடங்கியது. 'அது வேறொன்றுமில்லை, வயிற்று வலிக்காகச் சாப்பிடுகிற கஷாயம்' என்று விளக்கம் சொன்னாள் அம்மா. சில வருடங்களுக்குப் பிறகு அந்த வாசனை வீடு முழுக்கத் தேங்கி நின்றது. அதே வாசனையுடன்பள்ளிக் கூடத்துக்கு எஸ் எஸ் எல் சி புத்தகத்தில் கையெழுத்துப்போட அப்பா வந்தார். பள்ளி அலுவலக அறைக்குள்அப்பாவின் வாடை பரவியது. நடுங்கும் கையால் அப்பா கையெழுத்துப் போடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த என்னிடம் அப்பாவின் நண்பரும் பள்ளியின் எலெக்ட்ரீஷியனும் பியூனுமானவர் கேட்டார் '' ஒங்க அப்பா எப்போடா கருணாநிதி கட்சியிலே சேர்ந்தார்?'முதலில் புரியவில்லை. அப்பா கம்யூனிஸ்ட் கட்சியாச்சே, அவர் எப்போது திமுகவில் சேர்ந்தார் என்று குழம்பினேன். அப்பா இனிஷியலில்லாமல்தான் கையெழுத்துப் போட்டார். இனிஷியலையும் போடச் சொன்னேன். அவருடைய விரல்கள் அவருடைய இனிஷியலை மறந்திருந்தன. உதவித் தலைமைஆசிரியரோ அலுவலகப் பணியாளர்களோ கவனிக்காத நொடியில் அவர் போட்ட கையொப்பத்துக்கு முன்னால் நானே அப்பாவின் இனிஷியலைப் போட்டேன்.
சைக்கிள் ஸ்டாண்டிலிருந்து சைக்கிளை வெளியே எடுக்க அப்பா தடுமாறினார். உதவி செய்யத் தோன்றாமல் பக்கத்திலேயே நின்றிருந்தேன். அவருடைய நிலையை பள்ளித் தோழர்கள் பார்த்து விடக் கூடாது என்று பயமாக இருந்தது.சைக்கிளை எடுத்து வாசலை நோக்கித் தள்ளத் தொடங்கிய போது மெதுவாகச் சொன்னேன் '' நீங்க இப்பிடி வந்திருக்கவேண்டாம்'' அப்பா உணர்ச்சியற்ற குரலில் '' எப்பிடி வந்தாலும் நான் உன் தகப்பன் தானே'' என்றார். இடது ஹாண்டில் பாரைப் பிடித்திருந்த அவர் கையை உணர்ச்சி ததும்பத் தொட்டேன். சில நொடிகளுக்குப் பிறகு அழுகையை அடக்கிக்கொண்டு வகுப்பறையை நோக்கி ஓடினேன்.
பள்ளிப் படிப்பு முடிந்தது. கல்லூரிக் காலத்தில் ஒருநாள் முன்னாள் ஆசிரியரைப் பார்க்கப் போனேன். பார்த்துப் பேசிமுடித்து வெளியே வரும் போது அப்பாவின் நண்பர் தென்பட்டார். பார்த்ததும் விசாரித்தார்-'"அழ்ப்பா சவுழ்க்கியமாழா '' . அவரும் கருணாநிதியின் வலையில் வீழ்ந்திருந்தார் என்பதை வன்மத்தோடு ரசித்தேன். சிறப்பு 'ழ' கரம் வழக்கொழிந்துபோய் விடாமலிருக்கவும்தான் மதுவிலக்கு ரத்துச் செய்யப்பட்டது என்ற உண்மை அன்று புலப்பட்டது.
அப்பாவுக்கு நகராட்சி மின்சாரத் துறையில் கம்பியாளர் வேலை. அவருக்கு என்று ஒதுக்கப்பட்ட பகுதியில் பணியாற்றினால் போதும். ஆனால் அப்பாவுக்கு வேறு பணிகளும் இருந்தன. அவர் தேர்ந்த கேபிள் ஜாயிண்டர். தலைக்கு மேலேபோகும் கம்பிகளல்லாமல் மண்ணுக்குள்ளே போகும் கம்பி வடங்களை இணைப்பதில் நிபுணர். நகரத்தில் எங்காவதுகேபிள் ஜாயிண்ட் பழுதுபட்டால் அப்பாவுக்கு அழைப்பு வரும். போனால் இரண்டு மூன்று நாட்கள் வீட்டுக்கு வரமாட்டார். ஒருமுறை அப்படிப் போனவர் நாலைந்து நாட்களுக்கு மேலாகியும் வீடு திரும்பவே இல்லை. இரண்டு நாள் பொறுத்த அம்மா மூன்றாம் நாளிருந்து அலுவலகத்தில் விசாரித்து எங்கே என்று போய்ப் பார்க்கச் சொல்லிக் கொண்டிருந்தாள்.வந்து விடுவார் என்று சமாதானப்படுத்தி இரண்டு நாட்களைக் கடத்தினேன். பிறகு அம்மாவின் நச்சரிப்புத் தாங்கமுடியவில்லை. அரை மனசுடன் சம்மதித்தேன். அலுவலகத்தில் விசாரித்து இடத்தைத் தெரிந்து கொண்டேன். அரை அடி உயரத் தூக்குப் போசியில் சோற்றையும் மீன் குழம்பையும் அடைத்துக் கொடுத்தாள் அம்மா. அதை எடுத்துக் கொண்டு பேருந்தில் ஏற வெட்கமாக இருந்தது. நடந்தே போனேன். வீட்டிலிருந்து ஐந்தாறு கிலோ மீட்டர் தாண்டியிருக்கும் இடத்தில் பெரிய டிரான்ஸ்பார்மர் அருகில் அப்பாவின் குழு கூடாரம் போட்டிருந்தது. அருகிலேயே இன்னும் ஒன்றிரண்டு கூடாரங்கள். பார்த்ததும் தெரிந்தது கூடை, முறம் பின்னுகிறவர்களின் தற்காலிக ஜாகை. அப்பாவின் சைக்கிள் கூடாரத்தை இழுத்துக் கட்டிய கயிற்றையொட்டி நின்றிருந்தது. ஆடி மாதக் காற்று பாயந்து கூடாரம் ஆடியதில்கயிறும் சேர்ந்து ஆடி சைக்கிளின் ஹாண்டில்பாரை அசைத்தது. நானும் குரங்குப் பெடல் அடிக்கக் கற்றுக் கொள்ள உதவிய சைக்கிள் ஆச்சே. என்னை வரவேற்கத் தான் அந்தத் தலையாட்டல்.
அப்பாவுக்குத்தான் வரவேற்கத் தோன்றவில்லை. ''வேலைக்காக வந்திருக்கிறேன். முடிந்ததும் வரமாட்டேனா? அதற்குள் ஏன் தேடி வந்தாய்?'' என்றார். நான் மௌனமாக இருந்தேன். கூடாரத்துக்குள் பார்த்தேன். வேலை எல்லாம் முடிந்துஏறக் கட்டி வைத்திருந்தது. கொண்டு போன சாப்பாட்டை அப்பா பாதி சாப்பிட்டார். மிச்சத்தை கூடைமுடையும்பெண் ஒருத்தியிடம் எடுத்துப் போகச் சொன்னார். அவள் வந்து 'இது யாரு ஒங்க பையனா?' என்று என் நெற்றி முடியைக் கலைத்து விட்டுப் போனாள். 'தே கண்ணு இங்க பாரு ஒரு அண்ணன் வந்திருக்கு' என்ற குரல் கூடாரத்துக்குளிருந்து வெளியேறும் முன் அழுக்குப் பாவாடை மட்டும் அணிந்த மூன்று வயது மாநிறக் குழந்தை அருகில் வந்தது. நெருங்கி நின்று பார்த்தது. அதன் உடம்பிலிருந்து மரிக்கொழுந்து வாசனை துளைப்பதுபோல வீசியது. எப்படி வந்தேன் என்று கேட்டார் அப்பா. நடந்து வந்ததைச் சொன்னேன். 'இந்த வேகாத வெயிலில் ஏன் நடந்து வந்தாய்? பஸ்ஸில் வருவதற்கென்ன?' நான் தலை குனிந்து உட்கார்ந்திருந்தேன். அப்பா லேசாகச் சிரித்தார். 'பாத்திரத்தை நான் கொண்டு வருகிறேன். நீ பஸ்ஸிலேயே போ. சாயங்காலம் வந்து விடுவேன்' என்றார். வலது கையில் சோற்று மிச்சம் காய்ந்து கொண்டிருக்கஇடது கையால் பனியனுக்குள் துளாவி முதலில் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்தார். 'அம்மாவிடம் கொடுத்து விடு' என்று நீட்டினார். யோசித்து மறுபடியும் பனியனுக்குள் கைவிட்டு பத்து ரூபாய் நோட்டுகள் இரண்டை எடுத்து நீட்டினார். இதை பஸ்ஸுக்கு வைத்துக் கொள்'. அது பேருந்துக் கட்டணத்தை விடப் பத்து மடங்கு அதிகம். ரூபாய்த் தாள்களை வாங்கிச் சட்டைப்பைக்குள் வைத்தபோது அவற்றிலும் மரிக் கொழுந்து வாசமடித்தது.
வீட்டில் அம்மா இல்லாத ஒரு நாள். நானும் பெரிய தங்கையும் இருந்தோம். வேலைக்குப் போயிருந்த அப்பா அரைநாளிலேயே திரும்பி வந்தார். நடையில் தள்ளாட்டமிருந்தது. வழக்கமானதுதான் என்று விட்டேற்றியாக உட்கார்ந்துவாசித்துக் கொண்டிருந்தேன். பின் பக்கமிருந்து ஓக்காளமும் 'அப்பா என்னாச்சு?' என்ற தங்கையின் குரலும் கேட்டன.கவலைப்படாமல் புத்தகத்தில் புதைந்திருந்தேன். பின்கட்டு சந்தடி வாசிப்பை முறித்தது. அலுத்துக் கொண்டு எழுந்துபோய்ப் பார்த்தேன். அப்பா வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். அவர் கண்களிலிருந்தும் மூக்கிலிருந்தும் நீர் கொட்டிக் கொண்டிருந்தது. தங்கை விழித்துக் கொண்டு நின்றிருந்தாள். தரையில் வாந்திக் கசடு சிந்தியிருந்தது. டிச்சுக் குழியைத்தோண்டி விட்டதுபோன்ற நாற்றம். நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அப்பா மறுபடியும் ஓக்காளத்துடன் குனிந்து வாந்தி யெடுத்தார். அஜீரண வஸ்துக்கள் வாயிலிருந்து வழிந்து சட்டையின் மார்பிலும் கைகளிலும் கால்களிலும் ஒட்டிக் கிடந்தன. அருவெருப்பாக இருந்தது. தங்கை மூக்கைச் சுருக்கிக் கொண்டு நின்றாள். சில விநாடிகளில்என்னுடைய அருவெருப்புக் கலைந்து இரக்கம் ஊறியது. தங்கையை உள்ளே போகச் சொல்லி விட்டு அப்பாவைக்கைத்தாங்கலாகக் குளியல் அறைக்குள் கொண்டு போனேன். அவர் உடைகளைக் களைந்து தண்ணீரை மொண்டு ஊற்றிச்சுத்தப்படுத்தினேன். சமர்த்துக் குழந்தையாக அம்மணக் கோலத்தில் என் முன்னால் உட்கார்ந்திருந்தார் அப்பா. தலையைத் துவட்டிய துவாலையை அவருடைய இருப்பில் சுற்றி விடக் குனிந்தபோது என் இடது தோள்மேல் அப்பாவின் ஈரக் கைபதிந்தது. நிமிர்ந்து பார்த்தேன். அப்போது அவர் கண்களில் மின்னிய கனிவை அதற்கு முன்போ பின்போ கண்டதில்லை.தகப்பனுக்கு அப்பாவாக நான் உணர்ந்த அபூர்வ விநாடி அது. அவரை அணைத்துப் பிடித்துத் திரும்ப வீட்டுக்குள்அழைத்துப் போனபோது வெயிலில் வதங்கிய வெற்றிலையின் மணத்துடன் இருந்தார் அப்பா. ஒருவேளை அதுதான்அப்பாவின் இயற்கை வாசனையா? தெரியவில்லை.
காலமாவதற்குச் சில மாதங்கள் முன்னால் படுக்கையில் கிடந்த அப்பாவைப் பார்க்கப் போயிருந்தேன். தீராத வயிற்று நோவால் உடம்பு ஒடுங்கியிருந்தது. மல்லாந்தோ சாய்ந்தோ படுக்க முடியாமல் கால்களை மடக்கி வைத்துக் குழந்தைபோலக் குப்புறப்படுத்திருந்தார். அவரிடமிருந்த நல்ல வாசனைகளும் துர் வாசனைகளும் காணாமற் போயிருந்தன. மருந்துகளின் மொச்சை வாடை மிஞ்சியிருந்தது. நானும் அவருமாகத் தனித்து விடப்பட்ட நேரத்தில் கேட்டார். 'நான் ஒனக்குவேணுங்கிறதப் பண்ணலேன்னு தோணுதாடா?' குழப்பமாக அவரைப் பார்த்தேன். ஏன் அப்படிக் கேட்கிறார். 'இல்ல, ஒம் புஸ்தகத்துல எளுதீருக்கியே அதான். ஒனக்குத்தான் எம் மேல அன்புமில்ல விரோதமு மில்லயே' என்றார். அப்பாவின் வார்த்தைகள் என்னைச் சுட்டன; குத்திக் குதறின. குற்ற உணர்வுடன் தலைகுனியச் செய்தன. அவர் சொன்னதுநான் எழுதிய கவிதை வரியின் ஞாபகச் சாயல். சரியான வரிகள் இவை. 'அப்பா, எனக்கு உன்மேல் அன்பில்லை; பகையைப் போலவே'. அந்த வரிகளை யோசித்த மூளையைப் பிடுங்கி எறியலாம் என்றும் எழுதிய விரல்களை நசுக்கிமுறித்து விடவும் தோன்றியது. மகிழ்ச்சிக்கும் வேதனைக்கும் இடையில் ஊசலாடினேன். நான் எழுதியிருப்பதை அப்பாவாசித்திருக்கிறார். நாளிதழ் தவிர வேறு வாசிப்பு வாசனையில்லாதவர் என் கவிதையை எப்போது படித்தார்? தெரியவில்லை. ஆனால் மகிழ்ச்சியாக இருந்தது. தன்னைக் குற்றம் சாட்டும் அந்தக் கவிதையை அவரை எவ்வளவு நோகச் செய்திருக்கும் என்பதில் வேதனையாக இருந்தது. மனதுக்குள் குமைச்சலாக இருந்தது. மனிதர்களைக் காயப்படுத்திஎன்ன இலக்கியம்? என்று வெறுப்பாகவும் இருந்தது. ஆனால் எழுதியது எழுதியதுதானே.எழுதும்போது இருந்த அப்பாவின் நிலையும் எழுதிய என் மனநிலையும் வாஸ்தவமானவை. இப்போது அப்பா காட்டும் பெருந்தன்மையும் என்னைத் தவிக்க வைக்கும் குற்ற உணர்வும் கூட வாஸ்தவமானவை.
எல்லா சராசரித் தகப்பன்களைப் போலத்தான் அப்பாவும். ஐந்து பிள்ளைக ளைப் பெற்றார். அவர்கள் வளர்வதைப் பார்த்தார். தன்னுடைய கடமையை நிறைவேற்றி விட்டதாக நம்பினார். எல்லா சராசரித் தகப்பன்களின் நன்மை களும் கெடுதிகளும் அப்பாவிடமும் இருந்திருக்கின்றன. இல்லாமலிருந்தது தன்னுடைய மனசைப் பகிர்ந்து கொள்கிற விருப்பம். என்றைக்காவது மனம் திறந்து பேசியிருந்தால் எங்கள் இருவருக்கும் நடுவில் நிகழ்ந்த குளிர்ப் போர் நடக்காமலே இருந்திருக்கலாமோ என்னவோ? ஆனால் நான் நெருங்கியபோது அப்பா விலகிப் போனார். விலக விலக அவரைவிரோதியாக நினைத்தேன். அப்பாவின் உலகமும் யோசனைகளும் என்னவென்று அறிந்து கொள்ள அந்தப் போலிப்பகை தடையாக இருந்ததை அவரில்லாத இப்போது உணர முடிகிறது. இழந்த பின்பு வருவதுதானே ஞானம்.
அப்பாவின் உடம்பு கிடத்தப் பட்டிருந்தது. நோயில் குலைந்த உடம்பு என்பதால் ஆடைகளை மட்டும் அகற்றி மாற்றுத் துணியை அணிவித்தார்கள். மாலை போட்டார்கள். உடம்பு வேனுக்குள் ஏற்றப்பட்டது. நானும் தம்பியும் உறவினர்களும் ஏறிக் கொண்டோம். மயானத்துக்குப் போகும் பாதையின் குண்டு குழிகளில் வண்டி ஏறி இறங்கியபோதுஸ்ட் ரெச்சரிலிருந்து அப்பா விசுந்து விடக் கூடாது என்று உடம்பைப் பிடித்துக் கொண்டேன். உயிர் வெளியேறியஅப்பாவின் பாதி திறந்த கண்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். உடம்பில் சார்த்தியிருந்த செவ்வந்தியும் ரோஜாவும் தழைகளும் வாடிய மரிக்கொழுந்தும் சேர்த்துக் கட்டப்பட்ட மாலையைப் பார்த்துக் கொண்டி ருந்தேன். வண்டி குழியில் குதித்தபோது கையோடு ஒட்டிக் கொண்ட மரிக் கொழுந்தைத் திரும்பவும் மாலைக்குள் சொருகினேன்.அப்பாஎரிந்து கொண்டிருக்கத் திரும்பி நடந்தோம். வியர்வையைக் கையால் துடைத்தபோது மரிக்கொழுந்தின் வாசனைநாசிக்குள் புகுந்தது. 'நானும் நீங்களும் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக இருந்திருக்கலாம். பரஸ்பரம் புரிந்து கொள்ள முயன்றிருக்கலாம். உங்களுக்கு என்னை விட்டாலும் பிரியத்தைக் கொட்ட நான்கு பிள்ளைகள். எனக்கு ஒரு அப்பாதானே?' என்று அந்த வாசனையிடம் அரற்றிக் கொண்டிருந்தேன்.
@
அந்திமழை இதழில் வெளிவந்தது.
↧
பாடாத பாட்டெல்லாம்
பத்திரிகையாளனாகக் குப்பை கொட்டத் தொடங்கிய பிறகு அரசியல் சமூக திரையுலகப் பிரபலங்கள் பலரையும்நேருக்கு நேராகத் தரிசிக்கிறபாக்கியமும் சிலருடன் சில வார்த்தைகளும் பலருடன் பல வாக்கியங் களும் பேசுகிற அதிருஷ்டமும் லபித்திருந்தது. இதற்கெல்லாம் மிக மிக முன்பே நான் பார்த்து ஓரிரு சொற்கள் பேசிய முதலாவது சினிமாப் பிரபலம் பி.பி. ஸ்ரீநிவாஸ்.
