Quantcast
Channel: வாழ்நிலம்
Viewing all articles
Browse latest Browse all 181

மது

$
0
0


கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த அட்டப்பாடி வனப்பகுதியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர் மது கொல்லப்பட்டார். கொல்லப்படக் காரணம் அவர்  திருட்டுச் செயலில் ஈடுபட்டார் என்பதே.




மேற்கு மலைத்தொடர் வனப்பகுதியில் பவானி ஆற்றங்கரையிலுள்ள புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஊர்களில் ஒன்றான  கடுகுமண்ணா பழங்குடிக் கிராமத்தைச் சேர்ந்த  மல்லியின் மகன் மது. அடுத்த ஊரான சிண்டக்கியில் உள்ள ஆதிவாசிகளுக்கான பள்ளியில் நான்காம் வகுப்புவரை படித்தவர். மனநலம் குன்றியவர். அதனாலேயே ஊருக்குள்  இருப்பதை விரும்பாமல் பாறை இடுக்குகளிலும் சிறு குகைகளிலுமாகப் பதுங்கி வாழ்ந்தார். கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி மரணம்டையும் நாள்வரை ஒன்பது ஆண்டுகளாகத் தாயோ சகோதர சகோதரிகளோ அவரைப் பார்த்ததுமில்லை. பசிக்கும்போது குகையைவிட்டு வெளியேறும் மது கடைகளிலிருந்து பொருள்களைத் திருடிக் கொண்டு குகைக்குத் திரும்புவார். இந்தப் பட்டினிக் களவுதான் அவரது உயிரைப் போக்கியது. அப்படி அவர் திருடியது ஆடம்பரப் பொருளையோ, பணத்தையோ, நாட்டின் பாதுகாப்பு ரகசியத்தையோ,  வங்கிப் பணத்தையோ அல்ல.துச்ச விலைக்கு நம்மால் வாங்க முடிகிற அரிசியும் வெங்காயமும் மஞ்சள் தூளும் மல்லித் தூளும். பசியாற்றிக் கொள்வதற்காக மது திருடியதாகச் சொல்லப்படும்  இவற்றுக்காக அந்த இளைஞர் ஊர்க் காரர்களால் கட்டி வைத்து அடிக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தாக்குதலால்   மரணம் நிகழ்ந்திருக்கிறது. ஆக இது ஊர் கூடிச் செய்தகொலை.

சொற்பக் காசுக்கு நம்மால் வாங்கி விடக் கூடிய பொருள்களை வாங்கக் காசில்லாததாலேயே மது அவற்றைத் திருட நேர்ந்திருக்கிறது. பொருளாதார நிறைவு பெற்றதாகச்  சொல்லப்படும் நாட்டில் பசிக்காக ஒருவனைத் திருடத் தூண்டியது யார்திருடப்பட்டதாகச் சொல்லப்பட்ட பொருள்கள் திருடனின் கையிலிருந்து பறிமுதல் செய்யப்படவில்லை. மாறாக அவன் தங்கியிருந்த இடத்திலிருந்து எடுத்து வரப்பட்டன. அவை திருட்டுப் பொருள்கள்தான் என்பதற்கு என்ன ஆதாரம்? இவற்றையெல்லாம் விடக் கோரமானது மது என்ற ஆதிவாசி இளைஞனை நாகரீக சமூகத்தை நடத்திய விதம். அவர் தங்கியிருந்த குகைக்கு ஊர்வலமாகச் சென்ற கூட்டம் அவனிடமிருந்த களவுப் பொருள்களை மீட்டன.  குற்றவாளியான மதுவின் கைகளில் கற்களும் பாறைத் துண்டுகளும் நிரப்பிய பையைக் கொடுத்து  முக்காலி என்ற இடத்தின் நாற்சந்திவரை நடக்க வைத்தது. ஊர்கூடி  உடுத்திருந்த வேட்டியை உருவி அவர் கைகளைக் கட்டிவைத்து அடித்தது. மனநலம் குன்றிய அந்த அப்பாவியை விசாரணை செய்து அந்தப் பெரும் நிகழ்வை கைப்பேசியில் படம் பிடித்து சமூக  வலைத்தளத்தில் பதிவேற்றி வெற்றியைக் கொண்டாடியது. கையில் சுமையுடனும் சரமாரியாக விழுந்த அடியாலும் துவண்டு போன மது ஜீப்பில் காவல்நிலையத்துக் கொண்டு  செல்லும் வழியிலேயே உயிரை இழந்தார். இந்தப் பாதகச் செயலில் ஈடுபட்டவர்கள் என்று தெரிய வந்த பதினாறு பேர் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்.

