Quantcast
Channel: வாழ்நிலம்
Viewing all articles
Browse latest Browse all 182

சென்ற காலத்தின் நிலப்படம்

$
0
0


"The memory of the heart eliminates the bad and magnifies the good; thanks to this artifice, we are able to bear the past."                                                                                                                                           Gabriel Garcia  Marquez




 பிறந்த ஒன்பதாம் மாதத்திலிருந்து ஒன்பது, பத்து வயதுவரை நிரந்தரமாகவும் கல்லூரிப் பருவம்வரை அவ்வப்போதும் நான் வசித்த ஊர் நீலகிரி மாவட்டத்திலுள்ள 'வெல்லிங்டன்' .  இந்திய ராணுவத்தின் மிகப் பழைமையான பிரிவும் பாதுகாப்புச் சேவைப் பணியாளர் கல்லூரியும் அமைந்துள்ள இடம் என்பதைத் தவிர இந்தச் சின்ன ஊருக்குக்குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்த  வேறு எந்தப் பெருமையும் இல்லை. சாதாரண மனிதர்களின் எளிய இடம். எனினும் எனது நினைவுகளில் இந்தக் குறுநிலமே துல்லிய மாகப் பதிந்திருக்கிறது. 'உங்கள் சொந்த ஊர் எது ? என்று யாராவது கேட்டால் 'வெல்லிங்டன்என்று பதில் சொல்லவே பெரும்பாலும் விரும்பியிருக்கிறேன். அப்படிச் சொன்ன பிறகு அதைப் பற்றிய புவியியல் விவரங்களையும் சொல்லி விளக்கநேரும் சங்கடங்களை எண்ணிச் சொல்லாமல் விட்டிருக்கிறேன். அந்தத் தருணங்களில் 'நான் பிறந்த இடம்தான் என் ஊரா? நான் மிக விரும்பும் நிலந்தானே சொந்த ஊர்? 'என்று மனதுக்குள் சொல்லிக் கொள்வேன். விவரம் தெரிந்த பருவம்வரை, நூற்றுக்கணக்கான முறை அந்த ஊருக்குப் போய் வந்திருக்கிறேன். ஒரு காலப் பகுதியில் அலுவல் நிமித்தமாக நீலகிரி மாவட்டத்தின் எல்லாத் திசைகளிலும் அலைந்து திரிந்திருக்கிறேன்.
சரணாலயத்துக்கு வரும் பறவை போல,  இந்த மலைநகரத்துக்குத் திரும்பத் திரும்ப வருகிறேன்'என்று ஏக்க உணர்வுடன் எழுதவும் செய்திருக்கிறேன். அதன் பின்னர் வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்திருக்கிறேன். அந்தப்புதிய சித்திரங்களின் அடுக்கில் வெல்லிங்டன் நிலப்படம் மனதின் அடித்தட்டுக்குச் சென்று விட்டது. ஆனால், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறு நிகழ்ச்சி, வெல்லிங்டன்இன்னும் எனக்குள் வாழ்கிறது என்ற உண்மையை உணர்த்தியது.

தமிழ் - மலையாளக் கவிஞர்களின் சந்திப்பு நிகழ்ச்சியொன்றைப் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் உதகமண்டலத்திலுள்ள ஸ்ரீநாராயண குரு குலத்தில் 2008மே மாதம் முதல் வாரம் நடத்தினார். அந்த மூன்று நாள் நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன். முதல் நாள் மாலை, ஊட்டியைச் சுற்றிப் பார்க்க விரும்பிய மலையாளக் கவிஞர்களானகல்பற்றா நாராயணன், பி. ராமன் இருவருக்கும் ஊரைச் சுற்றிக் காட்டும் வேலையை வலிய ஏற்றுக் கொண்டேன். ஊட்டியின் பிரசித்தமான இடங்களை அவர்களுக்குக் காண்பித்துஅவற்றை பற்றிய பின்னணி விவரங்களை உற்சாகமாகத் தெரிவித்தேன். இந்த இடங்கள் இன்னும் என் மனதுக்குள் இருக்கின்றன; இவை தொடர்பாக இத்தனைத் தகவல்கள் எனக்குள் மங்காமல் இருக்கின்றன என்பதை அப்போதுதான் கண்டு பிடித்தேன். உதகமண்டலம் உருவான வரலாற்றையும் அந்த நகரத்தை  உருவாக்கிய ஜான் சல்லிவனின்வாழ்க்கை பற்றியும் கவிஞ நண்பர் களிடம் ஆர்வத்துடன் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர்களுக்கு அது எந்த அளவுக்கு சுவாரசியமாக இருந்தது என்று தெரியவில்லை. ஆனால்நான் உள்ளுக்குள் சிலிர்ப்புடன் சொன்னேன் என்பதும் அதைக்  கொண்டாடிக் கொள்ளும் விதமாக உதகை கமர்சியல் சாலையில் இருந்த பழங்காலத் தேநீர் விடுதியான ஈரானீஸ் ரெஸ்டாரெண்டில் ஒரே இருப்பில் மூன்று குவளைத் தேநீரைப் பருகிய உற்சாகக் கொந்தளிப்பும் நினைவிலிருந்து விலகவில்லை. அந்த அற்புதப் பொழுதின் ஏதோ நொடியில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த  ஜான் சல்லிவன் எனது நிகழ்காலக் கதாபாத்திரமாக மாறியிருக்க வேண்டும்.