கர்நாடக மாநில அரசின் மின் சாதனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் - மைசூர்லாம்ப்ஸின் விற்பனைப் பிரதிநிதியாக அலைந்ததுதான் என்னுடைய இரண்டாவது வேலை. அதற்கு எங்கள் ஊரில் விற்பனை யாளராக இருந்தவர்கள் புகழ் பெற்ற மல்லிசேரி பீடி உற்பத்தியாளர்கள். பீடிக் கம்பெனி தவிர அதே பெயரில் ஓர் இசைக் குழுவையும் நடத்தி வந்தார்கள். கம்பெனி இருந்த பழைய பாணிக் கட்டடத்தின் பின்பக்கம் பெரிய கிடங்கு.பீடி இலைகளும் புகையிலைத் தூளும் நிறைந்த மூட்டைகள் அட்டி போட்டு வைக்கப்பட்டிருக்கும். அந்த இடத்தில்தான் பெரும்பாலும் இசைக் குழுவின்ஒத்திகையும் நடக்கும். அந்த நாட்களில் வானொலியில் எந்தப் பாட்டைக் கேட்டாலும் அந்தப் பாட்டுக்குப் பீடி வாசனை இருப்பதுபோலத் தோன்றி மூக்கை உறிஞ்சிக் கொள்வேன். அங்கிருந்த நாட்களில் குடுவை விளக்குகளுக்கும் குழல்விளக்குகளுக்கும் பட்டிகளுக்கும் உதிரிப் பொருட்களுக்கும் ஆர்டர் பிடிக்க அலைந்த நாட்களை விட இசைக் குழுவின்ஒத்திகை கேட்க முளையடித்து உட்கார்ந்த நாட்கள் அதிகம். கம்பெனியின் உரிமையாளர்களில் ஒருவரான வல்சராஜ்அந்தப் பொறுப்பின்மையை உற்சாகமாக அனுமதித்தார். ஒத்திகை நடக்கும் நாட்களில்விநியோகஸ்தரின் பிரதிநிதிகள் மார்க்கெட்டுக்கு வரச் சொல்லி என்னைக் கட்டாயப்படுத்தும்போது என்னுடைய சுணங்கும் முகத்தைப் பார்த்து'' அவன் இல்லேன்னா நீங்க ஆர்டர் பிடிக்காதா?'' என்று மலையாளத் தமிழில் அபயம் கொடுப்பார்.
ஒருமுறை காரமடை அரங்கநாதர் ஆலய ஆண்டுத் திருவிழாவுக்கு மல்லிசேரி இசைக்குழுவின் கச்சேரி ஏற்பாடாகி இருந்தது. நட்சத்திர விருந்தினராக அழைக்கப்பட்டவர் பி.பி.ஸ்ரீநிவாஸ். நிகழ்ச்சிக்கு ஒருநாள் முன்னதாகவே அவர் கோவைக்கு வந்திருந்தார். ''நீ வேணும்னா அவருக்கு உதவியாக இருக்கிறாயா?'' என்று வல்சராஜ் கேட்ட நொடியில்மனம் புல்லரித்தது. '' இருக்கிறேன். ஆனா கம்பெனி சூபர்வைசர் யாராவது கேட்டால்...'' என்று இழுத்தேன். ''அவன்மார்கிட்ட நான் சொல்லுது'' என்றார்.
பி.பி.எஸ். தங்கியிருந்த அலங்கார் ஓட்டலுக்குப் போனேன். சொல்லப்பட்டிருந்த அறைக் கதவைத் தட்டினேன். திறந்தது.வழுக்கைத் தலையும் உறக்கம் கலையாத முகமுமாக கரை வேட்டி கட்டிய ஒருவர் எட்டிப் பார்த்து '' ஹூம்?'' என்றார்.குழப்பமாக இருந்தது. ''சாரி சார்'' என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வரவேற்பறைக்கு வந்தேன்.
அங்கிருந்த வரவேற்பாளரிடம் அறை எண்ணைச் சொல்லி அதில் இருப்பவர் ஸ்ரீநிவாஸ்தானா என்று கேட்டேன். ஆமாம் என்பது பதில்.இருந்தும் எனக்கு நம்பிக்கை வரவில்லை. பி.பி.ஸ்ரீநிவாஸ் உயரமாக இருப்பார். புஷ் குல்லா போட்டிருப்பார். தடித்தகண்ணாடி அணிந்திருப்பார். நெற்றியில் சிந்தூரக் கோடு இழுத்து விட்டிருப்பார். ஆனால் நான் பார்த்த உருவத்துக்குஇது எதுவுமில்லை. நம்பிக்கை வராமல் குழம்பினேன். அங்கிருந்தே வல்சேட்டனுக்குப் போன் செய்து கேட்டேன். அவர் சொன்னதும் அதே எண்ணைத்தான். மறுபடியும் அந்த அறை முன்னால் போய் நிற்கத் தயக்கமாக இருந்தது. யோசிக்க நேரம் எடுத்துக் கொள்ளும் சாக்கில் உணவகத்துக்குள் போய் காப்பிக்குச் சொல்லி விட்டு உட்கார்ந்தேன்.
ஏனோஅந்த அறையில் இருப்பவர் பி.பி,ஸ்ரீநிவாஸ்தான் என்பதை மனம் ஒத்துக் கொள்ள மறுத்துக் கொண்டேயிருந்தது.மேஜைக்கு வந்த காப்பியைக் குடித்து முடித்தேன். எழுந்து வெளியே வந்து அறையை நோக்கித் த்யக்கத்துடன் நடக்கஆரம்பித்தேன். என்னைத் தாண்டி முன்னால் போன ஓட்டல் சர்வரின் தோள் மீது இருந்த டிரே கண்ணில் பட்டது.சிற்றுண்டி வகைகள் இருந்தன. சர்வரும் நானும் ஒரே வாசலில் நின்றோம். அவர் அழைத்ததும் கதவு திறந்தது. பி.பி. ஸ்ரீநிவாஸ் தெரிந்தார். புஷ் குல்லா போட்டிருந்தார். நெற்றியில் ஸ்ரீசூர்ணம் தர்த்திருந்தார்.கெட்டிக் கண்ணாடி போட்டிருந்தார். கட்டம்போட்ட சட்டைப்பையில் நான்கைந்து கலர் பேனாக்களைச் சொருகியிருந்தார். மரக் கலர் சால்வையை மடித்துத் தோளில் போட்டிருந்தார். தடிமனான கண்ணாடி அணிந்திருந்தார். ஆக நான் முதலில் பார்த்ததும் அவரைத்தான். ஆனால் அது அபிஷேகச் சிலை. இப்போது பார்ப்பதும் அவரைத்தான். ஆனால் இது அலங்கார ரூபம். இந்த உருவம்தான் எனக்குப் பழக்கமான பிபிஎஸ். என்னுடைய முட்டாள்தனத்தை நினைத்துச் சிரித்துக் கொண்டே அறைக்குள் நுழைந்து அறிமுகப் படுத்திக் கொண்டேன்.
''கொஞ்சம் முன்னால் நீங்கதான வந்தீங்க?'' என்று கேட்டார். குரலில் அதே பிபிஎஸ் ஒலித்தது. அவர் 'ஹூம்' என்று கேட்டதற்குப் பதிலாக ஒரு வாக்கியம் பேசியிருந்தால் அசட்டுத்தனமாகப் பின் வாங்கியிருக்க மாட்டேன் என்று பட்டது.
'' ஆமாம் சார். ஆனா நீங்கதானான்னு டவுட்டா இருந்துது. அதான் போயிட்டேன்'' என்றேன். அதிகம் வாய் திறக்காமல் ஒரு ஸ்வர மாத்திரை அளவுச் சிரிப்பைச் சிரித்தார். ''இப்ப டௌட் கிளியராயிடுச்சா?'' என்றார். ''ஆயிடுச்சு சார், இப்பத்தான் படத்துல பாத்த மாதியிருக்கீங்க. அதுவு மில்லாம இதைப் பார்த்ததும் எல்லா சந்தேகமும் போயிடுச்சு'' என்றேன், தடித்த கண்ணாடிக்கு அப்பா அவர் கண்கள் சந்தேகமாகப் பார்த்தபோது சிற்றுண்டி மேஜையில் கண்ணாடிக் கிண்ணத்தில் வைத்திருந்த பாசந்தியைச் சுட்டிக் காட்டினேன். அப்போது அவர் சிரித்த சிரிப்பு முன்னை விட நாலைந்து ஸ்வர மாத்திரைகள் நீளமாக இருந்தன.
சிற்றுண்டியை அருந்திக் கொண்டே விசாரித்தார். நான் ஆர்க்கெஸ்டிரா வில் வேலை செய்கிறேனா? பாடுவேனா? காரமடை இங்கிருந்து எத்தனை தூரம்? கார் அனுப்புவார்களா? ரிட்டர்ன் டிக்கெட் ஏற்பாடு செய்து விட்டார்களா?
தெரிந்தவற்றுக்குப் பதில். தெரியாதவைக்குத் தலை குனிந்த மௌனமுமாக இருந்தேன். கை கழுவி விட்டு வந்து கட்டிலில் அமர்ந்தார். அவர் அதிகம் பேசுகிற ரகமில்லை. நானும் சங்கோஜி. வெகு நேரம் அறைக்குள் மின் விசிறியின் ஓசை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. பிபிஎஸ் ஒரு கனத்த டயரில் எதையோ எழுதிக் கொண்டிருந்தார். தயக்கத்தைவலிய உதறிவிட்டு நான் பேசத்த் ஹொடங்கினேன். அவரிடம் கேட்க நிறையவே இருந்தன. 'நிலவே என்னிடம் நெருங்காதே' என்ற ராமு படப் பாடல் பாகேஸ்வரி ராகம்தானே? ' பார்த்தேன் சிரித்தேன் ' வீர அபிமன்யூ பாடல் சஹானாவா? 'கடவுள் அமைத்த மேடையில் 'தென்றலே நீ பேசு 'பாடியதற்குப் பிறகு இளையராஜாவின் இசையில் ஏன் பாடவில்லை? கேள்விகளுக்குப் பதில் சொல்லி முடித்தார். அவர் முன்பு பார்த்த பார்வைக்கும் இப்போது பார்க்கும் பார்வைக்கும் வித்தியாசமிருந்தது. '' பாட்டுக் கற்றுக் கொண்டீர்களா?'' என்று கேட்டார். '' அப்படிச் சொல்ல முடியாது. கொஞ்சநாட்கள் கற்றுக் கொள்ளப் போனேன். வீட்டுச் சூழ்நிலை காரணமாகத் தொடர முடியவில்லை'' என்றேன். ''ஆனா உங்க கூட பாட்டிருக்கு'' என்றார். ஏனோ எனக்குக் கண்கள் கலங்கின.
மறுநாள் மாலை காரமடையில் கச்சேரி. நிகழ்ச்சி ஆரம்பித்து வெகு நேரமாகியும் அவருக்குப் பாட்டு வரவில்லை.முதலில் பக்திப் பாடல்கள் .பிறகு அப்போதைய ஹிட் பாடல்கள். பழைய பாடல்களுக்கான வாய்ப்பில் தான்அவர் பாட வேண்டியிருக்கும் என்று தோன்றியது. கூட்டம் ரசிக்கிற விதத்தைப் பார்த்தால் அவர் பாட்டு எடுபடாது என்றும் தெரிந்தது. மேடையின் மூலையில் வல்சேட்டனுக்கும் பிபிஎஸ்ஸுக்கும் அருகில் உட்கார்ந்திருந்தேன். வல்சேட்டனிடம் என் சந்தேகத்தைச் சொல்லவும் செய்தேன். பிபிஎஸ் சோர்ந்து உட்கார்ந்திருந்தார் என்று தோன்றியது. கண்அசந்திருக்கிறார் என்றும். 'அடுத்த பாடல் 'சுமை தாங்கி'படத்திலிருந்து 'மயக்கமா கலக்கமா? பிரபல பாடகர் பி பி ஸ்ரீநிவாஸ் பாடுவார்' என்ற அறிவிப்பு மெல்லிய கர கோஷங்களை மூடியது. அதுவரை பார்த்திராத பிபிஎஸ் சை மைக்கின் முன்னால் பார்த்தேன். பாடி முடித்ததும் கையொலிகள் முழங்கின. அவர் அதைப் பொருட்படுத்தாமல் திரும்பி வந்து நாற்காலியில் உட்கார்ந்தார்.
சில பாடல்களுக்குப் பிறகு மீண்டும் அவருடைய முறை. 'படித்தால் மட்டும் போதுமா?'படத்திலிருந்து 'பொன் ஒன்று கண்டேன்... பெண் அங்கு இல்லை' பாடலை சௌந்தரராஜனின் குரலில் பாடும் இளைஞருடன் சேர்ந்து பாட ஆரம்பித்தார்.
பல்லவி முடிந்து சரணம் வந்தது. முதல் சரணத்தின் வரிகளை டிஎம்ஸ் குரலோன் பாடியதும் பிபிஎஸ் தொடர வேண்டும். பாட்டில்’சென்றேன்’என்ற டிஎம் எஸ் குரலுக்குப் பதிலாக ’ஊஹும்’என்று ஸ்ரீநிவாஸ் முனகியபோது என் மண்டைக்குள் மின்னல் அடித்தது. நேற்று அறைக் கதவைத் தட்டியதும் இதே ஹூம்தானே பதிலாக வந்தது. ஏன் என்னால் அதை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை? என்று யோசித்தேன். அண்மைக் காலமாக அவர் அதிகம் பாடவில்லை. ஆனால் அவர் பாடல் ஒலிபரப்பாகாத நாள் இல்லையே? இருந்தும் ஏன் எனக்குப் பிடிபட வில்லை? பழைய பாடல்களை மறந்து கொண்டிருக்கும் புதிய தலைமுறை யைச் சேர்ந்தவனாகி விட்டேனா? நான் யோசித்துக் கொண்டே அவர் பாடுவதைக் கவனித்தேன். பாடலின் இரண்டாவது சரணத்தைப் பாடிக் கொண்டிருந்தார்கள் . நானும் மனசுக்குள் பாடிக் கொண்டிருந்தேன். 'என் விழியில் நீ இருந்தாய் உன் வடிவில் நானிருந்தேன்' என்பது வரி. டிஎம்ஸ் குரலோன பாடிய அதே வரியையே - உன் விழியில் நானிருந்தேன் -என்று பிபிஎஸ்ஸும் பாடினார். நான் உணர்ச்சிவசப்பட்டு 'அய்யோ தப்பு' என்றது பிபிஎஸ் சுக்குக் கேட்டு விட்டது. கை நீட்டி ஆர்க்கெஸ்டிராவை நிறுத்தினார். சைகை காட்டி என்னை மைக் அருகில் வரச் சொன்னார். போய் நின்றேன். முதுகில் தட்டி '' அந்த லைனைப் பாடிடுங்க'' என்றார்.
கொஞ்சம் தயங்கி நிறையப் பயந்து வாயைத் திறந்தேன். என் விழியில் நீ இருந்தாய்' என்றார் டிஎம் எஸ் எதிரொலி.’உன் வடிவில் நானிருந்தேன்' என்று பிபிஎஸ் சாக மாறினேன் நான். நீயின்றி நானில்லை; நானின்றி நீயில்லை என்ற வரிகளை மூன்று குரல்கள் பாடின. வாழ்நாளில் நான் முதலும் கடைசியுமாக மேடையில் பாடியது அது மட்டுமே.
வார இதழில் பணியாற்றிய காலத்தில் ஒரு சினிமா சிறப்பிதழுக்காக பி பி ஸ்ரீநிவாசைப் பேட்டி காணத் திட்டமிட்டேன்.அவரை நெருங்க மேற்சொன்ன நிகழ்ச்சிதான் திறப்பாக அமைந்தது. சென்னை ராதாகிருஷ்ணன் சாலையி லிருந்த தனது இரண்டாவது வீடான டிரைவ் இன் உட்லாண்ட்சில்தான் அவரைச் சந்தித்தேன். இப்போது முகத்தில் சுருக்கதின் தோது கூடி யிருந்தது. சட்டைப்பையில் கலர் பேனாக்களின் எண்ணிக்கையும்
கூ டியிருந்தது. பழைய சம்பவத்தைச் சொன்னபோது முதன்முறை சிரித்ததுபோல ஒரு மாத்திரைச் சிரிப்பு. பேட்டியாக வேண்டாம்.பேசுவோம் அதிலிருந்து தேவையானதை எடுத்து வெளியிட்டுக் கொள்ளலாம் என்று யோசனை சொன்னார். சரி என்று ஒப்புக் கொண்டேன். ஆனால் அந்தக் கட்டுரையை எழுதவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று:பேச்சில் காரசாரமாக எதுவும் இல்லை. எல்லாரைப் பற்றியும் மிகையாவே பாராட்டி யிருந்தார். அது அவருடைய சுபாவமாகவும் இருக்கலாம். இரண்டாவது காரணம்: அவர் போட்ட நிபந்தனை. அவர் எழுதிய கவிதையை - எட்டு மொழிகளில் சுமார் இரண்டு லட்சம் கவிதைகள் எழுதி இருக்கிறேன் என்றார் - இதழில் வெளியிட வேண்டும். கவிதையைப் பற்றியும் பி.பி.ஸ்ரீநிவாசைப் பற்றியும் எனக்கு உயர்வான கருத்துகள் இருந்தன. எனவே கவிதையை வெளியிடுவ தற்கில்லை என்றேன். 'அப்ப இதுவும் வேண்டாம்'.
சரி. என்று விடை பெற்றேன். அதன் பின்னர் அதே உட்லாண்ட்ஸ் டிரைவ் இன் - இல் அவரைப் பலமுறை பார்த்திருக்கிறேன். முதலில் வணக்கம் தெரிவித்து நகர்ந்திருக்கிறேன். பின்னர் அதுவுமில்லை. நாளடைவில் அவருக்கு என்னை மறந்தே போயிற்று. கடைசியாக நான் அவரைப் பார்த்ததும் அதே டிரைவ் இன்னில்தான். 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம். பழசைப் பற்றி எதுவும் சொல்லாமல் முதுமையைச் சுமந்து குனிந்து தளர் நடையில் வந்தவரை நெருங்கி வணக்கம் போட்டேன். தலையசைத்து நடந்தார். அந்த நாளுக்கு இரண்டு மாதங்களுக்குப்பின் டிரைவ் இன் இல்லை.ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அந்த இடத்தின் நித்திய விருந்தாளியான பி.பி ஸ்ரீநிவாசும் இல்லை.
↧
ஒரு மீள் பதிவு - கலாப்ரியாவின் ’ நான் நீ மீன்’ தொகுப்பு வெளியீடு
எல்லாருக்கும் வணக்கம்.
நண்பர் கலாப்ரியாவின் புதிய கவிதைத் தொகுப்பை வெளியிட்டுப் பேசும் இந்த வாய்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. அதற்காக நண்பர் மனுஷ்யபுத்திரனுக்கும் உயிர்மை பதிப்பகத்துக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கே வெளியிடப்பட்ட 'நான் நீ மீன்' தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கவிதைகளில் எனக்குப் பிடித்த ஒரு கவிதையை வாசித்து என்னுடைய பேச்சைத் தொடர விரும்புகிறேன். 'மந்திரச் சிமிழ்' என்ற கவிதை எனக்குப் பிடித்துப் போக முதல் காரணம் - அது கவிதையாக இருக்கிறது. கவிதையல்லாத நிறைய சமாச்சாரங்களுக்கு இடையில் ஒரு கவிதையை வாசிக்கக் கிடைத்த மகிழ்ச்சியால் பிடித்துப் போனது. இரண்டாவது காரணமும் இருக்கிறது. சுய நலமான காரணம். அது என்னவென்பதைக் கவிதையை வாசித்து முடிப்பதற்குள் நீங்களே புரிந்து கொள்வீர்கள். இனி கவிதை.
இதை
வாசிக்கத் தொடங்கி விட்டீர்களா,
எனில் நீங்கள்தான்
ஏழு கடல்தாண்டி
ஏழுமலைதாண்டி
மந்திரவாதியின் உயிர் இருக்கும்
சிமிழ் தேடிப் போகும் இளவரசன்.
முதல் கடலின் கரையில்
நம்பிக்கையளிக்கும் விதமாய்
'உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது' என்கிறது
பிரமிளின் வண்ணத்துப் பூச்சி
மலையேறி இறங்கிக்
கடலேகும் முன் கழிமுகத்தில்
அள்ளிப் பருகிய நீரில்
சுகுமாரன் கை கவிழ்த்த நீரும்
கலந்திருக்கிறது
கானகமொன்றின் இசை
உங்கள் முகம் கை கழுத்தைத்
தழுவி உவகையுறுகிறது
நகுலனின் அம்மா என
'நண்பா, அவள்
எந்தச் சுவரில்
எந்தச் சித்திரத்தைத் தேடுகிறாள்' என
அவர் காதில் விழும் குரலை
நீங்களும் செவியுறுகிறீர்கள்
அது அவரது அம்மாவா
கொல்லிப் பாவைகளா
தீவை விட்டுத் தெப்பத்தை
அலையுள் சரிக்கும்பொழுது
கரையில் வேறெதுவும்
செய்ய முடியாமல்
ஒதுங்கப் பாடை நிழலுமின்றிப்
பார்த்துக் கொண்டிருக்கிறது
ஞானக்கூத்தனின் நாய்
தெப்பம் சிதையக்
கடலுக்குக் கீழ்
ஓட்டமும் நடையுமாய்
அலைந்து கொண்டிருக்கின்றன
தேவதச்சனின் அன்பின் சிப்பிகள்
பொன்னிலைகள் ஆபரணமாய் உதிர்ந்து கிடக்கும்
மரத்தின் கழுத்தைக் காலடி எனக் கற்பித்து
இளைப்பாறியதை நினைக்கக்
கவ்விக்கொள்ளும் தேவதேவனின் வெட்கம்
கண்டு கொள்கிறீர்கள்
பைய அருகிருந்து
குருடனின் சுயமைதுனம் பார்க்கும்
ஜோடிக் கண்களென
இரண்டு வண்டுகளைச் சிமிழுக்குள்
எதில் மந்திரவாதியின் உயிர்
படைப்பின் மகத்துவம் புரிந்த
வாசகன் நீங்கள்
கொல்ல மனமின்றி
இரண்டையும் தப்பவிட்டு
மறுபடியும் தேடத் துவங்குகிறீர்கள்
இம்முறை என்னோடு.