''இதுபோன்ற மிருகத்தனமான செயல்கள் அறிவார்ந்த சமூகத்துக்குப் பொருத்தமானது அல்ல; நாம் நாகரீக சமுதாயமாக மேம்பட்டு விட்டோம் என்கிறொம். ஆனால் நடந்தி ருக்கும் நிகழ்ச்சி நம்மை நாகரீகமானவர்களாகக் காட்டவில்லை. இது கேரளத்துக்கு அவமானம்''  மது என்ற ஆதிவாசி இளைஞரின் படுகொலையைக் கண்டித்து கேரள முதல்வர்  பிணராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையின் வாசகங்கள் இவை.ஏறத்தாழ கேரளத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள்,பொதுமக் கள் உட்பட எல்லாத் தரப்பினரும் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக மதுவின் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்திருக் கிறார்கள்; முதல்வர் சொன்னதுபோலவே அவமானத்தை உணர்ந்திருக் கிறார்கள்; அதன் கசப்பைப் பகிர்ந்து விழுங்கியிருக்கிறார்கள். 

இத்தகைய செயல்கள் அவமானத்துக்குரியவை என்று தெரிந்தே  கேரளத்தின் நாகரிக சமூகம் அவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக ஆதிவாசிகள் மீதான பொதுச்  சமூகத்தின் பார்வை மனித இணக்கத்துக்கு முற்றிலும் எதிரானது. ஆதிவாசிகள் தொடர்ந்து எல்லா வகையிலும் துன்புறுத்தப்படுகிறார்கள். அவற்றில் வெளித்தெரிய வந்த  சம்பவங்களில் ஒன்றுதான் மதுவின் படுகொலை. நாகரிக சமூகத்தின் கௌரவச் சின்னமான கைப்பேசிப் பழக்கம் இங்கு அதன் அநாகரீகச் செயலுக்குச் சாட்சியானது என்பது கவனத்துக்குரிய முரண். அடுத்தவரின் துயரையும் அந்தரங்கத்தையும் கேளிக்கைப் பொருளாக்கும் நவீன மன்நிலையின் உதாரணமும் கூட.

கொல்லப்பட்ட மதுவல்ல ; பொது சமூகமே திருட்டில் ஈடுபட்டது. அட்டப்பாடி வனப் பகுதியைச் சேர்ந்த ஆதிவாசி ஊர்களின் மேம்பாட்டுக்காக அரசு ஒதுக்கிய தொகை ஒவ்வொரு ஆதிவாசிக்கும் பிரித்துக் கொடுக்கப் பட்டிருக்கு மானால் ஒவ்வொரு ஆதிவாசிக்கும் குறைந்தது ஒன்றரை லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும் என்று புள்ளி  விவரங்கள் சொல்கின்றன. அது நடைமுறைப் படுத்தப்பட்டிருக்குமானால் நூறு ரூபாய்க்கும் குறைவான அற்பத் தொகை வரும் பொருள்களுக்காக அந்த இளைஞன் திருட்டில்  ஈடுபட்டிருக்க மாட்டான். அவனுக்குக் கிடைத்திருக்க வேண்டிய பல நூறு ரூபாய்களை அபகரித்த பொதுச் சமூகம்தானே பெரும் கொள்ளைக் கூட்டம்? படிப்பறிவோ உலக ஞானமோ  இல்லாத அந்த மக்கள் இதைக் கேட்கவில்லை; கேட்க அனுமதிக்கப்படவில்லை என்பதும் தெளிவு. நாகரிகம் என்பது சக மனிதனையும் தன்னைப்போலக் கருதும் பரந்த  மனநிலை என்பது மாறிவிட்டிருக்கிறது. அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் இவற்றில் ஏதோ ஒன்றின் அதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது; அதை வலுக்குறைந்தவர்கள் மீது  பிரயோகிப்பதே நாகரிகம் என்ற புதிய அர்த்தத்தை சமூகம் கடைப்பிடிக் கிறது. இந்தக் குற்றக் கலாச்சாரத்தின்  இரைதான் மது.