நிகழ்ச்சி முடிந்து திருவனந்தபுரம் திரும்பியதும் நாவலின் முதல் அத்தியாயத்தை எழுதினேன். எழுதத் தொடங்கியபோது இருந்த திட்டத்தின்படி ஜான் சல்லிவன் ஒரு அத்தியாயத்தில் மட்டுமே வரக் கூடிய பாத்திரம்.ஆனால் எண்ணப் போக்கில் அவர் வளர்ந்து  பல அத்தியாயங்களிலும் நடமாகக் கூடும் என்ற யூகம் வலுத்தபோது எழுத்து வேலையைக் கைவிட்டேன். நான் எழுத விரும்புவது சல்லிவனைப் பற்றிய நாவலோ உதகமண்டலத்தைப் பற்றிய ஆவணப்பதிவோ அல்ல. நான் செய்ய விரும்புவது ஒரு பகிர்வை.வெல்லிங்டன் வாழ்க்கை பற்றிய எனது உணர்வுகளை. எனவே நாவல் எழுதும் எண்ணத்தை விட்டேன். நான்கு  மாதங்கள் கடந்தன. இந்த நான்கு மாதக் காலமும் நாவலைப்பற்றிய கனவும் வெல்லிங்டன்பற்றிய ஏக்க உணர்வும் என்னைப் பின் தொடர்ந்தன. மீண்டும் தொடங்குவதற்கு முன்பு சில தீர்மானங்களைச் செய்து கொண்டேன். எந்தத் திட்டமும்இல்லாமல் எழுதிச் செல்வது. நான் கண்டதையும் கேட்டதையும் உணர்ந்தையும் உணராமல் விட்டதையும் இயல்பான போக்கில் பதிவு செய்வது. நானாகக் கதையின் போக்கில் குறுக்கிடுவதில்லை. தானாக உருவாகும் கதையையே முன்வைப்பது. இவை தீர்மானங்கள். இந்தத் தீர்மானங்கள்  தந்த சுதந்திரத்தில்  எழுத்து  தன்னிச்சை யாகவே வளர்ந்தது. சல்லிவனின் கண்டுபிடிப்பும் நீலகிரியில் படகர் குடியேற்றமும்  வெல்லிங்டன் உருவான விதமும்  பின்புலமாக இயல்பாகவே எழும்பின. குறுக்கீடு கூடாது என்ற சுயக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தபோதும் எழுதத் தூண்டிய உள் நோக்கத்தைத் தவிர்க்கவில்லை. அது, நான் வாழ்ந்த வாழ்க்கையை, நான் கண்ட மனிதர்களை மீட்டெடுப்பது என்பதே.

இந்த ஆயுளில்   அடைந்த அனுபவங்களில் மிக அணுக்கமான வாழ்வும் கண்ட மிக மேலான மனிதர்களும் வெல்லிங்டனில் வாய்த்தவையே என்று நம்பினேன். அந்த வாழ்வைமறுபடியும் வாழ்ந்து பார்க்கவும் அந்த மனிதர்களுடன் மீண்டும் உறவு கொள்ளவும் விரும்பினேன். காலம் பின்னகர்த்திய வாழ்வையும் மனிதர்களையும் நடைமுறையில்  திரும்பப் பெற இயலாது. ஆனால் எழுத்தின் மூலம் முடியும். அதற்காக எத்தனித்ததன் விளைவே இந்த நாவல். இதை நான் எழுதினேன் என்பது மிகை. என்னால் எழுதப்பட்டது என்பதே பொருத்தமானது.

( சென்னை புக் பாயிண்ட் அரங்கில் 2014 ஜனவரி 4 ஆம் தேதி வெளியிடப்படவிருக்கும்
என்னுடைய நாவல் ‘வெல்லிங்ட’னுக்கு எழுதிய பின்னுரையின் பகுதி இது. நாவல் காலச்சுவடு பதிப்பக வெளியீடு)


நிழற்படம்: தத்தன் புனலூர்

Viewing all articles
Browse latest Browse all 182

Trending Articles