நண்பர் கலாப்ரியாவின் புதிய கவிதைத் தொகுப்பை வெளியிட்டுப் பேசும் இந்த வாய்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. அதற்காக நண்பர் மனுஷ்யபுத்திரனுக்கும் உயிர்மை பதிப்பகத்துக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கே வெளியிடப்பட்ட 'நான் நீ மீன்' தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கவிதைகளில் எனக்குப் பிடித்த ஒரு கவிதையை வாசித்து என்னுடைய பேச்சைத் தொடர விரும்புகிறேன். 'மந்திரச் சிமிழ்' என்ற கவிதை எனக்குப் பிடித்துப் போக முதல் காரணம் - அது கவிதையாக இருக்கிறது. கவிதையல்லாத நிறைய சமாச்சாரங்களுக்கு இடையில் ஒரு கவிதையை வாசிக்கக் கிடைத்த மகிழ்ச்சியால் பிடித்துப் போனது. இரண்டாவது காரணமும் இருக்கிறது. சுய நலமான காரணம். அது என்னவென்பதைக் கவிதையை வாசித்து முடிப்பதற்குள் நீங்களே புரிந்து கொள்வீர்கள். இனி கவிதை.
இதை
வாசிக்கத் தொடங்கி விட்டீர்களா,
எனில் நீங்கள்தான்
ஏழு கடல்தாண்டி
ஏழுமலைதாண்டி
மந்திரவாதியின் உயிர் இருக்கும்
சிமிழ் தேடிப் போகும் இளவரசன்.
முதல் கடலின் கரையில்
நம்பிக்கையளிக்கும் விதமாய்
'உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது' என்கிறது
பிரமிளின் வண்ணத்துப் பூச்சி
மலையேறி இறங்கிக்
கடலேகும் முன் கழிமுகத்தில்
அள்ளிப் பருகிய நீரில்
சுகுமாரன் கை கவிழ்த்த நீரும்
கலந்திருக்கிறது
கானகமொன்றின் இசை
உங்கள் முகம் கை கழுத்தைத்
தழுவி உவகையுறுகிறது
நகுலனின் அம்மா என
'நண்பா, அவள்
எந்தச் சுவரில்
எந்தச் சித்திரத்தைத் தேடுகிறாள்' என
அவர் காதில் விழும் குரலை
நீங்களும் செவியுறுகிறீர்கள்
அது அவரது அம்மாவா
கொல்லிப் பாவைகளா
தீவை விட்டுத் தெப்பத்தை
அலையுள் சரிக்கும்பொழுது
கரையில் வேறெதுவும்
செய்ய முடியாமல்
ஒதுங்கப் பாடை நிழலுமின்றிப்
பார்த்துக் கொண்டிருக்கிறது
ஞானக்கூத்தனின் நாய்
தெப்பம் சிதையக்
கடலுக்குக் கீழ்
ஓட்டமும் நடையுமாய்
அலைந்து கொண்டிருக்கின்றன
தேவதச்சனின் அன்பின் சிப்பிகள்
பொன்னிலைகள் ஆபரணமாய் உதிர்ந்து கிடக்கும்
மரத்தின் கழுத்தைக் காலடி எனக் கற்பித்து
இளைப்பாறியதை நினைக்கக்
கவ்விக்கொள்ளும் தேவதேவனின் வெட்கம்
கண்டு கொள்கிறீர்கள்
பைய அருகிருந்து
குருடனின் சுயமைதுனம் பார்க்கும்
ஜோடிக் கண்களென
இரண்டு வண்டுகளைச் சிமிழுக்குள்
எதில் மந்திரவாதியின் உயிர்
படைப்பின் மகத்துவம் புரிந்த
வாசகன் நீங்கள்
கொல்ல மனமின்றி
இரண்டையும் தப்பவிட்டு
மறுபடியும் தேடத் துவங்குகிறீர்கள்
இம்முறை என்னோடு.
நண்பர்களே, இன்று இங்கே தங்களுடைய புதிய தொகுப்புகளை வெளியிட்ட இரண்டு கவிஞர்களுடனும் எனக்குத் தொடர்பும் உறவும் இருக்கிறது. கலாப்ரியா, அய்யப்ப மாதவன் இரண்டு பேருடைய தலா ஒரு தொகுப்புக்கு முன்னுரை எழுதியிருக்கிறேன். அந்த அடிப்படையில் இந்த மேடையில் நிற்பது மகிழ்ச்சியளிக்கிறது. பொதுவாகவே கவிதை பற்றிப் பேசுவதில் எனக்கு மகிழ்ச்சி உண்டு. கவிதை ஆர்வலனாக நான் வாசிக்கிற சிந்திக்கிற யோசிக்கிற மொழியில் கவிதை என்னவாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி. கவிஞனாக நானும் அதே மொழியில் எழுதுகிறவன். அதனால் கவிதையைப் பற்றிய பேச்சு நான் எங்கே இருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்ளுகிற மகிழ்ச்சி. ஆனால் எல்லா சமயத்திலும் கவிதையைப் பற்றி மகிழ்ச்சியாகவே பேசிவிட முடிவதில்லை.
தமிழில் இன்று ஏராளமான கவிதைகள் இருக்கின்றன. அதை விட அதிக எண்ணிக்கையில் கவிஞர்களும் இருக்கிறார்கள்.எல்லாக் கவிதைகளையும் எல்லாக் கவிஞர்களையும் பற்றிப் பேசப் பேராசை இருக்கிறது. ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லை. சில கவிதைகளைப் பற்றிப் பேசலாம். அது நம்முடைய இலக்கிய அறிவுக்கு நல்லது. சில கவிஞர் களைப் பற்றிப் பேசலாம். அது நம்முடைய இலக்கிய வளர்ச்சிக்கு உதவும். சில கவிதைகளையும் சில கவிஞர்களையும் பற்றிப் பேசாமலிருக்கலாம். அது நம்முடைய உடல் நலத்துக்கும் மனநலத்துக்கும் நல்லது. அண்மையில் கவிஞர் ஒருவர் தொலைபேசியில் அழைத்திருந்தார். அவருடைய வெளிவரவிருக்கும் தொகுப்புக்கு முன்னுரை எழுதித் தரச் சொல்லிக் கேட்டார். ஏற்கனவே முன்னுரைக் கவிஞன் என்ற நற்பெயரைப் பெற்று விட்டேன். அதனால் இனிமேல் யாருக்கும் முன்னுரை எழுதுவதாக இல்லை. மன்னிக்கவும் என்றேன். மறுமுனையிலிருந்து வசவுமழை பெய்யத் தொடங்கியது. இதுவரை நான் முன்னுரை எழுதிய கவிதைப் புத்தகங்களின் ஆசிரியர்களின் பெயரைக் குறிப்பிட்டு அதையெல்லாம் விட மோசமான கவிதையைத் தான் எழுதவில்லை என்று ஆர்ப்பாட்டம் செய்து விட்டார். அவர் பேசியது வெளிநாட்டிலிருந்து என்பதால் தப்பித்தேன். உள்ளூராக இருந்தால் அவர் பேச்சில் தெரிந்த ஆவேசத்துக்கு என்னை தேக உபத்திரவம் செய்திருந்தாலும் ஆச்சரியமில்லை. அதிலிருந்து ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டேன்.கவிஞன் என்று அறியப்பட கவிதை மட்டும் எழுதினால் போதாது காட்டுக் கூச்சல் போடவும் தெரிந்திருக்க வேண்டும். தன்னுடைய கவிதைகள் மூலமாகவே தன்னை நிறுவிக் கொண்டவர் கலாப்ரியா. எழுத வந்த நாள் முதல் இன்றுவரை அவரைப் பின் தொடர்பவனாகவே இருக்கிறேன். அதிகம் பேச வாய்ப்புத்தரும் கவிதைகளை எழுதியிருப்பவர். கவிதைகளைப் பற்றி விரிவாக ஒரு முன்னுரையிலும் சுருக்கமாக இரண்டு மேடைகளிலும் பேசியிருக்கிறேன். இங்கே பேசக் கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. அதற்குக் காரணமும் அவர்தான். நினைவின் தாழ்வாரங்கள் என்ற அவருடைய புத்தகத்தின் முன்னுரையில் ஒரு வாசகம் இருக்கிறது. 'பாராட்டை மட்டுமே விரும்புகிற சாதாரணனாகிய நான்' என்று ஒரு வாசகம். அந்த வாசகத்தைப் படித்த பிறகு அவரைப் பற்றிப் பேச ஒருவிதமான தயக்கம் வந்து விட்டது. யோசித்துப் பார்த்தால் எழுதுகிற எல்லாரும் பாராட்டை மட்டுமே விரும்புகி றவர்கள்தான். அதை அவர்கள் அவ்வளவு வெளிப் படையாகச் சொல்லு வதில்லை. கலாப்ரியா சொல்கிறார். அந்தப் பாசாங்கு இல்லாத தன்மைதான் அவருடைய இயல்பு. அவரது கவிதைகளின் இயல்பு.
நவீனக் கவிஞர்களில் தீர்க்கதரிசி கலாப்ரியா என்று நினைக்கிறேன். இன்றைக்கு எழுதப்படும் கவிதைகளைப் பற்றி மிக நீண்ட காலத்துக்கு முன்பே ஆருடம் எழுதியவர் .
'படிம
உருவக
குறியீட்டு இடையீடில்லாத
நிர்வாணக் கவித்துவம் வேண்டி
நீ
எப்போது தியானிக்கப் போகிறாய்? என்பது அவர் கவிதை. இன்று எழுதும் புதியவர்கள் இந்த தியானத்தைத்தான் கவிதையில் மேற்கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு எழுதப்படுகிற பெரும்பாலான கவிதைகள் 'திறந்த கவிதைகளாக' plain poetry ஆக இருப்பவை. கலாப்ரியாவைப் படித்துத்தான் இதைச் செய்தார்கள் என்று சொல்ல வரவில்லை.கவிதை ஆக்கத்தில் நிகழும் தொடர்ச்சியாக இதைச் சொல்லலாம். அதற்கு உந்துதல் கொடுத்த கவிஞர்களில் ஒருவர் கலாப்ரியா.
கலாப்ரியா கவிதைகளில் நான் முக்கியமானதாகக் கருதுவது மூன்று அம்சங்களை.
ஒன்று; காட்சிப்படுத்துதல்.நான்கைந்து காட்சிகளை ஒன்றின் பின் ஒன்றாகவோ பக்கம் பக்கமாகவோ முன்னும் பின்னுமாகவோ அடுக்கி வைத்து விட்டுக் கவிதை என்கிறார். வாசிக்கவும் வாசித்ததும் இதைப் போல நாமும் எழுதி விட முடியுமே என்று சுலபமாக எண்ணவைக்கிற கவிதையாக்கம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. அந்தக் காட்சிகளின் தேர்வில் அவர் காட்டுகிற கவனமும் அவை ஒன்று சேரும்போது பொருள்தருவதாக அமைவதும்தான் கவிதையாக மாறுகிறது.
இரண்டாவது: நவீன கவிதையில் ஒரு இடத்தின் சித்திரமும் அங்கே வாழ்பவர்களின் சூழலையும் சித்தரித்தவர் கலாப்ரியா. ஒரு சமூகத்தின் அகப் பிரச்சனைகளை அவர் அதிகம் ஆராயவில்லை. புறத் தோற்றங்களைச் சார்ந்து அந்த சமூகத்தின் அந்த மனிதர்களின் இருப்பைப் பற்றிச் சொல்லி யிருக்கிறார். இந்தத் தொகுப்பிலும் அந்த மாதிரியான ஒரு கவிதை இருக்கிறது. வீடுகளையொட்டிய வாய்க்காலில் நல்ல நீர் ஓடியபோது அதை எல்லாரும் பயன்படுத்துகிறார்கள். குழந்தைகள் வாழைமட்டையில் தெப்பம் செய்து விளையாடுகிறார்கள். காலப்போக்கில் வாய்க்கால் சாக்கடையாக மாறுகிறது. நீர் தேங்குகிறது. அதில் பிணம் மிதக்கிறது. இப்போதும் எல்லாரும் கழியுடன் சாக்கடையை நெருங்குகிறார்கள். மிதக்கிற பிணம் தங்கள் வீட்டு எல்லைக்குள் வந்து விடக் கூடாது என்று கழியால் தள்ளி விடுகிறார்கள். 'வளர்ச்சி' என்ற கவிதை இது. இந்தச் சித்திரமும் அதற்குள் இருக்கும் கதைத்தன்மையும் தான் கவிதை ஆகின்றன. இது அவர் கவிதைகளில் முக்கியமான அம்சம். கலாப்ரியா சிறுகதைகள் எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் அவர் எழுதாமல் விட்ட பல சிறுகதைகள்தாம் அவரிடம் கவிதையாகியிருக்கின்றன.
மூன்றாவது: தமிழ்க் கவிஞர்களில் வாசகர்களின் பங்களிப்பை அதிகம் கேட்கிற கவிஞர் கலாப்ரியா. வாசகனை சக கவிஞனாக்குபவை அவரது கவிதைகள். நான்கைந்து காட்சிகளை முன்னால் வைத்து விட்டு நகர்ந்து விடுகிறார். அவற்றை இணைக்கிற வேலை வாசகனுடையது. அவன் அதைச் செய்கிறபோதுதான் கவிதை முழுமையடைகிறது.
இப்படி நிறையப் பேச இடமளிப்பவை கலாப்ரியாவின் கவிதைகள். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக எழுதி வருபவர். அவருடைய கவிதைகளின் மொத்தத் தொகுப்பு 2000 ஆவது ஆண்டில் தமிழினி வெளியீடாக வந்தது. அதற்குப் பிறகும் இரண்டு தொகுப்புகள் வந்திருக்கின்றன. post complete collection வரிசையில் இந்த 'நான் நீ மீன்'மூன்றாவது தொகுப்பு. மூன்று தலை முறைகளைத் தாண்டியும் பேசப்படும் பெயராகக் கலாப்ரியா இருப்பது அவருடைய வாசகனாக எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. 'பெயர்களின் நிழலை அழிய விடுவதில்லை ஒளி' என்று இந்தத் தொகுப்பில் ஒரு கவிதையில் அவரே குறிப்பிடுகிறார்.
பெயர்களைப் பற்றிச் சொல்லும்போது ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. கலாப்ரியா சம்பந்தப்பட்டதுதான்.அவருடைய 'வனம் புகுதல்' தொகுப்புக்கு நான் முன்னுரை எழுதியிருக்கிறேன். முன்னுரையை எழுதி அவருக்கு அனுப்பிய பிறகு அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. 'இந்த முன்னுரையில் 37 இடங்களில் 'கலாப்ரியா' என்று என் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். படிக்க சந்தோஷமாக இருக்கிறது' என்று எழுதியிருந்தார். படித்ததும் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. என்னடா இது, ஒருவன் கிட்டத்தட்ட ஒரு மாதம் இந்த ஆளின் கவிதைகளை வாசித்து, அரை மாதம் குறிப்பெடுத்து, ஐந்தாறு நாள் வார்த்தை வார்த்தையாகத் திரட்டி பத்து பக்கங்களுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அந்த ஆள் இத்தனை இடத்திலே என் பேர் வந்திருக்கு என்று பதில் எழுதிறாரே என்று இருந்தது. யோசித்துப் பார்த்த போது இந்த 'சௌந்தர்யக் கிறுக்குதானே கவிதைக்கு அடிப்படை' என்ற ஞானம் வந்தது. சிரித்துக் கொண்டேன். இந்தப் பேச்சிலும் 'கலாப்ரியா' என்ற பெயரை 15 முறை மனநிறைவுடன் குறிப்பிட்டிருக்கிறேன் என்ற அறிவிப்புடன் என் பேச்சை நிறைவு செய்கிறேன். எல்லாருக்கும் வணக்கம். நன்றி.
↧
↧
பு.பு. (அல்லது) B W வின் குறிப்புகள்
''இவ்வ்வ்ளோ புக்கு வெச்சிருக்கிங்களே, எதுக்கு?'' கேட்டது என் பக்கத்து வீட்டுத் தோழி கரிஷ்மா. (வயது ஆறு). என் புத்தக அலமாரியைப் பார்த்து விட்டு நிறையக் கேள்விகளைக் கேட்டுத் துளைத்துக் கொண்டிருந்தாள். நானும் அவளுக்கு அனுசரணையான பதில்களாகச் சொல்லிக் கொண்டிருந்தேன்.
''எதுக்கா, படிக்கிறதுக்குத்தான்''
''இவ்ளோவையும் படிக்க முடியலேன்னா?''
''படிக்க முடியலேன்னா தினத்துக்கு ஒரு புக்கா வேவிச்சுச் சாப்ட்றுவேன்''
''அப்ப என்ன ஆவீங்க?''
'' புக்கைச் சாப்டுச் சாப்டுப் புழுவாயிடுவேன்''
''அப்ப உங்கள நா என்னான்னு கூப்றதுடது?''
''புத்தகப் புழுன்னு கூப்டுக்கோ''
''பெருசா இருக்கே?''
அவள் ஆங்கிலம் வழிப் பயில்பவள். அதனால் '' புக் வோம்னு கூப்டலாம்'' என்றேன். அது புத்தகப் புழுவைவிடச் சிக்கலாக இருந்தது அவளுக்கு. ''பி.டபிள்யூ'' என்று சுருக்கிக் கொடுத்தேன். அதுவும் சரியாகவில்லை. நீண்ட நேரம் கண்களை மூடி ஆலோசனையில் மூழ்கினாள். கடைசியாகத் தீர்மானத்துக்கு வந்து கண்களைத் திறந்து சிரித்தபடி 'புபு' என்று அழைத்தாள். முதலில் சின்ன அதிர்ச்சியும் பிறகு பெரிய மகிழ்ச்சியும் தோன்றியது. முதலாம் வகுப்புப் படிக்கும் சிறுமி தானாக ஒரு சொற் சுருக்கத்தைக் கண்டுபிடித்த ஆச்சரிய அதிர்ச்சி. அதுவும் என்னைச் சரியாக உருவகப் படுத்தி விட்டாள் என்பதில் பெரிய மகிழ்ச்சி.
புத்தகங்களின் காதலன் நான் . மனிதர்களுடன் தொடர்பு கொள்ளும்போது புத்தகங்களை உணர்கிறேனா என்பது நிச்சயமில்லை. ஆனால் புத்தகங்களைத் தொடும்போது ஓர் உயிரைத் தொடுவதுபோலத்தான் இருக்கிறது. அவற்றுடன் உறவாடும்போது மனிதர்களுடன் புழங்குவதுபோலத்தான் இருக்கிறது. அதனால் என் குட்டித் தோழி 'புபு' என்று அழைத்ததும் மனம் துள்ளிக் குதித்ததை சகஜமாகவே எடுத்துக் கொண்டேன்.