மதுவின் மரணம் சமூக ஊடகங்களின் உபயத்தால் வெளியுலகுக்குத் தெரிய வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அனுதாபத்தைப் பெற்றது. ஆதிவாசிகள் மீதான அத்துமீறல் நடவடிக்கைகளில் முதன் முதலாகக் குற்றவாளிகளைச் சட்டப்படி தண்டிக்க உதவியது. நல்லது. ஆனால் இது தனித்த நிகழ்வு அல்ல. தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொடுமைகள்  அதிகம் தெரிவதில்லை. இன்று மதுவின் படுகொலைக்குக் கண்டனம் தெரிவிக்கும் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இந்த அத்துமீறலில் பங்கு இருக்கிறது. அவர்களை உள்ளிட்ட்  பொதுச் சமூகத்தின் பார்வையை அவர்களே உருவாக்கினார்கள். ஆதிவாசி உதாசீனப்படுத்தப்படும் சூழலை அவர்களே உருவாக்கினார்கள். காரணம், அரசியல்.கேரளத்தின்  மக்கள் தொகையில் ஒரு சதவீதத்துக்கும் குறைவு பழங்குடிகளின் தொகை. அவர்கள் ஓட்டு வங்கிகள் அல்லர். எனவே அவர்கள் சார்பில் சிந்தப் படும் கண்ணீர் போலியானது. அவர்கள் மேம்பாட்டுக்காக பல் கோடி ரூபாய்கள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் இன்னும் ஆதிவாசிகள் வறுமைக் கோட்டுக்குக் கீழேயே இருக்கிறார்கள். அந்தத் தொகை என்ன  ஆயிற்று? அதை அந்த அப்பாவிகள் கேட்பதில்லை. வனவாசிகளான அவர்களின் நிலம் அவர்களிடமிருந்து அபகரிக்கப்பட்டது. நிலத்தை இழந்த அவர்கள் வாழ்வு தடுமாற்றத்துக்குள்ள்ளானது. அவர்களுக்கான நிலம் மீட்டெடுக்கப்படவே இல்லை. தொடர்ந்து போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டாலும் பலன் விளையவில்லை. வாழ்விடமும்  பறிபோய், ஜீவ ஆதாரமான கானக விளைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமையும் இழந்தவர்கள் பசிக்காகத் திருடுவது எப்படிக் குற்றமாகும்?

சற்று விளக்கமாகவே பார்க்கலாம். 1975ஆம் ஆண்டு பிறரால் கையகப் படுத்தப்பட்ட பழங்குடியினரின் நிலங்களைத் திரும்பப்பெற சட்ட முன்வரைவு உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்தே அரசியல் கட்சிகளும் அவ்வபோது அதிகாரத்தில் இருந்த அரசுகளும் பொது சமூகமும் ஆதிவாசிகளை ஏமாற்றத் தொடங்கின. வரைவு தயாரிக்கப்பட்டு பதினோரு  ஆண்டுகளுக்குப் பின்னரே அது சட்டமாக இயற்றப்பட்டது. அதன் படி 1960 - 82ஆண்டுகளுக்கு இடையில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீட்டு ஆதிவாசிகளுக்கு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் சட்டத்தை அமல்படுத்துவதில் நடை முறைச் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி அரசு அதைக் கிடப்பில் போட்டது. பழங்குடித் தலைவர்கள் சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். எவ்வளவு விரைவில் சட்டத்தை அமல்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவில் செய்ய வேண்டும் என்று நீதிமன்றமும் தெரிவித்தது. ஆனால் பொதுச் சமூகத்தின் நலன் கருதி 1992சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆதிவாசிகளிமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டவற்றில் இரண்டு ஹெக்டேருக்கு அதிகமான பரப்புள்ள நிலத்தை மட்டுமே மீட்கலாம் என்று திருத்தப்பட்டது. இது ஆதிவாசிகளை ஏய்ப்பதற்கான தந்திரம். இரண்டு ஹெக்டேருக்கு அதிகமுள்ள நிலங்களைக் குடியேற்றக்காரர்கள் துண்டுபோட்டு உறவினர் களுக்கும் பினாமிகளுக்கும் பிரித்துக் கொடுத்தனர். பொதுச் சமூகம் சட்டத்தை மிகச் சாமர்த்தியமாக வளைத்த சம்பவம் இது. தொடர்ந்து வழக்குகளும் எதிர் வழக்குகளுமாகக் காலம் கடந்தது. கானக மண்ணே தங்களது வாழ்வும் வளமும் என்று நம்பும் பழங்குடியினர் கை பிசைந்து நின்றனர். 1999இல் முன்னர் தீர்மானித்தபடியே இரண்டு ஹெக்டேருக்கும் அதிகமான நிலத்தை மீட்டு ஆதிவாசிகளுக்குப் பகிர்ந்து அளிப்பது என்ற அரசின் முடிவுக்கு வேறு வழியின்றி ஆதிவாசிகளும் ஒப்புக் கொண்டனர். ஆனால் அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. தங்கள் கோரிக்கைக் காக அதிவாசிகள் தொடர்ந்து  போராடினார்கள். வயநாட்டிலுள்ள முத்தங்ங, ஆரளம் , செங்ஙரா, அரிப்பா, பொ ட்டஞ்சிற என்று வனப் பகுதிகளில் தொடர்ந்த போராட்டங்கள் அவ்வப்போது இருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அரசுகளால் முறியடிக்கப்பட்டன; புறக்கணிக்கப்பட்டன.