என்னை விடவும் தீவிரமான புத்தகப் புழுக்கள் இருக்கிறார்கள்.தெரிந்தவர்களா கவும் தெரியாதவர்களாகவும். அவர்களில் ஒரு புழு பிரதீப் செபாஸ்டியன். பெங்களூருக்காரர். தி ஹிந்து, டெக்கான் ஹெரால்ட், பிசினஸ் வேர்ல்டு போன்ற ஆங்கில நாளேடுகளில் இலக்கியப் பத்திகளும் தெஹல்கா, ஓப்பன், காரவன் இதழ்களில் கட்டுரைகளும் எழுதுகிறார். பிரதீப்பின் புத்தகக் காதல் சற்று வித்தியாசமானது. அவருடைய வாசிப்பில் புத்தகத்தின் உள்ளடக்கத்துக்கு இடமிருக்கிறது. அதை விட அவரைக் கவர்வது புத்தகத்தின் திட வடிவம். ஒரு புத்தகத்தின் அட்டை, தாள், கட்டுமானம். அதன் பதிப்பு வரலாறு, அதன் வாசனை, அச்சு எழுத்துகளின் அமைப்பு, எழுத்துருக்கள், சமயங்களில் அவற்றிலுள்ள எழுத்துப் பிழைகள் ஆகியவைதாம். இவற்றை யெல்லாம் விலாவாரியாகச் சிலாகித்து ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். புத்தகத்தை அடுக்கி வைப்பது, புத்தக அலமாரிகள், இரண்டாம் கை புத்தகங்கள், புத்தகத் திருட்டு, கையொப்பமிட்ட பிரதிகள் என்று புத்தகக் காதலின் எல்லா அம்சங்களையும் விளக்கிச் சொல்லுகிறார். சமீப காலத்தில் படித்த புத்தங்களில் மிகச் சுவாரசியமாக இருந்த புத்தகம் பிரதீப் செபாஸ்டியனின் ' தி க்ரோனிங் ஷெல்ஃப்' (The goaning shelf ). புழு அறியும் புழுவின் கால். எனினும் புத்தகத்தில் சொல்லப்படுவது போன்ற அத்தனை நுணுக்கமானதல்ல என்னுடைய காதல். நான் புத்தகத்தின் உள்ளடக்கதிலேயே கவனம் கொள்கிறேன். அதன் புற அழகில் லயிக்க முடியாமற் போவதற்குக் கார ணம் தமிழ்ப் பதிப்பாளர்கள். நாம் மனதுக்குள் மிகவும் செல்லம் பாராட்டும் பல புத்தகங்களும் வடிவமைப்பில் எந்த ஈர்ப்பும் இல்லாதவை. புதுமைப்பித்தன், ஜானகிராமன் ஆகியோரது சிறுகதைகளின் முழுத் தொகுப்பை கோரமான வடிவமைப்பிலும் குறைந்த பட்சம் பக்கத்துக்கு ஒரு பிழையுடனும் பதினாறு பக்க ஃபாரத்துக்குள் நாலைந்து எழுத்துருக்களிலும் வாசித்து நொந்திருக்கிறேன். கணிணித் தொழில் நுட்பத்துக்கு நன்றி. இன்று சில பதிப்பகங்களாவது புத்தகங்களை நேர்த்தியான வடிவைப்பில் வெளியிடுகின்றன. பிரதீப்பின் புத்தகத்தில் விவாதிக்கப்படும் அம்சங்களில் வடிவ நேர்த்தியும் ஒன்று.
புத்தகக் காதலர்களின் பேராசைகளில் ஒன்று ஒரு புத்தகத்தின் முதல் பதிப்பை உரிமையாக்கிக் கொள்வது என்கிறது பிரதீப்பின் ஒரு கட்டுரை. பிரபல எழுத்தாளர்களுடைய புத்தகங்களில் முதல் பதிப்பை வைத்திருப்பதில் ஏதோ கோஹினூர் வைரத்தையே சட்டைப் பைக்குள் வைத்திருக்கும் கர்வம் அவர்களுக்கு ஏற்படுகிறதாம். முதல் பதிப்பைக் கைவசப்படுத்துவதற்காக என்ன விலை கொடுக்கவும் எந்தத் தியாகம் செய்யவும் தயாராக இருப்பார்களாம்.
ரஷ்யாவின் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர் பிரபல எழுத்தாளர் விளாதிமீர் நபக்கோவ். ஆரம்பத்தில் தனது படைப்புகளை ரஷ்ய மொழியில் எழுதிய நபக்கோவ் ஒன்பது நாவல்களுக்குப் பிறகு ஆங்கிலத்திலேயே எழுத ஆரம்பித்தார். அவருடைய மிகப் பிரபலமான நாவல் 'லோலிடா'. மத்திய வயதுக்காரரான ஓர் இலக்கியப் பேராசிரியர் பன்னிரண்டு வயதுச் சிறுமியிடம் காதல் கொள்வதுதான் நாவலின் கதை. இது ஒழுக்கக் கேட்டை நியாயப்படுத்தும் நாவல் என்று இங்கிலாந்து, பிரான்ஸ், முதலான பல நாடுகளிலும் தடை செய்யப்பட்டது. இந்த நாவலை நபக்கோவ் முதலில் ஆங்கிலத்தில்தான் எழுதினார். வெளிவந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவரே ரஷ்ய மொழியிலும் மொழி பெயர்த்தார்.
ரிக் கெகோஸ்கி என்ற அரிய புத்தகங்களின் விற்பனையாளர் 1988 ஆம் ஆண்டு தனது கேட்லாகில் 'லோலிடா' ஆங்கில நாவலின் முதல் பதிப்புப் பிரதி விற்பனைக்கு இருப்பதாக அறிவித்தார். விலை 3250 பவுண்டுகள். இந்திய ரூபாயில் சுமாராக இரண்டே முக்கால் லட்சம். இதை எழுதிய நாளின் நிலவரப்படி 2,77, 625 ரூபாய். சில வாரங்களுக்குப் பிறகு கெகோஸ்கிக்கு ஆங்கில எழுத்தாளர் கிரஹாம் க்ரீன் ஒரு கடிதம் எழுதினார். ' நாவலாசிரியர் நபக்கோவ் கையெழுத்துப் போட்ட 'லோலிடா' வின் முதல் பிரதி என்னிடம் இருக்கிறது. விலைக்கு வாங்கிக் கொள்ளச் சம்மதமா? '. புபுவான கெகோஸ்கி உடனே பதில் போட்டார். 'சம்மதம் விலை 4000 பவுண்ட்'. கிரயம் முடிந்து புத்தகம் கைக்கு வந்தது. 'விளாதிமீர் நபக்கோவிடமிருந்து கிரஹாம் க்ரீனுக்கு , நவம்பர் 1959' என்ற வாசகங்களுடன் பச்சை மசியில் வரைந்த பட்டுப் பூச்சியின் படம் சகிதமிருந்த முதல் பக்கத்தைப் பார்த்ததும் கெகோஸ்கி தன்னையே மெச்சிக் கொண்டார். அடுத்த நாளே புத்தகத்தை 9000 பவுண்டுக்கு விற்பனையும் செய்தார். பிரபல ராக் பாடகர் எல்டன் ஜானின் பாடலாசிரியரான பெர்னி டாபின் அதை வாங்கினார். சங்கதி கையை விட்டுப் போன பின்னர்தான் பொன் முட்டை போடும் வாத்தை அறுத்த முட்டாள்தனத்தை உணர்ந்தார் கெகோஸ்கி. அதைத் திரும்ப வாங்க முயற்சி செய்தார். நடக்கவில்லை. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவழியாக அந்த அபூர்வப் பிரதியை மறுபடியும் வாங்கினார். விலை 13,000 பவுண்டுகள். பத்தாண்டுகள் வரை அந்தப் பொக்கிஷத்தைத் தன்வசம் வைத்திருந்தார். அதற்குப் பிறகு ஒரு புத்தகத்துக்கு என்ன மதிப்பு என்று காட்டும் குறுகுறுப்புடன் அதை விற்றார். உலகின் மிகப் பெரிய அருங்கலைப் பொருள்களின் விற்பனையகமான கிறிஸ்டீஸின் நியூயார்க் கிளையில் நபக்கோவ் கையெழுத்திட்ட 'லோலிடா' நாவலின் முதல் பிரதி யை நீங்கள் வாங்கலாம். விலை 2,64,000 டாலர்கள் மட்டுமே. இந்திய மதிப்பில் ......?
இருபது ஆண்டுகளுக்கு முன்பு எனக்குச் சில புத்தகங்களும் பத்திரிகைகளும் கிடைத்தன. அன்றைய நிலவரப்படி இந்தியச் சந்தைகளில் கிடைப்பதற்கு அரியவை. ராமச்சந்திரன் என்பவர் தனது சேகரிப்பிலிருந்தும் வேறு ஏதோ புத்தகச் சுரங்கத்திலிருந்தும் திரட்டிய மாணிக்கங்களை பாதி விலைக்கும் முக்கால் விலைக்குமாக விற்பனை செய்தபோது அகப்பட்டவை அவை. பொருளாதார முடையோ வீட்டிலிருப்பவர்களின் தொணதொணப்போ அவரை அதற்குக் கட்டா யப் படுத்தியிருந்தது. புத்தகப் புழுக்களின் நிரந்தர பயம் வீட்டவர்களின் வார்த்தைகளில் மறைந்திருக்கும் ஊசிகள்தாம். குளிர் சாதனப் பெட்டியோ குக்கரோ வாங்கும்போது கிடைக்கும் அட்டைப் பெட்டிகளை வருடக்கணக்காகப் பாதுகாக்க த் தயாராகும் குடும்பத்தினர் புத்தகங்களுக்கு மட்டும் வீட்டில் இட ஒதுக்கீட்டை அனுமதிப்பதில்லை.
எனக்குக் கிடைத்த மாணிக்கங்களில் ஒன்று 1960 களில் நடத்தப்பட்ட இலக்கிய இதழ். Plumed Horn என்று பெயர்.மெக்சிகோவிலிருந்து நடத்தப்பட்ட பத்திரிகை. ராய் சௌதிரி என்று ஓர் இந்தியப் பிரதிநிதியும் அதற்கு இருந்திருக்கிற ¡ர். எட்டு ஆண்டுகள் மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறது. அதன் 12 இதழ் எனக்குக் கிடைத்தது. ராக்வெல் ஜோதோரோவ்ஸ்கி என்ற பெண்கவிஞரின் கவிதைகள் வெளியான சிறப்பிதழ். அதிலிருந்து சில கவிதைகளைத் தமிழாக்கம் செய்திருக்கிறேன். இதழை மார்கரெட் ரண்டாலும் கணவர் செர்ஜியோ மாண்ட்ரகானும் ஆசிரியர்களாக இருந்து நடத்தி யிருக்கிறார்கள். இருவரும் விவாகரத்துச் செய்ததும் பத்திரிகையும் நிறுத்தப் பட்டு விட்டது. மார்க்கரெட் பெண்ணியத்தின் முக்கிய நூல்களில் ஒன்றாகக் கருதப்படும் 'Gathering Rage' என்ற நூலை எழுதியவர்.எழுபது வயது தாண்டிய இன்றும் உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறார். தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்கு நன்றி.இணையம் வழியாக அவரைத் தேடிப் பிடித்து விசாரித்த போது ராக்வெல் உயிருடன் இருப்பது தெரிந்தது. தொடர்பு கொண்டேன்.
ராக்வெல் ஜோதோரோவ்ஸ்கி
சில கவிதைகளையும் புகைப்படத்தையும் அனுப்பி வைத்தார். விஷயம் அதுவல்ல. Plumed Horn இதழின் பிரதி என்னிடம் இருக்கும் ரகசியம் பகிரங்கமா னது. 1500 டாலர் கொடுத்தால் தருவாயா என்று விசாரணைகள் வந்தன. பதில் அனுப்பவில்லை. 2000 டாலர் ? அதற்கும் பதில் அனுப்ப வில்லை. 'இரண்டாயிரம் டாலர் என்றால் சும்மாவா? கிட்டத்தட்ட ஒரு லட்சம் சாமி, விற்று விடு' என்றார் நண்பர். 'புழுக்கள் தங்கள் பிரபஞ்சத்தை விற்பதில்லை' என்றேன். அவருக்குப் புரியவில்லை.
எல்லா மனிதர்களையும் நேசித்து விட முடியாது என்பதுபோல எல்லாப் புத்தகங்களையும் வாசித்து விடவும் முடியாது. இரண்டும் சாத்தியமில்லை. வாசிக்கத் தகுதியானவை என்று உலகம் பாராட்டும் சில புத்தகங்களை வாசிக்காமல் இருப்பது இளம் தலைமுறை எழுத்தாளர்களின் மனநலத்துக்கு உதவும் என்கிறார் கனடிய நாவலாசிரியர், பத்தியாளர். கிராஃபோர்ட் கிலியன். அவர் சொல்லும் காரணம் விநோதமானது. வாசகர்களால் அதிகம் படிக்கப் படுவதும் எழுத்தாளர் களால் மிகவும் சிலாகிக்கப்படுவதுமான பத்து புத்தகங்களை அவர் பட்டியலிடுகிறார்.
''இவையெல்லாம் மோசமான புத்தகங்கள் என்ற அர்த்தத்தில் சொல்ல வில்லை. மிக நல்ல புத்தகங்கள். அதனால்தான் வா சிக்க வேண்டாம் என்று சிபாரிசு செய்கிறேன். இந்தப் புத்தகங்கள் இளம் மனதை ஆழமாகப் பாதிக்கும். நான் என்னுடைய விடலைப் பருவத்தில் சாலிங்கரின் The Catcher in the Rye நாவலை வாசித்தேன். அது ஏற்படுத்திய பாதிப்பில் நான் அதிக பட்சம் மூக்கால் அழுகிற ஸ்டெனோகிராபராகத்தான் ஆகியிருந்திருக்க வேண்டும். அந்த பாதிப்பிலிருந்து தப்ப நான் க டும் முயற்சி செய்ய வேண்டியிருந்தது. அதனால்தான் இப்படிச் சொல்கிறேன். தவிர இளம் எழுத்தாளர்கள் இந்த பாதிப்புக்கு உட்பட்டால் முன்னோடி எழுத்தாளர்களின் சாயலிலேயே எழுத ஆரம்பித்து விடுவார்கள். அது நல்லதல்ல. அமெரிக்க இலக்கியத்துக்கு ஒரு சாலிங்கர் போதும். எதற்குக் குட்டிக் குட்டியாகப் பல சாலிங்கர்கள்'' என்பது கிலியனின் வாதம். இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் நம்முடைய தேர்வைப் பொருத்தது. ஆனால் அவர் சொல்வது நிஜம். படிக்க வேண்டிய புத்தகங்கள்போலவே படிக்கக் கூடாத புத்தகங்களும் இருக்கின்றன. நோபெல் பரிசு பெற்றவர்களான அமெரிக்க எழுத்தாளர் ஹெமிங்வே, பிரிட்டிஷ் எழுத்தாளர் வில்லியம் கோல்டிங், ஜனரஞ்சக வாசகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட அயன் ராண்ட், ஹெரிச் சீகால் ஆகியோரின் புத்தகங்களைத்தான் படிக்கக் கூடாத புத்தகங்கள் என்று பட்டியலிடுகிறார். கிலியனின் பட்டியலுக்கு நேர் எதிராகப் படிக்க வேண்டாத தமிழ்ப் புத்தகங்களின் பட்டியல் ஒன்றைத் தயாரிக்கலாமா என்று யோசித்தேன். அதனால் ஏற்படவிருக்கும் ஜென்மப் பகை பயமுறுத்துகிறது.
எழுத்தாளர் ஜெயகாந்தன் 'நினைத்துப் பார்க்கிறேன்' என்ற புத்தகத்தில் தான் படிக்கப் பயந்த நூல் என்று ஒன்றைக் குறிப்பிடுகிறார். ஹிட்லர் எழுதிய மெய்ன் காம்ஃப் ( எனது போராட்டம்). இளம் பருவத்தில் வாசிக்க விரும்பி பக்திபூர்வமாகத் தொடங்கிப் பயந்துபோய்ப் பாதியில் நிறுத்திய ஒரு புத்தகம் இருக்கிறது. நானாக வாங்கிய முதல் பிரதி தவிர அவ்வப்போது அன்பளிப்பாக வும் அந்தப் புத்தகம் க்டைத்துக் கொண்டே இருந்தது. கிடைக்கும்போது எல்லாம் பயத்தில் அடிவயிறு கலங்கும். இந்தப் புத்தகத்தை வாசிக்கவே வேண்டாம் என்று மனம் முரண்டு பிடிக்கும். ஏனென்று இதுவரையிலும் புரியவே இல்லை.அந்தப் புத்தகம் - பகவத் கீதை.
(அந்திமழை ஜனவரி 2013 இதழில் வெளியானது. )
↧
விசாரணை
மலையாளசமூக, பண்பாட்டு உலகங்களில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசப்பட்டு வரும் பெண்பாத்திரம் குறியேடத்து தாத்ரி. பாலியல் குற்றஞ் சாட்டப்பட்டு சமுதாயத்திலிருந்து விலக்கப்பட்ட தாத்ரி ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமாகப் புரிந்துகொள்ளப்பட்டவள்.
நூற்றாண்டின் ஆரம்பத்தில் நெறி தவறிய காமக் குற்றவாளி. பின்னர் ஆணாதிக்க வெறிக்கு இரையான அப்பாவி. இன்று பெண்ணுரிமையின் முதல் மலையாளிக் குரல்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் பிறந்து அடுத்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்து மறைந்த குறியேடத்து தாத்ரி கேரள சமூக வரலாற்றில் இன்றும் வாழ்கிறாள். ஆண் மேலாதிக்கம் அதன் எல்லா விதமான பிற்போக்குக் குணங்களுடனும் பரவியிருந்த சமுதாயத்தில் ஓர் அபலைப்பெண் தனது உடலையே ஆயுதமாக்கி நடத்திய கலகம், குற்றஞ் சாட்டியவர்களையே குற்றவாளிகளாக்கியது.அன்றைய சமூகக் கட்டுப் பாடுகளையும் அநீதியையும் சவாலுக்கு அழைத்த தாத்ரி விரட்டப் பட்டாள். வாழ்வின் இறுதிக் காலங்களில் அவளுக்கு என்ன நேர்ந்தது என்று புறவுலகுக்குத் தெரியவில்லை. ஆனால் தாத்ரியின் முடிவிலிருந்துதான் கேரள சமூக வாழ்க்கையின் மறுமலர்ச்சிக் காலத்தில் முக்கியமான அத்தியாயங்களில் ஒன்று ஆரம்பமானது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கேரளத்தில் நிலவிய மேற்சாதி ஒழுக்க விதிகள் பெண்ணை போகச்சரக்காக மட்டுமே கையாண்டன. பிற ஆணுடன் தொடர்புகொண்டிருந்த பிழைக்காக தாத்ரிக்குட்டி என்ற நம்பூதிப் பெண்மீது விசாரணை நடத்தி சமூக விலக்கு கற்பிக்கப் பட்டது. இந்த சம்பவம் நடந்தது 1905 இல். அந்த சமுதாய விசாரணையின் நோக்கத்தையும் நடை முறையையும் விளைவுக¨ளையும் அறிந்துகொள்ளும் முன்பு அந்தக்
காலத்தின் பண்பாட்டுச் சூழலையும் ஆண்-பெண் உறவுமுறையின் இயல்பையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இன்று ஒருங்கிணைந்த மாநிலமாகவுள்ள கேரளம் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் மூன்று முக்கிய நிலப்பகுதிகளாகப் பிரிந்திருந்தது. வடக்குப் பகுதி மலபார். மத்தியப் பகுதி கொச்சி சமஸ்தானத்துக்கு உட்பட்டது. தென்பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகை யிலிருந்தது. ஆனால், மூன்று பிரதேசங்களிலும் கலாச்சாரக் கட்டுமானம் மட்டும் பொதுவான
தன்மைகொண்டிருந்தது. சமுதாயத்தில் ஆணின் ஆதிக்கம் மேலோங்கி யிருந்தது.பெண்களும் கீழ்ச்சாதியினரும் வளர்ப்பு விலங்குகளாகவே பராமரிக்கப்பட்டனர். இந்தக் கொடுமைக்கு எதிரான முதல் போராட்டம் 1859 இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்தது. பிற்பட்ட வகுப்பினராக ஒதுக்கப்பட்ட சாணார் இனத்தவர் தங்களது பெண்கள் மார்பை சீலையால்
மறைத்துக்கொள்ள உரிமைகோரிப் போராடி வெற்றி பெற்றனர். பெண்ணின் மானம் என்பது அடிப்படையில் ஆணின் மரியாதையும் சமூகத்தின் கௌரவமும் மானிட மதிப்பீடுகளின் தேவையும் என்று உணரவைத்த போராட்டம் அது. இந்த விழிப்புணர்வின் கனலிலிருந்து படர்ந்த சுவாலைகள் தாம் நாராயண குருவும் அய்யங்காளியும். நாராயண குரு 1903இலும் அய்யங் காளி 1905இலும் சமுதாய மறுமலர்ச்சிக்கான அமைப்புகளைத் தோற்று வித்தனர்.