பழங்குடி மக்களுக்குரிய நிலத்தை அவர்களுக்கு அளிப்போம் என்று கேரளத்தின் இரு முன்னணிகளும் வாக்குறுதி அளித்துக் கொண்டே இருக்கின்றன. தங்களுக்கான குடிமைச்  சலுகைகள் பாதிக்கப்படும்போது ஓலமிடும் மலையாளிப் பொதுச் சமூகம் ஆதிவாசிகளுக்கான மண்¨ணை ஏன் திருப்பிக் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்புவதில்லை. அப்படிக் கேள்வி கேட்பது தங்களுக்குப் பாதகமாகும் என்ற சுயநலமே அந்தக் கபட மௌனத்துக்குக் காரணம். ஒருவேளை சிறிய அளவிலாவது ஆதிவாசி பூமி அவர்களுக்குத் திரும்பக் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற எண்ணமே காரணம் என்று வைத்துக் கொண்டாலும் இன்னொரு கேள்வி எழுகிறது. அப்படி நிலத்தைப் பெற்ற பிறகும் ஆதிவாசிகள் ஏன்  இன்னும் வறுமையில் பிடியில் சிக்கியிருக்கிறார்கள்அந்த வறுமையின் அடையாளம்தானே கொல்லப்பட்ட மது என்ற ஆதிவாசி இளைஞர்? இந்தக் கேள்விகள் அபாயகரமானவை. அவற்றுக்குக் கிடைக்கும் பதில்கள் அப்பாவிப் பழங்குடிகளைப் பொதுச் சமூகம் சுரண்டி வாழ்கிறது என்ற உண்மையை அம்பலாமாக்கும். இது கேரளத்தின் ஆதிவாசிகளின்  நிலை மட்டுமல்ல. இந்தியா முழுவதிலும் ஆதிவாசிகள் எதிர்கொள்ளும் அவலம். இந்த நூற்றண்டிலும் நாகரீகமடைந்த பொதுச் சமூகம் அவர்களைக் கீழானவர்களாகவே கருதுகிறது. தனக்குச் சமமானவர்களாக அவர்கள் ஆகி விடக்  கூடாது என்று அஞ்சுகிறது. அதனாலேயே அவர்களிடமிருந்து மண்ணைப் பிடுங்குகிறது; உணவைப் பறிக்கிறது; உரிமைகளைக் களவாடுகிறது; உயிரையும் எடுக்கிறது. இந்தச் செயல்களுக்கெல்லாம் நாகரீகம் என்று பெயரும் சொல்லிக் கொள்கிறது. இந்த நாகரீக மேம்பாட்டின் இப்போதைய களப் பலி அட்டப்பாடி மது. நாளை இன்னொருவராக இருக்கலாம். ஏனெனில் அந்தக் காட்டுமிராண்டிகளை அழிப்பதுதானே நாகரீக வளர்ச்சி.

@

 அந்திமழைமார்ச் 2018 இதழில் வெளிவந்திருக்கும் கட்டுரை.
சிற்பம்: டாவின்சி சுரேஷ் , கொடுங்ஙல்லூர்.




Viewing all articles
Browse latest Browse all 181

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>