ஆனால் அதே காலப்பகுதியில்தான் கேரள சமூக அமைப்பின் மேல்தட்டி லிருந்த உயர் சாதியான நம்பூதிரி சமுதாயம் பெண்களை அடுப்படிக்குள் வேகவைத்துக்கொண்டிருந்தது. வெளி உலகில் பரவலாகியிருந்த மாற்றத்தின் அதிர்வுகள் நம்பூதிரி இல்லங்களில் நுழைய அனுமதிக்கப் படவில்லை. நிலவுடைமை பிடிநழுவாமலிருக்கவும் பிராமணீய அதிகாரம் பறிபோகாமலிருக்கவும் காபந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. கலாச்சார
ஆதிக்கத்தை வலுவாக்க விதிகள் இறுக்கப்பட்டன. அந்த இறுக்கத்தில் நம்பூதிரிப் பெண்கள் நெரிபட்டனர்.
நம்பூதிரி இல்லங்களில் மூசாம்பூரி என்று அழைக்கப்படும் மூத்த நம்பூதிரி மட்டுமே திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப் படுவார். அவருக்கு இளையவர்களான நம்பூதிரிகள் கோவில் ஊழியக்காரர்களான அம்பல வாசிகளின் வீட்டுப் பெண்களையோ நாயர் தறவாட்டுப் பெண்களையோ சம்பந்தம் செய்துகொள்ளலாம். சொத்துக்கள்மீதும் பெண்கள்மீதும் முழு
அதிகாரமுள்ள மூசாம்பூரி வயதைப் பொருட்படுத்தாமல் எட்டோ பத்தோ பெண்களை 'வேளி' (கல்யாணம்) நடத்திக் கொள்வார். விளைவு? குழிக்குப் போகிற பிராயமுள்ள நம்பூதிரிக்கு முந்தா நாள் பூப்படைந்த மணப்பெண். நம்பூதிரி இல்லங்கள் உதாசீனம் செய்யப்பட்ட பெண்களால் நிரம்பிய இருண்ட தொழுவங்களாக நின்றன.
திருமணம் என்ற பெயரால் இல்லத்தில் அடைக்கப்பட்டவர்களின் சக்களத்திப் போர்,நிறைவு செய்யப்படாத பாலியல் வேட்கை ஆகியவை பெண்களை முடக்கின.இளம் விதவைகளின் பெருமூச்சுகளால் இல்லத்தின் அகாயிகள் (உள் அறைகள்) தீச்சூளைகளாயின.மணமாகாத நம்பூதிரிப் பெண்கள் (நம்பூதிரிப் பெண்களுக்கு அந்தர்ஜனம் என்று பெயர்) கனவுகளையும்
ஆசைகளையும் விழுங்கி கன்னியராக முதிர்ந்தனர்.கூந்தல் நரைத்து, உடல் குன்றி சாவுக்காகக் காத்துக் கிடந்தனர். அப்படி இறந்துபோகும் முதிர் கன்னிகளால் குலத்துக்கு சாபம் வந்து விடாமலிருக்க அந்த பிணத்துடன் உடலுறவுகொள்ள வெளியிலிருந்து கீழ்ச்சாதிக்காரர்களான 'நீசர்கள்' அமர்த்தப்பட்டனர்.இந்த தோஷ பரிகாரம் 'நீச கர்மம்' என்று அழைக்கப்பட்டது.
பண்பாட்டு விதிகளில் ஆண்களுக்கு நிரந்தர சலுகையிருந்தது. ஒரு நம்பூதிரிப் பெண் அந்நிய ஆடவனுடன் தொடர்புகொண்டால் அவள் களங்கப்பட்டவள். அவள் மீது சமுதாய விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணைக்கு 'ஸ்மார்த்த விசாரம்' என்று பெயர். நம்பூதிரி கிராம சபைகளின் நடவடிக்கை களைச் செய்யும் ஸ்மார்த்தர்களும் மீமாம்சகர்களும் அடங்கிய குழு அந்தர் ஜனத்தின் ஒழுக்கக்கேட்டை விசாரிக்கும். அதற்குத் தோதாக குற்றம் சாட்டப்பட்ட பெண் தனியறையில் அடைக்கப்படுவாள்.உறவினர் எவரும் அவளை நெருங்கவோ உணவோ தண்ணீரோ கொடுக்கவோ அனுமதிக்கப் படமாட்டார்கள். இருண்ட அறையில் ஒண்டிக்கிடக்கும் 'குற்றவாளி'க்கு அவளுடைய தாசி(பணிப்பெண்) மட்டும் உதவலாம்.காமக்குற்றம் சாட்டப்பட்ட பெண் 'சாதனம்' என்று அழைக்கப்பட்டாள். சாதனம் தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளச் செய்ய பலவிதமான உபாயங்கள் பிரயோகிக்கப் பட்டன. பாயோடு சுருட்டிக்கட்டி மாளிகையின் மேலிருந்து அவளை எறிவது ஒருமுறை.அவளை அடைத்துவைத்திருக்கும் அறைக்குள் விஷ ஜந்துக்களை விடுவது இன்னொரு உபாயம்.இந்த தண்டனைகளிலிருந்து தப்பினால் அவள் நிரபராதி. ஆனால் அப்படி யாரும் தப்பியதில்லை.விஷப் பிராணிகளுக்கு ஒழுக்க விதிகள் பற்றிய ஞானமில்லாததே காரணம்.
அடைக்கப்பட்டிருக்கும் 'சாதன'த்தை ஸ்மார்த்தர்களின் பஞ்சாயத்து விசாரிக்கும்.உயிர் வற்றி உடல் ஒடுங்கிய சாதனம் பெரும்பாலும் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்.தன்னைப் போகித்தவன் யார் என்று சொல்லிவிடும். அத்துடன் சாதனம் இல்லத்திலிருந்தும் சமுதாயத்திலிருந்தும் விலக்கப் படும். இல்லத்திலிருந்து வெளியேற்றி கதவை அடைத்து பிண்டம் வைக்கப்படும்.
நீத்தாருக்கான சடங்கு அது.இனி அவள் உயிரற்றவள். இறந்தவள். இல்லத்தி லிருந்து எறியப் பட்ட சாதனத்தை பிரம்மனின் சந்ததிகளல்லாத எந்த நீசனும் பொறுக்கிக்கொள்ளலாம்.ஆனால் அதற்கு யாரும் முன்வந்ததில்லை.தொழில் அதிகாரத்தை வைத்திருக்கும் மேற்சாதியுடன் மோதிக்கொள்ளத் துணிந்த தில்லை.
சமுதாயத்திலிருந்து பிரஷ்டம் செய்யப்பட்ட பெண்கள் திசையறியாத ஏதோ நிலப்பரப்பில் மண்ணில் புதைந்து மக்கிப்போயிருக்கலாம். எரிந்து சாம்பலாகிக் கார்றில் கரைந்திருக்கலாம். அவர்களுக்கு வரலாறு இல்லாமற் போயிற்று.இந்த சமுதாய அநீதிகளைத் தனது உடலை ஆயுதமாகவும் அவர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளையே தந்திரோபாயமாகவும் மாற்றி
எதிர்கொண்டதன் மூலம் வரலாற்றுப் பாத்திரமானவள் குறியேடத்து தாத்ரிக் குட்டி.
பத்தொன்பதாம்நூற்றாண்டின் எண்பதுகளில் அரங்கோட்டுக் கரையில் கல்பகசேரி இல்லத்தில் அஷ்டமூர்த்தி நம்பூதிரியின் மகளாகப் பிறந்தவள் சாவித்திரி. பிடிவாதக்காரக் குழந்தையாக வளர்ந்தாள். பெண்கள் கல்வி கற்பது ஆசாரத்துக்கு ஒவ்வாததாகக் கருதப்பட்ட காலத்தில் அருகிலிருந்த குரு குலத்தில் படிக்க அந்தப் பிடிவாதம் துணைசெய்தது. தர்க்க புத்தியுடனும்
சுதந்திர வாஞ்சையுடனும் வளர்ந்த பெண் பூப்படைந்தபோது தீச்சுடரின் அழகுடன் ஒளிர்ந்தாள். உடல் மலர்வதற்கு முன்னும் உடல் மலர்ந்த பின்னும் அவளை மோகித்து கலந்தவர்கள் பலர் என்று செவிவழிக் கதைகள் சொல்கின்றன.
தாத்ரியை வேளி முடித்து அனுப்பியது குறியேடத்து இல்லத்துக்கு. அவ்வாறு வெறும் சாவித்திரிக் குட்டி குறியேடத்து தாத்ரியாகிறாள்.அவளை மணந்தவர் குறியேடத்து இல்லத்தை சேர்ந்த இரண்டாம் சந்ததியான ராமன் நம்பூதிரி. இந்த மணஉறவில் ஒரு சதி மறைந்திருந்தது.
நம்பூதிரிக் குடும்பங்களில் மூத்தவரான மூசாம்பூரிக்கு மட்டுமே திருமணம் செய்துகொள்ளும் உரிமை.இரண்டாமவரான அப்பன் நம்பூதிரி திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றால் வேத விதிப்படி ஒரே ஒரு வழியிருந்தது. மூசாம்பூதிரியால் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு வாரிசை உற்பத்தி செய்ய முடியாமலிருந்தாலோ தீராத நோயிருந்தாலோ அவரது அனுமதியுடன்
வைதிகமுறைப்படி பரிகாரங்கள் நடத்திய பின்பு இரண்டாமவர் மணமுடித்துக் கொள்ளலாம். குறியேடத்து நம்பியாத்தன் நம்பூதிரி தீராத நோயாளியாக இருந்தார்.அதனால் ராமன் நம்பூதிரிக்கு தாத்ரியை மணந்துகொள்ள முடிந்தது. ஆனால் முதலிரவில் அவளுடன் உறவுகொண்டவர் மூசாம்பூதிரி. தாத்ரியின் கனவுகள் பொசுங்கின. மனம் துவண்டது.உடல் களவாடப்பட்டது. அந்த கொடூர நொடியில் தாத்ரி வெஞ்சினப் பிறவியானாள்.தன்னை வஞ்சித் தவர்களைப் பழிவாங்க தனது உடலை ஆயுதமாக்கினாள். அவளது மாமிசப் பொறியில் பல ஆண்கள் சிக்கினர்.
தாத்ரியின் துர்நடத்தை ஊர்ப்பேச்சாக மாறியது.கொச்சி சமஸ்தானத்தின் ராஜா விசாரணைக்கு அனுமதியளித்தார். தாத்ரியை முன்னிருத்திய ஸ்மார்த்த விசாரம் நாற்பது நாட்கள் நீண்டது. தன்னைக் காமப்பிழைக்கு ஆளாக்கியவர்களைப் பற்றி முப்பத்தியொன்பது நாட்கள் எதுவும் பேசாம லிருந்தாள் தாத்ரி. அப்படிப் பேசாமலிருப்பது ஒருதலைப்பட்சமான தீர்ப்பில் முடியும். தான்மட்டுமே குற்றத்தின் பாரத்தைச் சுமக்கவேண்டியிருக்கும் என்ற உள்ளுணர்வில் நாற்பதாம் நாள் தன்னோடு கிடந்தவர்களை அடையாளம் காட்டினாள்.அவள் பகிரங்கப்படுத்திய வரிசையில் அறுபத்தி நான்கு புருஷர் களின் பெயர்கள் இருந்தன.அறுபத்தி ஐந்தாவது பெயரைச் சொல்வதற்கு முன்பு பணிப்பெண்ணிடம் ஒரு மோதிரத்தைக் கொடுத்து சபையில் காட்டச் சொன்னாள். 'இந்தப் பெயரையும் சொல்லவேண்டுமா?' என்று அவள் கேட்டதும் ஸ்மார்த்தனும் மீமாம்சகனும் மகாராஜாவும் அதிர்ந்து நடுங்கினர். அந்த நொடியில் ஸ்மார்த்த விசாரம் முடிந்தது. தாத்ரியுடன் உறவுகொண்ட அறுபத்தி நான்கு ஆண்களும் விலக்கு கற்பித்து நாடு கடத்தப்பட்டனர். தாத்ரிக் குட்டிக்குப் பிண்டம் வைக்கப்பட்டது. அவளுடைய முதுகுக்குப் பின்னால் மரண ஓலத்துடன் கதவு அறைந்து மூடப்பட்டது. அவள் இறந்து போனவர் களில் ஒருத்தியாகக் கருதப்பட்டாள்.
தாத்ரி வெளிப்படுத்திய அறுபத்தி நான்கு பெயர்களில் எல்லா வயதினரும் இருந்தனர். உறவினர்கள் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புள்ளவர்கள், அண்டை வீட்டவர்கள்,கல்வி கற்பித்த குரு,இல்லத்துக்கு வந்துபோன இசைவாணர்கள், கதகளிக் கலைஞர்கள் என்று எல்லா ஆண்களும் இருந்தனர். அதிர்ச்சியளிக்கும் விதத்தில் பெற்ற தகப்பனின்பெயரும் உடன்பிறந்த சகோதரனின் பெயரும் இருந்தன. தாத்ரி சொன்னவர்களில் பாதி அவளை வீழ்த்தியவர்கள். மறுபாதி அவளால் வீழ்த்தப்பட்டவர்கள். அவள் சொல்லாமல்விட்ட அறுபத்தி ஐந்தாவது பெயர் கொச்சி மகராஜாவின் பெயர் என்றும் ராஜாவுக்கு நெருக்கமுள்ள நபரின் பெயர் என்றும் நிரூபணம் செய்யப்படாத ஊகங்கள் நிலவின.இன்றும் அது விடுவிக்கப்படாத புதிர்.
குறியேடத்து தாத்ரி சம்பவத்துக்கு முன்பும் சில அந்தர்ஜனங்கள் பிரஷ்டம் செய்யப்பட்டிருக்கிறார்கள். வாயில்லாப் பிராணிகளாக தண்டனையை ஏற்றுக்கொண்டு மடிந்து காலத்தின் புழுதியாக அவர்கள் மறைந்தனர்.தாத்ரி குட்டி மட்டுமே எதிர்விசாரணைக்குத் தயாரானவள். தன்மீது சுமத்தப் பட்ட குற்றத்தின் ம்றுபக்கத்தை அம்பலப்படுத்தி தார்மீக உறுத்தலை உண்டாக்கியவள். ஆணாதிக்க மனோபாவத்தையும் பெண்ணுக்கு விரோதமான சாதியொழுக்க விதிகளையும் கேலிக்குள்ளாக்கியவள்.எந்த உடல் பாவக்கறை படிந்தது என்று உதாசீனமாகச் சொல்லப்பட்டதோ அதே உடலை ஆயுதமாக தாத்ரி மாற்றினாள். எந்த ஒழுக்க விதிகள் தன்னைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தனவோ அதேவிதிகளை தனது பிரதிவாத மாக்கினாள். 'குலப்பெண்ணுக்குத்தான் பிரஷ்டம். எப்போது ஒரு குலப் பெண்ணை நடத்தை கெட்டவள் என்று தீர்மானிக்கிறீர்களோ அப்போதே அவள் அந்தத் தகுதியிலிருந்து கீழே தள்ளப்பட்டு வேசியாகிறாள். வேசியின் தர்மத்தைக் கேள்வி கேட்கவோ அவளைத் தண்டிக்கவோ ஸ்மார்த்த சபைக்கு என்ன அதிகாரம்?' என்ற தாத்ரியின் கேள்வியில் அன்று மிரண்ட சமுதாயம் பின்னர் ஸ்மார்த்த விசாரம் நடத்தவில்லை.
நாடு கடத்தப்பட்ட அறுபத்து நான்கு ஆண்களில் ஒருவரைத் தவிர யாரும் பின்னர் சொந்த மண்ணுக்குத் திரும்பவில்லை. கதகளிக் கலைஞரான காவுங்ஙல் சங்கரப்பணிக்கர் மட்டும் சமுதாய விலக்கிலிருந்து விடுவிக்கப் பட்டார். தன்னை நாடுகடத்திய ராஜாவிடமிருந்து கலைக்காகப் பரிசு பெறுவதை சபதமாகக்கொண்டு தீவிர சாதகத்தில் ஈடுபட்டார். நாடுகடத்தப்
பட்டவருக்கு மேடைகள் மறுக்கப்பட்டன. ஒருவேளைச் சோறோ ஒரு மிடறு நீரோ தலைசாய்க்க ஒரு திண்ணையோ அகப்படாமல் அலைய நேர்ந்தது. எனினும் சங்கரப் பணிக்கர் தளரவில்லை. அறுவடை முடிந்த வயல் வெளிகளை அரங்காக்கி கதகளி நிகழ்ச்சிகளை நடத்தினார்.புரவலர்க ளல்லாத சாமானிய மக்கள் அவருக்கு ஆதரவளித்தனர்.அதுவரை கோவில்களின்
கூத்தம்பலங்களிலும் நம்பூதிரி இல்லங்களிலும் தனி ரசனைக்குரிய கலையாக இருந்த கதகளி அவரால் பொது ரசனைக்குரிய ஊடகமானது. அந்தக் கலைஞரின் மறு அரங்கேற்றத்துக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. கடைசியில் எந்த ராஜாதிகாரம் பிரஷ்டம் செய்ததோ அதே கொச்சி
மகாராஜாவிடமிருந்து தனது கலைக்குரிய அங்கீகாரமாக பரிசும் பெற்றார் சங்கரப் பணிக்கர்.
தாத்ரி சம்பவத்தால் சமுதாயத்திலிருந்து விலக்கப்பட்ட பலரும் அவளைச் சபித்திருக்கிறார்கள். சபிக்காத நபர் சங்கரப் பணிக்கர். இருவருக்குமிடையில் பாலியல் ஈர்ப்பை மீறிய உறவு உருவாகியிருந்தது. ஒரு கலைஞனுக்கும் ரசிகைக்குமான உறவு. சங்கரப் பணிக்கர் கதகளியில் ஏற்ற பாத்திரங்க ளெல்லாம் பகன்,கீசகன் என்று அசுர இயல்புள்ள பாத்திரங்கள். அவற்றைச்
சித்தரிப்பதில் முரட்டுத்தன்மையை மீறி சில அடவுகளில் பெண்மையின் சாயல் இருந்தது. அது தாத்ரியின் சிநேகம் அளித்த கொடை என்றும் கருதப் படுகிறது. மனித தேகமல்ல கலையின் பரவச நுட்பம்தான் தாத்ரியிடம் காதலையும் காமத்தையும் கிளரச் செய்திருக்கிறது.
ஸ்மார்த்த விசாரம் நடத்தி பிரஷ்டு கற்பிக்கப் பட்ட குறியேடத்து தாத்ரிக்கு என்ன ஆயிற்று என்பது வாய்மொழிக் கதைகளிலிருந்தே அறியப்படுகிறது. தாத்ரி விசாரணை பற்றிய தகவல்கள் வில்லியம் லோகன் எழுதிய 'மலபார் கையேட்'டில் (மலபார் மானுவல்) விரிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளன. ஆனால் பின்கதைகள் அனைத்தும் மக்கள் பேச்சிலிருந்தே பெறப்படுகின்றன.
சம்பவத்தோடு தொடர்புடைய பலரது பின் தலைமுறையினர் இன்றும் வாழ்கிறார்கள் என்ற நிலையில் வாய்மொழித் தகவல்களை பொய்யென்று தள்ளுபடி செய்வதும் தவறாகிவிடும்.
சமுதாயத்தால் விலக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்றும் பொறுப்பு மகாராஜாவைச் சேர்ந்தது.கூடாவொழுக்கத்துக்காக தண்டிக்கப்பட்டவளை ஊர் மத்தியில் பராமரிப்பது ராஜ நீதிக்கு இழுக்கு என்பதால் புறம்போக்குப் பகுதியில் அவளுக்கான வீடும் நிலமும் ஒதுக்கப்படும். வைதீக நியதி அது. அதுபோன்று தாத்ரிக்கும் பெரியாற்றின் கரையில் மயானத்தையொட்டி
இடம் ஒதுக்கப்பட்டது. அங்கே அவள் வாழ்ந்ததற்கான சான்றுகளில்லை. 1905 இல் இறந்து போகவில்லை என்பது மட்டும் நிச்சயம். முன் காலங்களில் பிரஷ்டம் செய்யப்பட்ட பிற பெண்களைப்போல தாத்ரியும் பாண்டிதேசத்துக்கு -தமிழ்நாட்டுக்கு- அடைக்கலம் தேடிப் போனாள் என்பது ஏற்றுக்கொள்ளப் பட்ட விவரம். தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆங்கிலோ- இந்தியர் ஒருவரை மணந்து மூன்று பிள்ளைகளுக்குத் தாயுமாகியிருக்கிறாள். இரண்டு பெண்களும் ஓர் ஆணும். மகள்களில் ஒருத்தி பாலக்காட்டிலும் மகன் சென்னையிலும் வாழ்ந்தார்கள். சென்னைவாசியான மகள் வயிற்றுப் பேத்தி நடிகையாக அறிமுகமாகி மலையாளத் திரையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக நட்சத்திரமாக ஜொலித்திருக்கிறாள்.
அறுபத்தைந்து பேருடன் உடலுறவு கொண்டும் கர்ப்பமடையாத தாத்ரி மூன்று குழந்தைகளுக்குத் தாயானது உயிரியல் விந்தையா? மனதின் தந்திரமா? என்பது இன்றும் தெளிவாகாத ரகசியம்.
ஸ்மார்த்த விசாரத்தின்பேரில் புறக்கணிக்கப்பட்ட ஆண்கள் குற்றவுணர்வால் சாதியும் பெயரும் மாறி வேறிடங்களுக்குப் போனார்கள். அவ்வாறு வெளியேறிய ஒருவரைப் பற்றி மலையாளச் சிந்தனையாளரும் இலக்கிய வாதியுமான எம்.கோவிந்தன் பின்வருமாறு எழுதினார்.
'மேனோன் சாதிப்பிரிவைச் சேர்ந்த அவர் திருச்சூர் நகரத்தில் முன்சீப்பாகவோ மாஜிஸ்திரேட்டாகவோ பணியாற்றி வந்தார்.திருமணமானவர். ஸ்மார்த்த விசாரத்தில் விலக்கப்பட்டவர்களின் பட்டியலில் அவர் பெயரும் இருந்தது. பதறிப்போன அவரது மனைவியும் குடும்பத்தினரும் மேனோனைக் கைவிட்டனர்.ஊரைவிட்டு வெளியேறினார் மேனோன். அப்போது இளைஞராக இருந்த அவர் பாலக்காடு ஜில்லாவில் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த எளிய குடும்பத்துப் பெண்மணி ஒருவரை மணந்துகொண்டு பிழைப்புத் தேடி இலங்கைக்குப் போனார்.தம்பதியருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். பெரும் சம்பாத்தியம் எதுவும் தேடாமல் இலங்கையிலேயே காலமானார் மேனோன். அவரது விதவை பாலக்காட்டுக்குத் திரும்ப மனமில்லாமல் தமிழ் நாட்டில் குடியேறினார். வீட்டு வேலை பார்த்தும் சின்னச்சின்ன வேலைகளில் ஈடுபட்டும் பிள்ளைகளை வளர்த்தார். பிற்காலத்தில் அந்த இரு பிள்ளைகளும் திரைப்பட நடிகர்களானார்கள். அவர்களில் ஒருவர் தமிழக மக்களின் அமோக ஆதரவுக்குப் பாத்திரமானார். காலப்போக்கில்அவர்களை ஆள்பவருமானார்.'
கேரளத்தின்மறுமலர்ச்சி சிந்தனையில் பெண் விடுதலை குறித்த விழிப்புணர்வைத் தூண்டி விட்டதில் குறியேடத்து தாத்ரியின் கலகத்துக்கும் பங்குண்டு. தாத்ரி கலகம் நடந்து முடிந்த இரண்டாண்டுகளுக்குப் பிறகு நம்பூதிரிகளை மனிதர்களாக மாற்றும் நோக்கத்துடன் 'யோக க்ஷேம சபை' தொடங்கப்பட்டது. நம்பூதிரிக் குடும்பத்தில் பிறந்தவராயினும் அதன் மனு நீதிக்கும் ஆதிக்க விதிகளுக்கும் கலாச்சார அடக்குமுறைக்கும் பிற்போக்கு மனோபாவத்துக்கும் எதிராக இளைஞர்கள் கிளர்ந்தெழுந்தனர். செயலாலும் பேச்சாலும் எழுத்தாலும் புதிய உணர்வு களைத் தோற்றுவித்தனர்.
பின் நாட்களில் அவர்களில் முன் வரிசையில் நின்றவர் வி.டி.பட்டதிரிப்பாடு. பெண் உரிமை பிரச்சனை ஆணின் பிரச்சனையும் சமூகத்தின் பிரச்சனையும் அதன் விரிவாக மானுடப் பிரச்சனையுமாகிறது என்று உணர்த்தினார் அவர். இல்லங்களின் சமையற்கூடங்களில் வெந்து உருகிக்கொண்டிருந்த பெண்களின் அவலத்தை மையமாக்கி அவர் எழுதிய 'அடுக்களையிலிருந்து அரங்கத்துக்கு' என்ற நாடகம் ஸ்மிருதிகளின் விலங்குகளிலும் மனு தர்மத்தின் தளைகளிலும் பூட்டப்பட்டிருந்த உயிரின் சுதந்திரத்தை உசுப்பியது. அந்த நாடகம் தான் ஈ.எம்.எஸ். உட்பட பல சமூக சீர்திருத்தவாதிகளை உருவாக்கியது.
குறியேடத்து தாத்ரிக்கு கலாச்சார நாயகியின் மதிப்பை ஏற்படுத்தியவரும் வி.டி.தான்.அதன் தொடர்ச்சியாகத்தான் ஒவ்வொரு கால கட்டத்திலும் தாத்ரியை மையப்படுத்தி படைப்புகள் உருவாயின. மலையாள இலக் கியத்தில் ஆழமான செல்வாக்குச் செலுத்திய கலாச்சாரப் பாத்திரமாக தாத்ரியைச் சொல்லலாம். தாத்ரியின் வரலாற்றை விரித்தும் அதன் அறியப் படாத பக்கங்களின் மர்மத்தைத் தேடியும் கவிதைகளும் கதைகளும் நாடகங்களும் திரைப்படங்களும் உருவாக்கப்பட்டன. 'அபராதியான அந்தர்ஜனம்' என்ற தலைப்பில் ஒடுவில் குஞ்ஞிக்கிருஷ்ண மேனோன் எழுதிய கவிதையே முதல் படைப்பு. மாடம்பு குஞ்ஞிக்குட்டனின் 'பிரஷ்டு',
லலிதாம்பிகா அந்தர்ஜனத்தின் 'அக்னி சாட்சி' (சிற்பியின் மொழியாக்கத்தில் தமிழில் வெளி வந்துள்ளது), உண்ணி கிருஷ்ணன் பூதூரின் 'அம்ருதமதனம்', நந்தனின் 'குறியேடத்து தாத்ரி' இவையெல்லாம் தாத்ரியின் நாவல் முகங்கள். எம்.கோவிந்தன் எழுதிய 'ஒரு கூடியாட்டத்தின் கதை'- தாத்ரி குட்டிக்கும் கதகளி கலைஞர் சங்கரப் பணிக்கருக்குமிடையில் இழையோடிய காதலைச் சொல்லும் நீள்கவிதை.'யக்ஞம்' என்ற ஸ்ரீதேவியின் நாடகம் ஸ்மார்த்த விசாரத்தை சமகாலச் சூழலில் பொருத்தும் மறுவாசிப்பு.
ஒரு கூடியாட்டத்தின் கதையில் இடம் பெறும் ஆண்-பெண் உறவின் கனவையும் காதலையும் மையக் கருவாக வைத்து மூன்று திரைப்படங்கள் உருவாயின. எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதிய 'பரிணயம்' (இயக்கம்: ஹரிஹரன்), அரவிந்தன் இயக்கிய 'மாறாட்டம்', ஷாஜி என்.கருண் இயக்கிய 'வானப்ரஸ்தம்'.
இந்த ஆண்டுடன் தாத்ரி குட்டி மீதான விசாரணைக்கு நூறு வருடங்கள் நிறைவு பெறுகின்றன. வெறும் காமப் பிசாசு என்று சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் உதாசீனத்துக்குள்ளான ஒருபெண் நூற்றாண்டு கடந்தும் நினைக்கப்படுவதன் காரணம், தாத்ரியின் அரூபமான முன்னிலையில் எல்லா கலாச்சார மனங்களும் மறைமுக விசாரணைக்குள்ளாவதாக இருக்கலாம்.
ஆதார நூல்கள்:
1.வி.டி.யுடெ தெரஞ்ஞெடுத்த க்ருதிகள் (வி.டி.யின் தேர்ந்தெடுத்த படைப்புகள்)
2.ஒரு கூடியாட்டத்தின்டெ கத (ஒரு கூடியாட்டத்தின் கதை) - எம்.கோவிந்தன்
3.லோகண்டெ மலபார் மான்யுவல் (லோகனின் மலபார் மானுவல்)
4.தாத்ரிக்குட்டியுடெ ஸ்மார்த்த விசாரம் (தாத்ரி குட்டியின் ஸ்மார்த்த விசாரம்) ஆலங்கோடு லீலா கிருஷ்ணன்
5.அடுக்களையில் நின்னும் அரங்ஙத்தேக்கு (அடுப்படியிலிருந்து அரங்குக்கு) வி.டி.பட்டதிரிப்பாடு
6.கண்ணீரும் கினாவும்- வி.டி.யுடே ஆத்ம கத (கண்ணீரும் கனவும் - வி.டி.யின் தன் வரலாறு)
2005 ஆம் ஆண்டு எழுதப்பட்ட் கட்டுரை. முதலில் ‘உங்கள் நூலகம்’ இதழில் வெளிவந்தது. பின்னர் ‘வெளிச்சம் தனிமையானது’ கட்டுரை நூலில் (உயிர்மை பதிப்பகம், சென்னை ,2008) சேர்க்கப்பட்டது.
ஓவியம் நன்றி: நம்பூதிரி.
↧
எத்தனை கவிதைகள் எத்தனை முகங்கள் - கலாப்ரியா
அன்பார்ந்த நண்பர்களே,
வணக்கம்.
சுகுமாரன் 38 ஆண்டுகளாக எழுதி வருகிறார். சற்றேறக் குறைய அதே ஆண்டுக் காலமாக என் நண்பராயுமிருக்கிறார்.அவரது கோடை காலக் குறிப்புகள் நூல், அப்போதைய, ட்ரடில் அச்சகத்தின் உச்ச பட்ச சாத்தியங்களுடன் அழகான அச்சு, ஓவியங்களுடன் ஒரு நிறைவான பதிப்பாக வந்தது. 1979ல் தொடங்கிய என் புத்தகச் சேகரிப்பின் 39-ஆவது புத்தகம் அது. (அப்படி எண்களெல்லாம் போட்டு வைத்திருக்கும் காலம் அது.) அதற்கு முன்னரே அவரது கவிதைகளை கணையாழி, ழ, ஸ்வரம், மீட்சி என்று படித்திருக்கிறேன். அவற்றைத் தொகுப்பாகப் படிக்கும்போது அந்தக் கவிதைகள் அவர் மீது ஏற்படுத்திய ஒரு சவாலான மதிப்பு இன்னும் குறையவே இல்லை. கிட்டத்தட்ட அதே நேரத்தில் என்னுடைய கவிதைகள் குறித்து ‘பாலியல் மற்றும் வன்முறை’ (செக்ஸ் அண்ட் வயலன்ஸ்) சார்ந்து விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன. சுகுமாரனின் மொழியையும், அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் கவிஞர் பிரம்மராஜன் வன்முறை சார்ந்த ஒரு மொழியாகக் குறிப்பிட்டிருந்தார்.அதனாலும் அவர் கவிதைகளின் பால் ஒரு அதிக ஒட்டுதல் ஏற்பட்டது. அதற்கு இன்னொரு காரணமும்உண்டு. சுதந்திரத்தை நோக்கி நகரும் கவிதைப் போக்கில் அவ்வப்போதையை மொழியை மீறியும் மறுத்துமே புது மொழி அமைவது சரிதானா என்ற வாதப் பிரதிவாதத்தில், என்னுடன் சேர்ந்து நிற்க, அல்லது சேர்ந்து வாங்கிக் கட்டிக் கொள்ள, இன்னொருவர் இருக்கிறார் என்று நினைத்ததும் ஒரு காரணம்..
ஆனால் சுகுமாரன் கவிதைகள் மிகுந்த தர்க்க அடிப்படை கொண்டவை. அவர், தோன்றியவுடன் பதிவு செய்து உலவ விட்டு விடுகிறவரில்லை.தர்க்கச் செறிவுடனும், இறுக்கமான வார்த்தைச் சேர்க்கையுடனும் கவிதை தன் பூரிதமான உருவை எட்டும் வரை காத்திருப்பவர். அவரது சில கட்டுரைகளில் கவனித்தால் தெரியும். அவர் சொல்ல வருகிற ஒரு செய்தி தர்க்கத்திற்கு அப்பாற் பட்டதோ என்று தோன்றினால், ”சற்று குதர்க்கமாக யோசித்தால், அல்லது வகைப்படுத்தினால்”என்று குறிப்பிட்ட பின்தான் செய்தியைச் சொல்வார். தர்க்கத்திலும் குதர்க்கத்திலும் அவ்வளவு கவனமானவர். அவரது ’இசை தரும் படிமங்கள்’என்ற கவிதையின் நான்கு கவிதைகளில், முதலாவதாக உள்ள ஒரு கவிதை மட்டுமே முதலில் கணையாழியில்,வெளிவந்தது. ஆனால் அந்தத் தலைப்பின் கீழ் மீதமுள்ள மூன்றும் ’கோடை காலக் குறிப்புக்கள்’ தொகுப்பில் சேர்ந்து வெளி வந்தன. அவை எல்லாம் கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளியில் எழுதப் பட்டவை.( சில தொகுப்பில் அவர் கவிதை எழுதப்பட்ட வருடம் மாதங்களைக் குறிப்பிடுவார்) இன்று அவற்றை வாசிக்கும் ஒருவருக்கு அந்தக் கால இடைவெளி தெரியாது.அதன் தொனி ஒரே தளத்தில் அமைந்திருக்கும். காரணம், இசை. துயரமும் பச்சாதாபமும் புகையாய்ப் படிந்த தன் சுயத்திலிருந்து அவரை மீட்டு வெளிக்காற்றின் மணங்களுக்கும் அற்புதங்களுக்கும் அவரை ஒப்புக் கொடுக்கும் இசை. அந்தப் படிமங்களை அவர் மீட்டியிருந்த அல்லது இசைத்திருந்த விதம்தான் கால வேறுபாடு எதுவும் தோன்றாமையின் காரணமாயிருக்கும். என்றைக்குமான ஸ்வர சுத்தமான மொழி சுகுமாரனுடையது.
பிரம்மராஜன் குறிப்பிடுவது போல, ”பொதுப் பார்வையிலிருந்தும், தனி மனிதப் பார்வையிலிருந்தும் கவிதைகளுக்குள் பெறப்படும் வாழ்வின் அம்சங்கள் சுகுமாரனின் மனச் சூறாவளியில் இடம் மாறிப் போகின்றன; உருமாற்றம் அடைகின்றன. இந்த உருமாற்றம் விளைவிக்கும் கவிதை வரிகள் வேறு எவரைப் போலவும் இவரை இல்லாதிருக்கச் செய்கின்றன.”
அவர் 1983 மார்ச்சில் எழுதிய ’பின் மனம்’என்று ஒரு கவிதை.தனது முன் மனத்தையும் –பின் மனத்தையும் எதிர் எதிராக வைத்து ஒரு கவிதா உரையாடலை நிகழ்த்தியிருப்பார். அந்தக் கவிதையை வாசிக்கலாம் என்று நினைக்கிறேன்.
பின் மனம்
சிலசமயம்
பெருங்காற்றுக்கும் பயப்படாமல் ஒரு இலையுதிர் கால மரம் போல
( கிளைகளில் சொற்களாய் தளிர்த்து மிரள்வேன் பின்பு)
சிலசமயம்
வரும் போகும் கால்களில் மிதிபட
டீக்கடைக்காரன் உலரப் போட்ட ஈரச்சாக்கு போல
(பரிவற்று வறண்டும் போவேன் பின்பு)
சிலசமயம்
பிரயாண நோக்கங்கள் துறந்த இலவஞ் சிறகு போல
( மூலைச் சிலந்தி வலையின் தனிமையில் தவிப்பேன் பின்பு)
சில சமயம்
சகல துக்கங்களையும் இறைக்கும் சங்கீதம் போல
(தற்கொலையில் தோற்றவனின் மௌனமாவேன் பின்பு)
சில சமயம்
கண்ணாடியில் காத்திருக்கும் என் புன்னகை
(கால்களை விழுங்கிய விலங்கின் வாயிலிருந்து கையுதறி அலறும் குழந்தை முகம் பின்பு எனக்கு)
டீக்கடைக்காரன்,வீதியில் காயப் போடும் சாக்கு என் காலிலும் மூளையிலும் பல சமயங்களில் ஈரத்தை அப்பியிருக்கிறது. பல வேளைகளில் சாக்கு எடுக்கப்படாமல் வீதியோடு வீதியாக ஒட்டப்பட்டது போலக் கூடக் கிடக்கும். என் சிந்தனையிலும் அது ஒற்றைப் படிமமாய் ஒட்டிக் காய்ந்து கிடந்ததும் உண்டு. ஆனால் சுகுமாரனிடம் அது இப்படியொரு அற்புதமான கவிதையில் வித்தியாசமாக வெளிப்பட்டிருப்பதைத்தான் அவர் மீதான என் சவாலான மதிப்பு என்கிறேன். ”சில தருணங்களை நிலை நிறுத்தி காலத்தின் பகுதியாக்குவதும் அனுபவப் பொதுமையாக்குவதுமே கவிஞனின் பணியாகிறது.” என்று கவிதையில் பேருலகைத் தரிசிக்கும் சுகுமாரனை நான் கொண்டாடுவது இதனால்த்தான்.இந்தத் தொகுப்ப்ல் “அதற்குள்...”என்று ஒரு கவிதை.நான் அனுபவித்த தற்கொலை முயற்சி அவருக்கு இருந்ததோ என்னவோ தெரியாது..ஆனால் அது பற்றி என்னால் யோசிக்கக் கூட முடியாத வரிகளைக் கொண்டது இக்கவிதை. சாவா/ சாவுக்கு விரட்டும் கணங்களின் வாழ்வா/காரணம் எது? தெரியவில்லை./ இருப்பினும்/இரண்டாவது தற்கொலை/ முதலாவதைப் போல அரைகுறையாய் முடியாது/ அபத்தமாக இருக்காது/அது/ கனவின் பனியற்றதாக இருக்கும்/ அது/ நம்பிக்கையின் கானலற்றதாக இருக்கும்/அது/ மரணத்தின் நிச்சயமாக இருக்கும்.அது/ வெஞ்சினத்தின் கருணையாக இருக்கும்....இப்படி நீளும் இக்கவிதையில் ’வெஞ்சினத்தின் கருணை’என்ற சொற்சேர்க்கை அபாரமானது, என் மதிப்பீடு சரியாமல் பர்த்துக் கொள்பவை இப்படியான அற்புதங்கள்தான்.
இதிலிருந்து முப்பதாண்டுகள் கடந்தும் அவர் எனக்குச் சவாலானவராகவே தெரிகிறார்.ஏனெனில் “அவரது கவிதைகளில் புதிய அனுபவங்களுக்கான நிரந்தர வேட்கையுடன் இயங்கி வருபவர்,”அவர். இந்தத் தொகுப்பின் முன்னுரையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.,”அனுபவங்களை முன் வைப்பதில் காட்டிய மெல்லிய தயக்கங்களை இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் கடந்திருக்கின்றன. என்னை நானே மீறிச் செல்லும் செயல் அது”. என்று. எனக்குத் தெரிந்து அவர் ஒவ்வொரு தொகுப்பிலும் தன் முந்திய கவிதைகளை மீறியும் தாண்டியும்,மேலும் சிறப்பான கவிதைகளை நோக்கிய பயணியாகச் செயல் படுவதாகவே தெரிகிறது. ஆனாலும் அவர் சொல்வதற்கேற்ப இந்தத் தொகுப்பில் உள்ள ‘ஆணொரு பாகினி என்ற கவிதையை அவர் அவரை மீறிச் செயல் பட்டிருப்பதற்கு உதரணமாகக் குறிப்பிடலாம். இன்னொன்று அவருடைய ’இடக்கரடக்கல்’காரணமாகக் கூட அவர் இவ்வாறு சொல்லியிருக்கலாம்.
அவருடைய இடக்கரடக்கல் பற்றி ஒன்றைக் குறிப்பிட வேண்டும். காலச் சுவடு இதழில் அவர் புதுக்கவிதைகளின் எழுபதாவது ஆண்டையொட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். “அறுபதாயிரம் காதல் கவிதைகளும் உதிரியான சில குறிப்புகளும்” என்று ஒரு கட்டுரை. இந்தக் கட்டுரையை வேடிக்கையான பார்வையுடன் எழுத ஆரம்பித்து அது காரியார்த்தமான எல்லைகளுக்குள் சென்றிருப்பதாக அவரே குறிப்பிட்டிருக்கிறார். இந்த நீண்ட கட்டுரையில் அவரது ‘காதல் கவிதைகள்’பற்றி அவர் குறிப்பிடவில்லை. அதை அவர் செய்ய முடியாது.வேறு யாராவது இதே கட்டுரையை எழுதியிருந்தால். முதலில் வரும் குற்றச் சாட்டு ‘சுகுமாரனை’ விட்டு விட்டீர்கள் அல்லது குறிப்பிடத்தகுந்த விடுபடல் சுகுமாரனின் கவிதைகள் என்று சொல்லியிருக்கலாம்.
Music is a moral law. It gives soul to the universe, wings to the mind, flight to the imagination, and charm and gaiety to life and to everything. ~Plato~என்று ப்ளேட்டோ சொல்வதை காதலுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.குறைந்த பட்சம் சுகுமரனின் காதல் கவிதைகளுக்கு கட்டாயம் பொருத்திப் பார்க்கலாம்.ஏனெனில் இரண்டைப் பற்றியும் அவர் தோய்ந்து தோய்ந்து கவிதைகள் எழுதியுள்ளார்.
நீருக்குக் கதவுகள் இல்லை என்கிற இந்தத் தொகுப்பின் தலைப்பு தன்னுள் ஒரு வரியாய் வரும் கவிதையைக் கவனிக்கலாம்.
நீராலானவள்
எந்தத் தடையும் இல்லாமல்
உள்ளே புக முடிகிறது
ஒரு மீனைத்
தண்ணீர் வரவேற்பது போல்
அனுமதிக்கிறாய்
எந்தத் தயக்கமும் கொள்ளாமல்
வெளியில் வர முடிகிறது
ஒரு நீர்த்தாவரத்திற்குத்
தண்ணீர் விடை கொடுப்பது போல
வழியனுப்புகிறாய்
மீண்டும் நுழைந்து
மீண்டும் வெளியேறித்
தெரிந்து கொண்டவை
இரண்டு உண்மைகள்
மீனுக்கும் தாவரத்துக்கும்
நீரின்றி வாழ்வில்லை
நீருக்கு கதவுகளும் இல்லை.
பெண்ணுறவை இயற்கை மீதான மோகமாகக் காட்டிய கவிஞர்கள் எனச் சிலரை சுகுமாரன் குறிப்பிட்டு தன்னையும் அதில் சேர்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார். முதலில் சேர்க்கப் படவேண்டியது அவர்தான்.
இத்தொகுப்பில் ’நந்தனும் மானஸியுமாக’அவரது காதல் உலகே விரிந்திருக்கிறது என்று கொள்ளலாம்.இத்தொகுப்பின் முதல்க் கவிதையான மழையில் திளைக்கும் பெரு நிலம் கவிதையை, அதிவீரராம பாண்டியன் மொழியில் சொன்னால். “சாயுஜ்யம்”, (அல்லது இடக்கரடலுக்காக ஆங்கிலத்தில்சொன்னால் ’ஆர்காஸ்ம்’) பற்றிய கொஞ்சம் வலி சேர்ந்த ஒரு காதல்க் கவிதையாகக் கொள்ளலாம். ‘உடன் படுக்கை விதிகள்’ கவிதையையும் சொல்லலாம். ஆனால் இதிலும், கவிதை முடியும் போது ஒரு முரணைச் சுட்டி முடிக்கிறார். இது அவருக்கே கை வந்த கலை.
புது உலகின் தொன்மரபுகளை உருவாக்கும் ஒரு கவிஞர் சுகுமாரன்.மூட்டைப் பூச்சியை தன்னுடன் எடுத்துச் செல்லும் ஒரு கவிதையில் (இங்கு எளிமையான அனுபவம் அழகான கவிதையாகி இருக்கிறது. ஒருவேளை முன் காலங்க்ளென்றால் சுகுமாரன் இந்த எளிய அனுபவத்தைக் கவிதையாக்காமல் விட்டிருப்பாரோ என்னவோ).இதில் வருகிற மூட்டைப் பூச்சி வெளிப்படுத்தும் தற்காப்பு வாடை ஒரு புதிய தொன்மமாகத் தோன்றுகிறது. (நரியும் தன்னைப் பிடிக்க வருபவர்களிடமிருந்து தப்பிக்க கெட்ட வாடையை காற்றில் கரையவிட்ட படியே ஓடும் என்பார்கள்.என் பாஷையில் இதைச் சொல்லியிருப்பேன் ஆனாலும் சுகுமாரன் கவிதைகள் படித்ததால், கவிதைகள் பற்றிப் படிப்பதால் கொஞ்சம் அவையடக்கம் பேண வேண்டியிருக்கிறது.)
அது போலவே ‘சிந்துபாத்தின் கடற்பயணம்’ கவிதை. இதில் வருகிற ‘கன்னித்தீவு’ ஒரு புதிய தொன்மரபு. இது சற்றே எளிமையான, குழந்தை உலகை விவரிப்பது போல நகர்ந்தாலும். முடிவில் ஆறே ஆறு வார்த்தைகள், பெரியவர்கள் உலகினதாகத் திருப்பிப் போட்டு விடுகிறது கவிதையை.(கவிதை பக் 19) இத்தாலிய நடிகை மோனிகா பெலூசியையும் மலேனா திரைப்படத்தையும் கூட ஒரு வகையில் தொல்லியல்ச் சித்திரமாக ஆக்கி விடுகிறார். ‘PASSION OF CHRIST’ படத்தில் மகதல நாட்டு மேரியாக மோனிகாவை பார்க்கும்போது இந்தக் கவிதை நினைவுக்கு வந்தது.இந்தக் கவிதையில் தொன்மமும் நவீனமும் மாறி மாறி வந்து ஒரு அபூர்வ அனுபவமாக கவிதை முடியும். கவிதையாக்கத்தின் பூடக வசீகரங்களை நன்கு அறிந்தவர் சுகுமாரன்.கலாச்சாரத்தின் பகுதியாக மொழியைக் கருதுபவர் அவர்.
கவிதை புதிய அனுபவங்களுக்கான நிரந்தர வேட்கையுடன் இயங்குவது என்றும், என்னால் உணர முடியாத, அடைய முடியாத அனுபவம் எனக்கு உணர்வாக மாறுகிற போது ஒரு பெரிய மானுடத் தொடர்ச்சியின் பகுதியாக நானும் என்னுடைய படைப்பும் மாறுகிறோம் என்று தெளிவாகப் பிற படைப்புகள் குறித்துச் சொல்கிற போதும் கவிதையின் பேருலகைத் தரிசிக்கிறவாராக அவரை நான் அடையாளம் காணுகிறேன்.
அவருடைய சிலைகளின் காலம் தொகுப்பில் ஒரு கவிதை ’பாட்டி மணம்’என்று அதில் சில வரிகள்.
பாட்டியிடம்
சொற்களின் வானம் இருந்தது.
ஒரு சூரியனும் இருந்தது.
அவ்வப்போது சூரியன் விடிந்து
எனது சின்ன உலகில்
அநேக முகங்களை அடையாளம் காட்டியது
எத்தனை முகங்கள்...
எத்தனை நபர்கள்.....
இதே வியப்புடன் விடை பெறுகிறேன். சுகுமாரனது கவிப்பேருலகிலும் எத்தனை கவிதைகள், எத்தனை முகங்கள்.நன்றி சுகுமாரன், நன்றி நண்பர்களே..
↧
Article 4
கவிதைக் கலை
அனஸ்டாஸிஸ் விஸ்டோனிடிஸ் ( கிரேக்கம்)
கவிதை, தெருக்களில்
காற்றால் பெருக்கித் தள்ளப்படும் இலைகள் அல்ல
அது அசையாக் கடலோ
பாயும் படகோ அல்ல.
அது நீல வானமோ
தெளிந்த வெளியோ அல்ல.
கவிதை, பூமியின் இதயத்தில்
ஒரு ஊன்றிய கூர்முனை ஈட்டி
நகரங்களுக்குள் விசையுடன்
நேரடியாக இறங்கிய பளிச்சிடும் கத்தி.
கவிதை, ஒரு பதற்றம்,
பளபளப்பான உலோகத் துண்டு,
பனிக்கட்டி, உறைந்து கறுத்த காயம்.
கவிதை, பன்முக வைரம்போலக்
கடினமானது.
ஆசிய நதியில் விரைந்தோடும்
செதுக்கிய பளிங்குக் கல்போலத் திடமானது
கவிதை, கடந்து செல்லும்
பறவையின் குரல் அல்ல
அது தொடுவானையும் வரலாற்றையும்
துளைத்துப் போகும் துப்பாக்கி வெடி
கவிதை, தனது பாடம்செய்யப் பட்ட வலிக்குள்ளே
உதிர்ந்து விழும் மலர் அல்ல.
ANASTASSIS VISTONITIS
Anastassis Vistonitis was born in Komotini, Northern Greece, in 1952. He studied Political Sciences and Economics in Athens. From 1983 to 1988 he lived in the U.S.A. (New York and Chicago) and travelled extensively in Europe, North America, Africa, Australia and Asia. From 1996 to 2001 he was a member of the board of the E.W.C. (The Federation of European Writers) and
now he is its Vice-president. In addition to poems, essays, book
reviews and articles contributed to many leading quarterlies and
newspapers Anastassis Vistonitis has published nine books of
poetry, two volumes of essays, three travelogues, and a book of
short stories.
He was the General Editor of the candidature file of Athens
for the Olympic Games of 2004. His writings have been translated
into 14 languages and appeared in such journals as Lettre
International, P.E.N. International, Translation, Sodobnost, Helicon
and 2b (A Magazine of Ideas). He is a columnist of the leading
Greek newspaper To Vima and lives in Athens.
↧
↧
உறவின் நீளம் மூன்று கஜம்
தன்னுடைய சம வயதுப் பெண்கள் எல்லாரையும் போலவே ரானுவுக்கும் கனவு இருந்தது. கொஞ்சம் வசதியான வாழ்க்கை; தன்னைப் புரிந்து கொண்டாடுகிற கணவன். இவைதாம் அவளுடைய தேவைகள். ஆனால் நடைமுறையில் அது நிறைவேறவே இல்லை. பெற்றோரின் வற்புறுத்தலும் சமூகக் கட்டுப்பாடுகளும் தான் அவளுடைய வாழ்க்கையைத் தீர்மானித்தன. ஏக்கா (ஒற்றைக் குதிரை பூட்டிய வண்டி) ஓட்டியான திலோக்காவை மணந்து கொள்ள நேர்கிறது. குதிரைக்குக் கொள்ளுக்கும் குடும்பத்தினருக்குக்கு ரொட்டிக்கும் வருவாய் ஈட்டவே திணறுகிற குடும்பத்தில் புகுந்த பின்னர் பிறந்த வீட்டுத் தரித்திரம் இதை விடக் குறைவானது என்று படுகிறது. கணவனாக வந்த திலோக்காவோ குடிகாரன்; போதையேறினால் உதையப்பனாகிறவன். அவனாகச் சும்மா இருந்தாலும் அவனுடைய தாய் மருமகளைப் பற்றிப் புகார் சொல்லி அவனை உசுப்பி விடுகிறாள். திருமணமாகி போதைக்கும் சச்சரவுகளுக்கும் இடையில் இரண்டு குழந்தைகளைப் பெற்ற பின்னும் கொண்டு வராத சீதனத்தைப் பற்றிச் சொல்லிக் குத்திக் காட்டுகிறாள். தன்னுடைய எளிய கனவுகள் கூட நிறைவேறாத வாழ்க்கையை ரானு குல தெய்வமான வைஷ்ணோ தேவி யின் தீர்மானம் என்று ஏற்றுக் கொள்கிறாள். இந்த ஏற்றுக் கொள்ளும் உணர்வுதான் அவளைத் தொடர்ந்து வாழ வைக்கிறது. அவளும் எல்லாப் பெண்களையும் போல வம்பு பேசியும் திருவிழாக்களில் பங்கேற்றும் தனது சமரசத்தை நியாயப்படுத்திக் கொள்கிறாள்.
''நான் பிறந்து வளர்ந்த பஞ்சாபி கிராமப் புறங்களில் பார்த்த பெரும் பான்மை யான பெண்கள் அப்படித்தான் இருந்தார்கள். ஒருவேளை இன்னும் இருக்கிறார்கள். தங்களுடைய சங்கடங்களையே தங்களுக்குக் கிடைத்த வாழ்க்கையாகப் பார்க்கிறார். அவர்கள் எல்லாரின் ஒட்டு மொத்த வடிவம்தான் ரானு.''என்று நாவலாசிரியர் ரஜீந்தர் சிங் பேடி (1915 – 1984)குறிப்பிடுகிறார். அவர் எழுதிய 'ஏக் சதர் மாலி சி'நாவலின் இழைதான் மேலே குறிப்பிடப் பட்டது.
ரஜீந்தர் சிங் பேடி உருது மொழியில் எழுதிய நவீன எழுத்தாளர்களில் முக்கியமானவர். அஞ்சல்துறை எழுத்தராகப் பணி புரிந்தவர் இலக்கிய ஆர்வத்தால் வேலையைத் துறந்து எழுத்தாளரானார். உருது மொழியில் சதாத் ஹசன் மண்டோவுக்கு நிகராகக் கதைகள் எழுதியவர். மண்டோவைப் போலவே திரையுலகிலும் நுழைந்து பொருட்படுத்தக் கூடிய படங்களில் பணியாற்றினார். 'ஏக் சதர் மாலி சி'நாவலுக்காக 1967 இல் சாகித்திய அக்காதெமிப் பரிசும் பெற்றார். பஞ்சாபிக் கிராம வாழ்க்கையின் நுட்பமான இழைகளைக் கோர்த்து அந்த மண்ணின் மனிதர்களைப் பற்றிய கதைகளை உருவாக்கியவர் பேடி. கீழ்த் தட்டு, நடுத்தர மக்களின் வாழ்க்கையை கரிசனத்துடன் பதிவு செய்தவர். முதன்மையாகப் பெண்களின் வாழ்வை.
இந்திய சமூக அமைப்பில் தேர்ந்து எடுக்கும் சுதந்திரம் இல்லா பிறவிகள் பெண்கள். குடும்பத்தின் வற்புறுத்தலுக்கும் சமூகத்தின் விதிகளுக்கும் அடிபணிவதாகவே அவர்கள் வாழ்க்கை அமைகிறது. அதை இயல்பான ஒன்றாக அவர்கள் நம்புகிறார்கள்; அல்லது நம்பவைக்கப்படுகிறார்கள். ரானுவும் அப்படித்தான் இருக்கிறாள். ஆனால் இக்கட்டான சூழ்நிலையை அவள் சமாளிக்கும் பக்குவம்தான் அவளைக் கதாநாயகியாக மாற்றுகிறது.
ஒருநாள், ஊர்ப் பிரமுகருக்காக ஒரு பெண்ணைத் தனது ஏக்காவில் அழைத்து வந்து சேர்க்கிறான் திலோக்கா. மறு நாள் வல்லுறவுக்கு ஆளாக்கப் பட்டு இறந்து கிடக்கிறாள். அவளுடைய சகோதரர்கள் அந்தப் பாதகத்துக்குக் காரணம் திலோக்கா என்று பழி சுமத்தி அவனைக் கொன்று விடுகிறார்கள். ஆதரவற்ற குடும்பம் மேலும் வறுமையில் ஆழ்கிறது. ஊர்ப் பஞ்சாயத்து - ஐந்து பேர் கொண்ட சபை ஒரு நிவாரணத்தை முன்வைத்து அதை ஏற்றுக் கொள்ளக் கட்டாயப் படுத்துகிறது. திலோக்காவின் தம்பி மங்களை, ரானு திருமணம் செய்து கொள்ள வேண்டும். ரானுவுக்கு அந்தத் தீர்மானம் அதிர்ச்சியை தருகிறது. மங்கள் அவளை விடப் பதினான்கு வயது இளையவன். கிட்டத்தட்ட மகனைப் போலவே அவளால் வளர்க்கப்பட்டவன். ஆனால் பஞ்சாயத்தின் தீர்ப்பு மாற்ற முடியாதது. எனவே 'மாலி சி சிதர்'என்ற சடங்குக்கு உடன்படுகிறாள். திருமணமல்லாத திருமணச் சடங்கு அது. மூன்று கஜம் நீளமுள்ள துணியை பெண்ணின் மேல் மைத்துனன் போர்த்தி விட்டால் அவள் அவனுக்கு மனைவியாகி விடுவாள். இந்தச் சடங்குக்குப் பிறகு மங்களுடனான தன் உறவை எப்படி ரானு கையாளுகிறாள் என்பது அவளை வழக்கமல்லாத பாத்திரமாக்கும் ஒரு செயல்.
ரானுவின் ஒரே எண்ணம் மகள் சன்னூவுக்கு பணக்காரனும் அழகனுமான மாப்பிள்ளையைப் பார்த்து மணமுடித்து வைக்க வேண்டும் என்பதே. அதுவும் கைகெட்டும் தூரத்தில் வருகிறது. திருவிழாவில் சன்னூவைப் பார்த்து வசமிழந்த ஒரு பணக்கார இளைஞன் சீதனமில்லாமல் அவளை மணந்து கொள்ள முன் வருகிறான். ஊர்த் திருவிழாவில் எட்ட நின்று அவனைப் பார்க்கும் ரானு மகள் வறுமையிலிருந்து தப்பித்தாள் என்று ஆறுதல் அடைகிறாள். ஆனால் பக்கத்தில் வந்த மாப்பிள்ளையைப் பார்த்ததும் நிலை குலைகிறாள். கணவன் திலோக்காவைக் கொன்றவன் அவன் என்று அடையாளம் கண்டு கொள்கிறாள். அவனை மகளின் கணவனாக ஏற்றுக் கொள்வதா, இல்லையா என்ற இக்கட்டான நிலைமையில் அகப்பட்டுக் கொள்கிறாள் ரானு. அதிலிருந்து மீண்டு எடுக்கும் முடிவே அவளைக் கதையிலிருந்து பிரித்து நிஜத்தின் வடிவமாக மாற்றுகிறது.
மிக எளிய கதை. ஆனால் பஞ்சாபி கிராம வாழ்வின் எல்லா நுட்பங்களையும் சேர்த்துக் கொண்டு அசாதாரமான ஒன்றாக இந்தக் கதையை மாற்றி யிருக்கிறார் ரஜீந்தர் சிங் பேடி.அண்ணிக்கும் மைத்துனனுக்குமான உறவின் கதையாகவோ கணவனைக் கொன்ற பணக்காரனை ஏழைப் பெண் பழி வாங்கும் கதையாகவோ எழுதப்பட்டிருந்தால் ஏற்பட்டிருக்கக் கூடிய விரசத்தையும் பிரச்சாரத்தையும் பேடியின் மானுடக் கரிசனம் தவிர்த்திருப்பதே இதை முக்கியமான நாவலாக ஆக்குகிறது.
இந்த நாவலை ஆதாரமாக வைத்துத் தானே இயக்குவதற்கான ஒரு திரைக் கதையையும் பேடி உருவாக்கியிருந்தார். ரானுவாக நடிக்க வைக்க விரும்பிய நடிகை கீதா பாலி மரணமடைந்து விடவே திரைப்பட முயற்சி கைவிடப் பட்டது. 1984 இல் பேடி மறைந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு சுக்வந்த் தாதா இயக்கத்தில் படமாக்கப்பட்டது. ஹேமமாலினி ரானுவாகவும் குல்பூஷண்கர்பாண்டா திலோக்காவாகவும் ரிஷி கபூர் மங்களாகவும் நடித்த படத்தைப் பார்க்க முடிந்தது. பிரபல பத்திரிகையாளர் குஷ்வந்த சிங்கின் நேர்த்தியான ஆங்கில மொழியாக்கத்தில் - ஐ டேக் திஸ் உமன் 'என்ற தலைப்பில் ,நாவலையும் படிக்க முடிந்தது. ஒப்பிட்டுச் சொன்னால், நாவல் பஞ்சாபி கிராம வாழ்க்கையை மனதுக்குள் கொண்டு வருகிறது. சினிமா அசட்டுக் கேளிக்கையாகவே தேங்கி நிற்கிறது.
ஐ டேக் திஸ் உமன் (நாவல்) 2007
உருது மூலம்: ரஜீந்தர் சிங் பேடி
ஆங்கிலத்தில் : குஷ்வந்த் சிங்
ஓரியண்ட் பேப்பர் பேக்ஸ், நியூ டெல்லி.
’தி இந்து’ நாளிதழில் வெளியான புத்தக அறிமுகக் குறிப்பின் சுருக்கப்படாத வடிவம்.
↧
தாகூரின் காதலி
சென்ற ஆண்டு இதே அக்டோபர் மாதம் சுனில் கங்கோபாத்தியாய் மறைந்தார். 'நவீன வங்காள மொழியின் புதிய சுரணையுணர்வை முன் வைத்தவர் என்று பாராட்டப் பட்டவர்சுனில். அவரது வாழ்க்கையும் படைப்புகளுகளும் எப்போதும் சர்ச்சைகளின்மையப் புள்ளிகளாக இருந்தன. உயிருடன் இருந்தபோது உடன் தொடர்ந்த சர்ச்சைகள் அவரது இறப்பிலும் தொடர்ந்தன.தனது இறப்புக்குப் பின்னர் எந்தச் சடங்குகளும்கூடாது என்று முன்னர் அறிவித்திருந்தபடியே அவரது உடல் எரியூட்டப்பட்டது. வெளித் தோற்றத்தில் புதுமை விரும்பிகளும் அடிமனத்தில் மரபுக் காவலர்களாகவும் இருக்கும் பெரும்பான்மை வங்காளிகள் நடுவே அதுவும் சர்ச்சைக்கிடமானது. அவரது எழுதப்பட்ட நாவல்கள் தொடர்ந்து விவாதப் பொருளாக இருந்தன. 'பாதி வாழ்க்கை'( அர்த்தக் ஜீபன்) நாவலில் பெண் கடவுளான சரஸ்வதியைப் பற்றிப் பதின் பருவச் சிறுவன் காணும் கனவுகளைப் பற்றி எழுதியது விவாதப் புழுதியை எழுப்பியது. எழுதப் படாத நாவலும் சர்ச்சைக்குத் தப்பவில்லை. பதினான்கு ஆண்டுகள் வனவாசம் நடத்திய ராமன் - சீதை வாழ்வில் என்ன நடந்தது என்பதைப் பற்றிப் புதிய நாவலில் எழுதவிருப்பதாக சுனில் கங்கோபாத்தியாய் சொன்னது பரபரப்பை மூட்டியது.
சுனில் கங்கோபாத்தியாவைக் கடுமையாக விமர்சிக்கக் காரணமாக இருந்த நாவல் 'ரானு ஓ பானு' . கடவுளரை விமர்சனம் செய்யும் நாவலைப் பொறுத்துக் கொள்ளத் தயாராக இருந்த வங்காளிகள் கடவுளை விட மிகுந்த பக்தியுடன் ஆராதனை செய்யும் தங்கள் மகா கவியைப் பற்றிய நாவலுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தார்கள்.
'ரானு ஓ பானு'என்ற நாவலின் மையப் பாத்திரம் மகா கவி ரவீந்திர நாத தாகூர். தலைப்பே தாகூர் பக்தர்களுக்குக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தங்கள் மகா கவியை மையப் பாத்திரமாகக் கொண்ட நாவலின் தலைப்பு 'பானு ஓ ரானு'என்றுதான் இருக்க வேண்டும். சுனில் கங்கோபாத்தியாய் வேண்டுமென்றே ஒரு சாதாரணப் பெண்ணின் பெயரை முதலில் வைத்திருக்கிறார். இது குருதேவரை அவமதிப்பது என்று சீறினார்கள்.
ஆனால், ரானு என்பது ஒரு சாதாரணப் பெண்ணின் பெயர் அல்ல.
தாகூருக்கிருந்த எண்ணிறந்த தோழிகளில் ஒருவரின் பெயர். பிற பெண்களின் அடையாளத்தையும்பூர்வ கதையையும் கவிஞரின் எழுத்துகளிலிருந்து ஊகிக்க முடியும். நிரூபிக்கவும் முடியும். ரானுவின் பெயரை ஊகிப்பது சிரமம். ரானு தனது பத்தாவது வயதில் அறுபது வயதானதாகூரை முதல் முதலாகச் சந்திக்கிறாள். கவிதை ஆர்வம் ததும்ப நடமாடும் அந்த வெகுளிச் சிறுமி அவரைக் கவர்கிறாள். அந்தச் சந்திப்புக்குச் சிறிது காலம் முன்பு காலமானதனது மகள் மாதுரிலதாவின் பிரதிபலிப்பாகவே ரானுவைக் காண்கிறார். தொடர்ந்து தனது அன்புக் குரியவர்கள் மறைந்து போனதாலும் விலகிப் போனதாலும் மனதுக்குள் காயங்களைத் தாங்கிக் கொண்டு தாகூர் வாழ்ந்த நாட்கள் அவை. பகிரங்கப் படுத்த முடியாத தனிமை உணர்வில் திணறிக் கொண்டிருந்த வரை அவளுடைய அண்மை அவரை ஆறுதல் படுத்துகிறது. அவளுடைய இலக்கிய ஆர்வம் வியப்படையச் செய்கிறது. அவள் தன்மீது கொண்டி ருக்கும் மரியாதை பரவசமளிக்கிறது. பெரும் பான்மையான நாட்கள் சாந்தி நிகேதனில் தன்னுடன் வசிக்கும் ரானு சொந்த ஊரான பெனாரசுக்குத் திரும்பி எழுதும் கடிதங்கள் அவரை குதூகலப் படுத்து கின்றன. தான் இழந்த இளமையை அவள் மூலம் திரும்ப அடைகிறார். சிறுமியாக அவளிடம் தோன்றிய வாஞ்சை அவள் பருவமடைந்த பின்னர் ஏதோ ஒரு கணத்தில் காதலாக மாறுகிறது. ரானுவுக்கும் அப்படியே. உலகம் போற்றும் மகா கவிஞன் தனது புன்னகையில் மெல்லிய ஒளியில் பிறர் கண்ணுக்குத் தென்படாத சுடர் விடுவதைப் புரிந்து கொள்கிறாள். ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் 'கவிஞனுக்கும் தேவதை'க்கும் இடையிலான நெருக்கம் நீள்கிறது. மிகப் பெரும் செல்வந்தரும் தாகூரின் புரவலருமான சர். பிரேன் முகர்ஜியின் மனைவியாகிறாள் ரானு. இருவரிடையே நிலவிய நெருக்கம் மறைகிறது. அந்த மறைவுடன் நாவல் முற்றுப் பெறுகிறது.
தனது நாடகமொன்றில் மையப் பாத்திரத்துக்குத் தாகூர் சூட்டிய பெயர்'பானு சிம்மன்'. அந்தப் பெயரின் சுருக்கமான 'பானு'தான் தலைப்பில் தாகூரின் பெயராகக் குறிப்பிடப் படுகிறது. 'ரானு, தயவு செய்து இனிமேல் என்னை பானு தாதா என்று அழைக்காதே. பானு சிம்மன் என்றென்றைக் குமாகத் தொலைந்து போனான். இனி ஒருபோதும் அவன் திரும்பி வர முடியாது''என்பது இறுதி வாக்கியம்.
சுனில் கங்கோபாத்யாயா தாகூரின் அறியப்படாத காதலைக் கண்டெடுத் திருப்பது கற்பனையிலிருந்தல்ல; உண்மையிலிருந்து. சீமாட்டி ரானு முகர்ஜியின் சுய சரிதையிலிருந்துதான். கையெழுத்துப் பிரதியாகத் திருமதி. ரானு முகர்ஜி வைத்திருந்த தன் வரலாற்றிலிருந்துதான். அந்த வரலாற்றில் இரண்டு மனங்களின் காதல் மட்டுமல்ல; அவர்கள்வாழ்ந்த காலத்தின் நிகழ்விகளும் பதிவாகியிருக்கின்றன. சுனில் கங்கோபாத்தியாய் நாவலின் கதையோட்டத்துக்குக் கொடுத்திருக்கும் அதே முக்கியத்து வத்தை உண்மைநிகழ்வுகளை இணைப்பதில் அளித்திருக்கிறார். தாகூர் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்வது, காந்தியுடன் உரையாடு வது போன்ற சம்பவங்கள் நாவலை உண்மைசார்ந்த கற்பனையாக மாற்று கிறது. உணர்ச்சிகரமான வாசிப்புக்குரிய நாவலைப் படித்து முடித்து மூடும் போது உலகிலுள்ள எல்லா உயிர்களின் துடிப்பு களையும் தன் வாயிலாகவெளிப்படுத்திய பெருங் கவிஞர் மாற்ற முடியாத தனிமையில் அமர்ந்தி ருப்பதையும் அவரைத் தழுவிக் கொள்ள வாசகனின் கை நீளுவதையும் பார்க்கலாம்.
'ரானு ஓ பானு'( வங்க நாவல் ) 2004
சுனில் கங்கோபாத்யாயா
ஆங்கிலத்தில் : ஷீலா சென்குப்தா
வெளியீடு; ஸ்ருஷ்டி பப்ளிஷர்ஸ் அண்ட் டிஸ்டிரிபியூட்டர்ஸ், நியூ டெல்லி
நன்றி: தி இந்து ( 19 அக்டோபர் 2013 )
↧
மதத்தின் கூண்டுகள்
எம்.டி.
மலையாள எழுத்தாளரான எம்.டி. வாசுதேவன் நாயரின் நாவல் 'அசுர வித்து' 1962இல் வெளி வந்தது. சென்ற ஆண்டு நாவலின் பொன் விழா ஆண்டு.அதையொட்டி நாவலின் புதிய பதிப்பும் வெளியிடப் பட்டது. ஒரு புதிய நாவலுக்குக் கிடைக்கும் வாசக வரவேற்புடன் பொன்விழாப் பதிப்பும் விற்றுத் தீர்ந்தது. ஒரு நாவல்ஐம்பது ஆண்டுகளாக வாசக கவனத்தில் நீங்காமல் இருக்கிறது என்பதும் இன்றும் வாசிக்கப்படுகிறது என்பதும் எந்த இலக்கிய ஆர்வலனுக்கும் மகிழ்ச்சியளிக்கும். அதே சமயம், நாவல் கையாண்டிருக்கும் மையப் பிரச்சனை நிகழ்காலத்துக்கும் பொருந்துவதாக இருப்பது அவ்வளவு உற்சாகமூட்டக் கூடியதல்ல.'அசுர வித்து'நாவல் முன் வைக்கும்மானுடச் சிக்கல் இன்றும் தீராத ஒன்றாக இருப்பது துயரத்தையே தருகிறது.
'அசுர வித்து'நாவலின் மையப் பாத்திரம் கோவிந்தன் குட்டி. ஒரு நாயர் குடும்பத்தின் இரண்டாவது வாரிசு. அண்ணன் குமாரன் தன்னுடைய திருமணத்துக்குப் பிறகு மனைவிவீட்டோடு போய்ச் சேர்ந்ததோடு அல்லாமல் குடும்ப நிலத்தை அடகு வைத்துக் கடன்படச் செய்வதில்குடும்பம் வீழ்ச்சியடையத் தொடங்குகிறது. விதவையான மூத்த சகோதரி, திருமணத்துக்குக் காத்திருக்கும் இன்னொரு சகோதரி, தங்களது அவல நிலையை ஓயாமல் புலம்பிக் கொண்டிருக்கும் அம்மா - இவர்களுக்கிடையில் அன்றாட வாழ்க்கையைநகர்த்திச் செல்லத் திணறுகிறான் கோவிந்தன் குட்டி. அந்தத் திணறலுக்கு இடையில் அவனுக்கு வாய்க்கும் ஒரே ஆறுதல் அவனுடைய நண்பன் குஞ்ஞரைக்கார் மட்டுமே. முஸ்லிம்களைக் கண்டாலே வெறுப்பில் பிதுங்கும் சேகரன் நாயர் கோவிந்த குட்டியின் இளைய சகோதரியை மணந்து கொள்கிறார். தன்னுடைய செல்வத்தையும் செல்வாக்கையும் பாதுகாக்க அவர் கடைப்பிடிக்கும் உபாயங்களில் ஒன்று சொந்த சாதிக்காரர்களைத் தன்னுடன் அணிவகுத்து நிறுத்திக் கொள்வது. அதன் மூலம் கிராமத்தில் முளைவிடும் முஸ்லிம் செல்வாக்கைக் கிள்ளி எறிவது. கோவிந்தன் குட்டி இதை எதிர்க்கிறான். இந்த எதிர்ப்பு சேகரன் நாயரிடம் அவன் மீதான பகையாக வடிவெடுக்கிறது. சேகரன் நாயர் வீட்டில் குற்றேவல்கள் செய்யும் மீனாட்சியை மணந்து கொள்கிறான் கோவிந்தன் குட்டி. மண நாள் இரவில் அவள் கர்ப்பிணியாக இருப்பது தெரியவருகிறது. சேகரன்நாயரின் மகனே அதற்குக் காரணம் என்று தெரிந்து கொள்ளும் கோவிந்தன் குட்டி அவனைத் தாக்குகிறான். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்லாம் மதத்தைத் தழுவுகிறான்.சேகரன் நாயர் பதிலுக்கு ஆட்களை வைத்து அவனைப் பழி வாங்குகிறார். ஒரு இந்து நாயரை அடிக்கத் தயங்கிய சேகரன் நாயருக்கு இப்போது முஸ்லிமை அடித்து விரட்டுவது நியாயமானதாகப் படுகிறது. நண்பனாக குஞ்ஞரைக்காரும் ஒரு புதிய முஸல்மானைக் காப்பாற்றத் தயங்குகிறார்.உயிர் தப்ப ஓடும் கோவிந்தன் குட்டி கரை புரண்டு ஓடும் ஆற்றில் குதிக்கிறான். பெரு வெள்ளத்தில் விழுந்தவன் இறந்து விட்டதாக ஊர் முடிவு கட்டுகிறது.
வேறொரு கிராமத்தில் கரை மீளும் கோவிந்தன் குட்டி அங்கே அகதியாக வாழ்கிறான். சொந்த துக்கங்கள் அவனைக் குடிகாரனாக்குகிறது. இரண்டு மதப் பிரிவுகளாலும் கைவிடப்பட்ட அப்துல்லா என்ற கோவிந்தன் குட்டி மீண்டும் தனது சொந்த கிராமமான கிழக்கேமுறிக்கே திரும்புகிறான். பிளேக் பரவி கிராமம் முழுவதும் ஆட்கள்பலியாகிறார்கள். இறுதிச் சடங்கு செய்யக் கூட ஆளில்லாமல் குவிந்து கிடக்கும் சடலங்களை அப்புறப்படுத்த உதவுகிறான். பிணக் குவியலில் அவன் கண்டெடுக்கும் ஒரு சடலம் மனைவி மீனாட்சியுடையது. அருகில் அநாதையாக அழுது நிற்கும் குழந்தை. தான் கோவிந்தன் குட்டி நாயரா இல்லை அப்துல்லாவா என்று குழம்புகிறான் அவன்.தான் இந்துவா முஸ்லிமா என்று தடுமாறுகிறான். இரண்டும் இல்லாத இடத்துக்குப் போக அந்த ஊரை விட்டுப் புறப்படுகிறான். ''திரும்ப வருதற்கான யாத்திரை''என்று மனதுக்குள் சொல்லிக் கொள்கிறான்.
முந்நூற்று ஐம்பது பக்க நாவலை இரண்டு பத்திகளில் சொல்வது கடினம். அதை விடவும் கதையாகச் சொல்வது கடினம். அதுவும் நாவல் வெறும் கதை சொல்லும் சாதனமல்ல;அது வாழ்க்கைப் பார்வையை முன்வைக்கும் ஊடகம் என்று நம்பும் ஓர் எழுத்தாளின் படைப்பைச் சுருக்கிச் சொல்வது இன்னும் கடினம். எம். டி.யின் நாவல்கள் நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியல்ல; வாழ்க்கை நிகழ்வை முன்வைத்து பாத்திரங்கள் மேற்கொள்ளும் உளவியல் நடவடிக்கைகள் அவை. அசுரவித்து நாவலின் 'கதை'யும் அது போன்றதே.
இந்து மதப் பின்னணியில் பிறந்த ஒருவன், தனது வாழ்க்கை ஆபத்துக் குள்ளாகும் போது இஸ்லாமிய மார்க்கத்தில் அடைக்கலம் தேடுகிறான். அங்கும் அவன் கைவிடப் படுகிறான்.எனில், மதம் என்பது மனிதனின் எந்தத் தேவையை நிறைவேற்றுகிறது என்ற கேள்வியைத்தான் இந்தக் கதை எழுப்புகிறது.
இரண்டு காரணங்களுக்காக இந்த நாவல் இன்றும் விரும்பி வாசிக்கப் படுகிறது. பழைய கால பாலக்காடு, பொன்னானி வட்டாரங்களின் மொழியையும் சமூக நடைமுறைகளையும்மிக இயல்பாகச் சித்தரிக்கிறது நாவல். நாயர் சமூகத்தின் மொழியும் முஸ்லிம் சமூகத்தின் மொழியும் இவ்வளவு கச்சிதமாகக் கையாளப்பட்ட வேறு மலையாள நாவல் இது என்பது முதல் காரணம். இரண்டாவது காரணம்: நாவலின் மையம் தொட்டுக் காட்டும் மதம் சார்ந்த மனிதச் சிக்கல் இன்றும் நிலவுகிறது என்பது.
அசுரவித்து நாவலின் பொன்விழாப் பதிப்பு வெளியீட்டின்போது எம். டி. குறிப்பிட்டார் ''என்னுடையமுப்பதுக்கும் குறைவான வயதில் இந்த நாவலை எழுதினேன். இப்போது எண்பது வயதை நெருங்குகிறேன். ஐம்பது ஆண்டுகளாக இந்த நாவல் வாசிக்கப்படுகிறது என்பது எழுத்தாளனாக எனக்குப் பெருமை. ஆனால் ஐம்பது ஆண்டுகளாக , இந்துவும் முஸ்லிமுமல்லாத மனிதர்களின் இடத்தைத் தேடும் கோவிந்தன் குட்டியின் யாத்திரை முடியாமலே இருக்கிறது என்பது என்னுடைய அந்தரங்க துக்கம்''. வாசித்து முடிக்கும்போது கோவிந்தன் குட்டியின் எதிர்பார்ப்பும் எம்.டியின் துக்கமும் வாசகனின் ஆசையும் வருத்தமுமாகமாறுகிறது என்பதே 'அசுரவித்'தின் மேன்மை.
அசுர வித்து ( மலையாள நாவல் - பொன் விழாப் பதிப்பு 2012)
எம். டி. வாசுதேவன் நாயர்
தி இந்து நாளிதழில் வெளியானது.
↧